;
Athirady Tamil News

2035 இல் உலக மக்களில் பாதி பேர் உடற்பருமன் கொண்டவர்களாக இருப்பார்களாம் – ஆய்வில் வெளியான தகவல் !!

0

உலக மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் உடற்பருமன் உள்ளவர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம், 2035 இல் உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையுடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஏற்கனவெ உலக மக்கட்தொகையில் 38% அதாவது 2.6 பில்லியன் மக்கள் உடற்பருமன் உடையவர்களாக உள்ளனர்.

இந்நிலை தொடர்ந்தால் வரும் 12 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 4 பில்லியனாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உடல் நலத்திற்கு கேடு தரும் கொழுப்பு, எண்ணெய், உப்பு மற்றும் இரசாயனப் பொருட்கள் அதிகமுள்ள, சத்துகள் குறைந்த உணவுகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பது, உற்பத்தி மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவது, போதுமான விழிப்புணர்வு போன்ற நடவடிக்கைகளை உலக அரசாங்கங்கள் உடனடியாக எடுக்காவிட்டால் இன்று ஏழு பேரில் ஒருவர் என்ற நிலை மாறி, 2035ல் நால்வரில் ஒருவர் உடற்பருமன் உள்ளவர்களாக மாறி விடுவார்கள் என்று இந்த ஆய்வுகளை நடத்திய உலக உடற்பருமன் அறக்கட்டளை அமைப்பு (World Obesity Federation) சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு நிகழ்ந்தால் உலக மக்களில் 2 பில்லியன் பேர் நிரந்தர உடற்பருமனுடையவர்களாக மாறி விடுவார்கள் என்று ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

உடற்பருமன் அளவு (Body Mass Index BMI) 25க்கும் கூடுதலாக இருப்பவர்கள் அதிக உடல் எடையுடையவர்கள். இது 30 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் அவர்கள் உடற்பருமனுடன் (obese) இருப்பவர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது.

இது புற்றுநோய், இதய நோய்கள், மற்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. வயது வந்தவர்களை விட குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரிடம் இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த அளவு 2020ல் இருந்ததை விட 2035ல் இரண்டு மடங்காக அதிகரிக்கும். 18 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களிடையில் உடற்பருமன் 100% அதிகரித்து 218 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுவர்.

இதே வயதில் இருக்கும் சிறுமிகளிடையில் 125% உயர்வு ஏற்பட்டு, 2035ல் 175 மில்லியன் சிறுமிகள் அதிக உடல் எடையால் பாதிக்கப்படுவர்.

இப்பிரச்சனையை இன்று சரிசெய்யாவிட்டால் நாளை இது உலகைப் பாதிக்கும் மிகப்பெரும் சவாலாக மாறிவிடும். இதனால் உடற்பருமன் மூலம் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழும் இடமாக பூமி மாறிவிடும் என்று அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் லூயிஸ் போர் (Prof Louise Baur) வலியுறுத்தியுள்ளார்.

உலக ஆட்சியாளர்கள் வரி விதிப்பு முறைகளில் மாற்றம்.
கொழுப்பு, சர்க்கரை, உப்பு, சுவையூட்டும் வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கிய உடல் நலத்திற்கு தீங்கு செய்யும் உணவு வகைகளின் சந்தைப்படுத்துதலில் கட்டுப்பாடுகள்.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்படுவதைத் தடுத்தல்.
கண்கவர் பொட்டலமிடுதல் முறையை மாற்றுதல் மற்றும் பள்ளிகளில் சத்துள்ள சுகாதாரமான உணவு வழங்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

ஏழை நாடுகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டுள்ள இவற்றில் பத்தில் ஒன்பதும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ளனர்.

நைஜர், பாப்புவா நியூ கினி, சோமாலியா, நைஜீரியா மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகள் இப்பிரச்சனையை சந்திக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நாடுகள் வரிசையில் முன்னணியில் உள்ளன.

சாதாரண மக்களுக்குப் போதுமான அளவில் சத்துள்ள உணவுகள் கிடைக்காததும் இதற்கு முக்கிய காரணம். இதை சமாளிக்க எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கும் ஏழை நாடுகளே இதனால் வருங்காலத்தில் மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் என்று அறக்கட்டளையின் அறிவியல் பிரிவு இயக்குனர் ரேய்ச்சல் ஜாக்சன் லீச் (Rachel Jackson Leach) எச்சரிக்கிறார்.

ஆய்வுகள் நடத்தப்பட்ட 183 நாடுகளில் சுவிட்சர்லாந்து, நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன், யு கே உட்பட பத்து நாடுகள் இதை சமாளிக்க தயார்நிலையில் உள்ளன.பொருட்களின் விலையுயர்வும் இதற்கு முக்கிய காரணம்.

2019ல் 1.96 டிரில்லியன் டொலராக இருந்த இந்த உயர்வு 2035ல் 4.32 டிரில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது உலக உள்நாட்டு வளர்ச்சியில் (GDP) 3%. கோவிட்19 தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு சமமானது.

காலநிலை மாற்றம், கோவிட்19 கட்டுப்பாடுகள், வேதிப்பொருட்களின் மாசு, உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகள் ஊக்குவிக்கப்படுதல் மற்றும் உணவுத் தொழிற்துறையின் போக்கு போன்றவையும் இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.