ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்- மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு!!
மணிப்பூர் விவகாரம், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விவாதம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவுகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் சில முக்கிய மதோக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவ்வகையில், மக்களவையில் இன்று கடும் அமளிக்கிடையே ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை காலை 11 மணிக்கு இனி மக்களவை கூடும். ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 27ம்தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. மாநிலங்களவையில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தினர். இதனால் அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.