;
Athirady Tamil News

சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர்களை தயார் செய்யும் தமிழர் – யார் இவர்?

0

கோப்பை வெல்லும் கனவோடு சென்னை வந்திறங்கிய, பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டியிருகிறார் தமிழர் ஒருவர். விசா பிரச்னை காரணமாக பிசியோதெராபிஸ்ட் (Physiotherapist) இல்லாமல் வந்திருக்கிறது பாகிஸ்தான் அணி. ஃபிசியோ இல்லாமல், போட்டியிலேயே பங்கேற்க முடியாத சூழல் . பல மாத கால வீரர்களின் உழைப்பு கேள்விக்குறியான போது, அவர்களின் கவலைகளுக்கு மருந்தளித்திருக்கிறார் இந்த தமிழர்.

சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கிய இந்த தொடர், ஆகஸ்ட் 12ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அடாரி வாகா எல்லை வழியாக ஜூலை 31ம் தேதி இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி, பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட விசா பிரச்னையால் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பிசியோதெராபிஸ்ட்டால் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை.

எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென ஃபிசியோதெரபிஸ்டை வைத்துக்கொள்வர். ஒவ்வொரு போட்டியும் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல் அதில் பங்கேற்கும் வீரர்களின் உடற்தகுதியும் முக்கியமான விஷயம். வீரர்களின் உடல்நிலை, அவர்களுக்கு காயம் ஏற்படும்போது தகுந்த சிகிச்சையளிப்பது, உடல் தகுதியை மேம்படுத்துவது உள்ளிட்டவை ஃபிசியோதெராபிஸ்ட்களின் முக்கிய பணியாகும். சர்வதேச தொடர்களில் ஃபிசியோதெராபிஸ்ட் இருந்தால் மட்டுமே ஒரு அணியால் போட்டிகளில் பங்கேற்க முடியும்
தவித்த பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழர்

கடைசி நேரத்தில் தங்களின் ஃபிசியோதரபிஸ்டை பாகிஸ்தான் அழைத்து வர முடியாமல் போனது அந்த அணிக்கு நெருக்கடியாக மாறியது. இது தமிழ்நாடு ஹாக்கி கூட்டமைப்பின் கவனத்திற்கு வரவே, தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு பரிட்சயமான ராஜகமலை பாகிஸ்தான் அணிக்கு அறிமுகம் செய்து வைத்தது. உடனடியாக பாகிஸ்தான் அணியின் மேலாளர், பயிற்சியாளர் உள்ளிட்டோர் ராஜகமலை சென்னையிலேயே நேர்காணல் செய்தனர். தனது வேலைகளை குறித்து எடுத்துரைத்த ராஜகமலை தங்கள் அணியின் ஃபிசியோவாக இறுதி செய்தது பாகிஸ்தான் அணி.

தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள திருச்செந்தூரில், பால்குளம் எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ராஜகமல். சொந்த ஊரிலும், சென்னையிலும் படிப்பை முடித்த ராஜகமல், 2016 முதல் ஃபிசியோதெரபிஸ்டாக பணி செய்து வருகிறார்.

தொடக்கத்தில் சிறியளவிலான விளையாட்டுத் தொடர்களில் ஃபிசியோவாக பணியாற்றிய அவர், 2018-ல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளுக்காகவும் வேலை செய்தார். 2019-ல் தமிழ்நாடு ஹாக்கி அணியின் ஃபிசியோவாக ஒப்பந்தமானார். இதுதவிர, 2019 முதல் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் ஃபிசியோவாக வேலை செய்து வருகிறார்.
‘பாகிஸ்தான் வீரர்கள் நன்கு பழகக் கூடியவர்கள்’

பாகிஸ்தான் அணியுடன் பணியாற்றி வரும் ராஜகமலிடம் பேசினோம். விளையாட்டு வீரரைப் போலவே அவரது வார்த்தைகளிலும் உற்சாகத்தை பார்க்க முடிந்தது.

“திடீர்னுதான் அழைப்பு வந்துச்சு; விசா பிரச்னையால பாகிஸ்தான் டீமோட ஃபிசியோவும் அவரது அசிஸ்டண்டும், கடைசி நேரத்தில் வர முடியாம போச்சு. பாகிஸ்தான் கோச்சும் மேனேஜரும் என்னை கூப்பிட்டு பேசுனாங்க. நான் செஞ்ச வேலைகள் பற்றி எடுத்துச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு” என்கிறார் ராஜகமல்.

பாகிஸ்தான் என்று உச்சரித்தாலே உற்று நோக்கப்படும் சூழலில், ஒரு இந்தியராக, தமிழராக நீங்கள் அவர்களோடு இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கிறது என கேட்டோம்.

“பாகிஸ்தான் டீம் ரொம்ப கூல்ங்க; நல்ல பழகுவாங்க. வழக்கமா சில டீம்களுக்குள்ள ஈகோலாம் இருக்கும். ஆனா இவங்க அப்படி இல்ல. ரொம்ப ஜாலியா பேசுவாங்க. நாம சொல்றத கேட்டுப்பாங்க. குடுக்குற அட்வைஸ்-ஐ ஏத்துப்பாங்க. இவங்களோட வேலை செய்றது ரொம்ப சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு.

ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க நாட்டு மேல பற்று இருக்கும். விளையாட்ட விளையாட்டா மட்டும்தான் பார்க்கணும். எல்லா இடங்களையும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்து. ஆனா விளையாட்டுல அப்படி இல்லை. ஸ்போர்ட்ஸ்னு வந்துட்டா, எல்லாத்தையும் மறந்து உதவி செய்யலாம்” என பேசினார் ராஜகமல்

பாகிஸ்தான் அணியோடு நெருக்கமாக பணியாற்றுகிறீர்களே, சென்னை குறித்து என்ன சொல்கிறார்கள் என ராஜகமலிடம் கேட்டோம்.

“சென்னை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. 16 வருஷம் கழிச்சு இங்க வந்துருக்காங்க. இங்க உள்ள உணவு, விருந்தோம்பல், ரசிகர்களுடைய வரவேற்பு எல்லாமே ரொம்ப நல்லா இருக்குனு சொல்லிருக்காங்க. உணவு விஷயம் குறித்து நிறைய பேசிருக்கோம். பிரியாணி நல்ல சாப்பிடுறாங்க. எங்க ஊர்லையும் பிரியாணிதான் ஃபேமஸ்னு சொல்லிருக்காங்க. பிரியாணி தவிர்த்து, ஃபில்டர் காஃபி, மசால் தோசையும் இங்க கிடைக்கிற மற்ற நல்ல உணவுகளையும் சாப்பிட்டு பார்க்குறாங்க” என்றார்.

“பாகிஸ்தானியர்களோடு பேசும்போது ஆங்கிலத்துல பேசுவேன். புரிஞ்சுப்பாங்க. மொழி ஒரு பிரச்னையா இல்ல” என்கிறார் ராஜகமல்.

“எனக்கு டீம்தான் முக்கியம். வீரர்கள் முழு உடற்தகுதியோட விளையாடணும். என் வேலைகளையும் சில சவால்கள் இருக்கு. சில வீரர்களுக்கு காயமும் ஏற்பட்டிருக்கு. எல்லாத்தையும் நான் சமாளிச்சு அவங்கள தயார் பண்ணனும்” என்கிறார் ராஜகமல். ஒருவேளை பாகிஸ்தான் அணி உங்களை எதிர்காலத்தில் அவர்களுடன் பணியாற்றச் சொன்னால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டோம். “பார்க்கலாம்.. அப்போ எனக்கு வேற அசைன்மெண்ட் இல்லைனா யோசிக்கலாம்” என பதிலளித்தார்.

பாகிஸ்தான் அணியில் தமிழரின் பங்களிப்பு குறித்து இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் பொருளாளரும் தமிழ்நாடு ஹாக்கி கூட்டமைப்பின் தலைவருமான சேகர் மனோகரனிடம் பேசினோம்.

“பாகிஸ்தான் அணிக்கு ஃபிசியோ இல்லாததால நம்மகிட்ட உதவி கேட்டாங்க. நம்மள நம்பி நம்ம ஊருக்கு மேட்ச் ஆட வந்துருக்காங்க. நாமதான அவங்களுக்கு ஏதும்னா செஞ்சி குடுக்கணும்” என்றார் சேகர் மனோகர்.

“ராஜகமல பற்றி பாகிஸ்தான் டீம்கிட்ட சொன்னோம். அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. ராஜகமலும் நல்ல பண்றார். அவ்ளோ பயிற்சி செஞ்சிட்டு மேட்ச் விளையாட வர்றாங்க. கடைசி நேரத்தில் ஃபிசியோ இல்லைன்னா ரொம்ப கஷ்டம். இப்போ பாகிஸ்தான் நம்ம பண்ண உதவியினால சந்தோசப்பட்டாங்க. இது ஒரு நல்ல விஷயம்” என்கிறார் சேகர் மனோகரன்.
‘ராஜகமல் கிடைத்தது அதிர்ஷடம்’

ராஜகமல் குறித்து சென்னையில் ஊடகங்களிடம் பேசிய தற்போதைய பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் முகமது சக்லைன், “ராஜகமல் தனது வேலைகளை மிகச்சிறப்பாகவே கையாளுகிறார். ஒரு உலகத்தரம் வாய்ந்த ஃபிசியோ எங்களுக்கு கிடைத்திருக்கிறார். தக்க சமயத்தில் அவர் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷடமானது” என குறிப்பிட்டார்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான் 2012, 2013, 2018-ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தற்போது சென்னையில் நடந்து வரும் இந்த தொடரில், இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 1 வெற்றி, 1 தோல்வி, 2 டிராவைக் கண்டிருக்கிறது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ம் இடம் வகிக்கிறது.

பலம் வாய்ந்த இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது பாகிஸ்தான். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளதால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் மிக எளிதாகவே நுழைந்துவிடும். அங்கிருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதும், கோப்பையை உச்சி முகர்வதற்கும் பாகிஸ்தான் மிகக்கடுமையாகவே போராட வேண்டியிருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.