;
Athirady Tamil News

சந்திரயான் 3 vs லூனா 25: நிலவின் தென் துருவத்தை முதலில் தொடப் போவது இந்தியாவா? ரஷ்யாவா?!!

0

தற்போது ஒரு குட்டி விண்வெளி பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலன்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று- இந்தியாவின் விண்கலம், மற்றொன்று ரஷ்யாவின் விண்கலம்.

நிலாவில் உள்ள பயனுள்ள தாதுக்கள் மற்றும் பனியினை தேடும் போட்டியில் தான் இந்தியா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் ஈடுபட்டுள்ளன.

விண்கலங்கள் புறப்பட்ட நேரத்தை கருத்தில் கொண்டால், இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் தான் அவர்களின் இலக்குகளான நிலவை அடைய வேண்டும். இதனை யாரும் திட்டமிடவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு எதிர்பாராத திருப்பாக அமைந்துள்ளது.
சுமார் 50 ஆணடுகளுக்கு மேலாக சந்திரனில் மனிதர்களை தரையிறக்கிய ஒரே நாடாக அமெரிக்க உள்ளது.

பல தசாப்தங்களாக, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றிய நம் வாசிப்பு, 1960 களில் நடந்த உண்மையான விண்வெளி பந்தயத்தில் இருந்து தொடங்குகிறது. அந்த பந்தயத்தில், அமெரிக்காவும், சோவியத் யூனியனும் சந்திரனில் முதலில் யார் ஒரு மனிதனை அனுப்புகிறார்கள் என போட்டியிட்டன.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளை செலுத்தி, விண்வெளியில் மனிதனை அனுப்பி, ஆளில்லா விண்கலத்தை நிலவில் தரையிறக்கிய முதல் நாடு சோவியத் யூனியன் என்றாலும், விண்வெளி வீரர்களை அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சந்திரனுக்கு ஏற்றிச் சென்ற முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்கா கொண்டுள்ளது.

இந்த சாகசம் உலகெங்கும் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு பிறகு, அடுத்த அடுத்த ஆண்டுகளில் மேலும் சில குழுக்களாக அப்பல்லோ விண்கலத்தில் அமெரிக்கா தனது பயணத்தை தொடர்ந்தது. அது, 1972 வரை நடந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக, சந்திரனில் மனிதர்களை தரையிறக்கிய ஒரே நாடாக அமெரிக்கா உள்ளது.

சந்திரனின் மேற்பரப்பை ஆராய்வதற்கான இந்திய லேண்டர்(lander), சந்திரயான் 3, ஜுலை 14 ஆம் தேதி பூமியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியை ஒரு சில முறை சுற்றி வந்த பிறகு, தரையிறங்குவதற்கான தயாரிப்பில் சந்திரனைச் சுற்றி பல வாரங்கள் செலவழிக்கும். வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று, சந்திர மேற்பரப்பைத் தொட உள்ளது சந்திராயன்-3.

இதற்கிடையில், ரஷ்ய லேண்டரான, லூனா -25, கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாஸ்கோ நேரப்படி அதிகாலை 2 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது சந்திரனுக்கு மிகவும் விரைவான நேரடியான பாதையில் செல்வதால், 10 நாட்களுக்குள் மேற்பரப்பை அடைய முடியும்.
தென் துருவத்தை குறிவைக்கும் இரண்டு நாடுகள்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் மறைக்கவில்லை.

ஆனால், லூனா -25-யின் பயணம் அதை விட சற்று அதிக நேரம் ஆகலாம், அதாவது சந்திரயான் -3 முதலில் நிலவை சென்றடையும். இறுதியில், மெதுவாகவும், நிதானமாகவும் சென்ற இந்திய விண்கலம்தான் இந்த பந்தயத்தில் வெல்லும்.

இரு நாடுகளின் இந்த முயற்சி, விண்வெளி ஆராய்ச்சி தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன. சமீபத்தில் நமக்கு அருகில் உள்ள விண்வெளியில் கணிசமான பனிப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், விஞ்ஞானிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஏனெனில் எதிர்காலத்தில் நிலவின் தளத்தில் ராக்கெட் எரிபொருளை உருவாக்க தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க முடியும். கூடுதலாக, உரிய பதப்படுத்துதலுக்குப் பிறகு அந்த தண்ணீரைக் குடிக்கலாம்..

லூனா-25 மற்றும் சந்திரயான்-3 இடையேயான போட்டி சந்திரன் தொடர்பான ஆய்வுகளின் ஒரு புதிய சகாப்தத்தை உள்ளடக்கியது, இதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் சந்திரனை குறிவைத்துள்ளன.

பலருக்கு இது நட்புரீதியான போட்டி. ஆனால், இன்னும் மனித ஆய்வின் புதிய அத்தியாயம் ஆபத்தில் உள்ளது. தனி நபர் தரையிறங்குதல் மற்றும் ஒரு குழுவினர் தரையிறங்குவதற்கு எடுக்கப்படும் சிறிய முயற்சிகள், வரவிருக்கும் தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகளில் சூரிய குடும்பத்தை வெல்வதில் மாபெரும் பாய்ச்சலுக்கு வழிவகுக்கும். யார் முதலில் அங்கு செல்கிறார் என்பது உண்மையிலேயே முக்கியமானது.

லூனா-25 யின் ஏவுதல் பல முறை தாமதமானது – இது முதலில் 2021 இல் திட்டமிடப்பட்டது. இந்தியாவின் விண்கலம் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருவதால், இந்தியா இப்போட்டியில் கொஞ்சம் முன் சென்றுவிட்டது
பந்தயத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா

லூனா-25 மற்றும் சந்திரயான்-3 பயணங்களின் நேரத்தைக் குறிப்பிடுகையில், “இது எல்லாவற்றையும் விட தற்செயல் நிகழ்வாக மாறியது” என்கிறார் அமெரிக்க வான் மற்றும் விண்வெளிப் படையின் வான் பல்கலைக்கழகத்தின் உத்தி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளின் பேராசிரியர் வெண்டி விட்மேன் கோப். மேலும் பேசிய அவர், இது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு என்றார்.

லூனா-25 யின் ஏவுதல் பல முறை தாமதமானது – இது முதலில் 2021 இல் திட்டமிடப்பட்டது. இந்தியாவின் விண்கலம் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருவதால், இந்தியா இப்போட்டியில் கொஞ்சம் முன் சென்றுவிட்டது.

ரஷ்யா நேரடியான வழியில் சென்றாலும் கூட, முதலில் நிலவிற்கு செல்வதற்கு சில அழுத்தங்களை உணரலாம். சந்திரயான் -3 லூனா -25 ஐ விட இரு மடங்கு கனமானது மற்றும் மிகவும் குறைவான சக்திவாய்ந்த ராக்கெட்டைப் பயன்படுத்தி ஏவப்பட்டது,

அதாவது சந்திரனை நோக்கிச் செல்வதற்கு முன்பு பூமியைச் சுற்றி பெரிய நீள்வட்ட சுற்றுப்பாதைகளை எடுத்து வேகத்தை உருவாக்க வேண்டும். எதிர்பாராத செயலிழப்புகள் முயற்சியை பின்னுக்குத் தள்ளலாம் அல்லது அந்த முயற்சியை முற்றிலுமாக முறியடிக்கலாம். விண்கலன்கள் அங்கு செல்லும் வரை, அது எப்படிப் போகிறது என்று இரு நாடுகளுக்குமே தெரியாது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளால் நாட்டின் விண்வெளித் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், விண்வெளியில் அதன் தொடர்ச்சியான திறன்களை நிரூபிக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது.

“அவர்களின் விண்வெளித் தொழில் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் விட்மேன் கோப். ஆனால், ரஷ்யாவைப் பொறுத்தவரை இது சந்திரனை நோக்கிய பந்தயம் அல்ல என்று இங்கிலாந்தில் உள்ள குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் விண்வெளித் துறையைப் படிக்கும் ஸ்டெபானியா பலாடினி கூறுகிறார்.

ஏனெனில் முன்னாள் சோவியத் யூனியன் 50 ஆண்டுகளாக நிலவில் பல லேண்டர்களையும் ரோவர்களையும் வைப்பதில் வெற்றி பெற்றதுள்ளது. அந்த வகையில், ரஷ்யர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே பந்தயத்தில் வெற்றி பெற்றுவிட்டனர், அதற்கு மரியாதை செலுத்தும் வகையில், லூனா-25 என்ற பெயர், 1976 ஆம் ஆண்டு ரஷ்யாவின் கடைசி நிலவுப் பயணமான லூனா 24-ஐ நினைவுபடுத்துகிறது.

இந்தியா இதற்கு முன் சந்திரனின் தென் துருவத்திற்கு ஒரு விண்கலத்தை அதன் நிலவின் தாக்க ஆய்வு மூலம் அனுப்பியது. இது நவம்பர் 2008-ல் ஒரு முகடு மீது மோதியது

சோவியத் லூனா 1 விண்வெளி ஆய்வில் முதல் விண்கலமாகக் கருதப்படுகிறது. இது சந்திரனின் மீது மோதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்வையாளர்கள் முடிவு செய்தனர், ஆனால் அதற்குப் பதிலாக அதன் மேற்பரப்பில் இருந்து 3,725 மைல்கள் (5,995 கிமீ) கடந்து சென்றது.

ஆனால், திட்டமிட்டபடி சந்திரயான்-3 விண்கலத்தைத் தொட்டால், சந்திரனில் “மென்மையான தரையிறக்கத்தை” அடைவதில் “உண்மையில் இந்தியா வெற்றிபெறுவது இதுவே முதல் முறையாகும்” என்கிறார் பலாடினி.

இரண்டு லேண்டர்கள் செப்டம்பர் 2019-ல் சந்திரனின் மேற்பரப்பில் மோதியதால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்தியா இதற்கு முன் 2008- ஆண்டு சந்திரனின் தென் துருவத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்பி அதன் மீது மோதச் செய்து ஆயவு நடத்தியது.
தென்துருவத்தில் தரையிறங்குவது புதிதா ?

இதுவரை எந்த விண்கலமும் வெற்றிகரமாகச் சென்றதில்லை. அமெரிக்கா சார்பில் அனுப்பப்பட்டுள்ள அப்பல்லோ விண்கலன்கள் அனைத்தும் வடக்கே பூமியின் பாதைக்கு அருகில் உள்ள இடங்களுக்குச் சென்றன. அந்த தரையிறங்கும் தளங்கள் ஒப்பீட்டளவில் மென்மையான நிலப்பரப்பு மற்றும் நல்ல சூரிய ஒளியைக்கொண்டிருந்தன.

ஆனால், தென்துருவததில் நிலப்பரப்பு மிகவும் மேடு பள்ளங்கள் நிறைந்தது. மேலும், சூரியனில் இருந்து வரும் ஒளி கடுமையான கோணத்தில் வரும்.

இதுகுறித்து கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் மற்றும் கிரக அறிவியல் துறை பேராசிரியரான ஜாக் பர்ன்ஸ் பேசுகையில்,“அடிவானத்தில் சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால், நிழல்கள் மிக நீளமாக இருக்கும். சந்திரன் அதன் சாம்பல் மேற்பரப்பில் மிகவும் சீராக இருக்கும். எனவே, பள்ளங்கள் மற்றும் கற்பாறைகளை வேறுபடுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கும்” என்கிறார்.

அமெரிக்கா 2025 ஆம் ஆண்டில் தான் தனது ஆர்ட்டெமிஸ் III குழுவை சந்திரனின் தென் துருவத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பா ‘ரோபோ’ லேண்டர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் குழுக்கள் கொண்ட விண்வெளிப் பயணம் எப்போதுமே கடினமாக இருக்கும் என்று விட்மேன் கோப் குறிப்பிடுகிறார்.

முன்னோக்கிச் செல்வதும், சந்திரனில் ஒரு நிலையான மற்றும் பயனுள்ள இருப்பை யாரால் அமைக்க முடிகிறது என்பது தான் உண்மையில் முக்கியமானது என்கிறார் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் பேராசிரியர் விஷ்ணு ரெட்டி. நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலா போட்டி உள்ளதை அவர் ஏற்கவில்லை.

“உண்மையில் அப்படி போட்டியாக சித்தரிப்பது ஒரு கவனச்சிதறல் என்று நான் நினைக்கிறேன். அரசியலின் அடிப்படையிலோ அல்லது ஒரு தேசத்தையோ அல்லது மற்றொன்றையோ வெல்ல முயற்சிப்பதன் மூலமாகவோ நீங்கள் நிலையான, நீண்டகால இருப்பைக் கொண்டிருக்க முடியாது,” என்கிறார் விஷ்ணு ரெட்டி.

மேலும் பேசிய அவர், “ஒவ்வொரு லேண்டர்களிலும் உள்ள அறிவியல் உபகரணங்கள் ஒப்பீட்டளவில் ஒத்ததாக இருக்கிறது. முக்கியமான சந்திரனின் பனி, தாதுக்கள் மற்றுமு் சந்திரனின் வரையறுக்கப்பட்ட வளிமண்டலம் போன்றவற்றைப் பற்றி மேலும் நன்று புரிந்து கொள்ள இந்த லேண்டர்கள் விஞ்ஞானிகளுக்கு உதவும் என நம்புகிறோம். சந்திரனின் தென் துருவத்தின் தெளிவான படத்தைப் பெறுவதும் உதவியாக இருக்கும்,”என்றார்.

லூனா-25 மற்றும் சந்திரயான்-3 ஆகியவை, சர்வதேச கூட்டமைப்பிலிருந்தும் துவங்கியுள்ள ஆரம்பகால முயற்சிகளாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.