;
Athirady Tamil News

40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக செல்போன் கொடுத்து அசத்தும் காங்கிரஸ்- பாஜக திணறல்!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கவும், மீண்டும் ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடி வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதனிடையே ஆளும் காங்கிரஸ் கட்சி பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏற்கனவே வீடுகளுக்கு 200 யூனிட்டுக்கு கீழ் மின் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ள நிலையில் தற்போது அரசு செயல்படுத்தி வரும் இலவச செல்போன் திட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் யோஜனா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மொபைலுடன் இலவச இணையமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும். இதனால் மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் எளிதாகப் பெற முடியும் மற்றும் அவர்கள் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு ரியல்மி, ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒரு மொபைல்போனின் விலை ரூ.5,999 மற்றும் ரூ.6,499 என்கின்றனர். அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது ஐ.டி.ஐ. படிக்கும் மாணவிகள் மற்றும் அரசிடம் இருந்து சமூக ஓய்வூதியம் பெறும் விதவை பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பின்னர் படிப்படியாக அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அசோக் கெலாட்டை வீழ்த்த பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்த நிலையில் இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு தனி மதிப்பை பெற்று கொடுத்துள்ளது. இதனால் பா.ஜ.க. திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது இரு கட்சிகளும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.