;
Athirady Tamil News

பா.ஜனதாவின் தவறான ஆட்சியை அகற்றுவோம்- மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு!!

0

பேரழிவாக இருக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள குழுவில் இருந்தும் அந்த கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகி உள்ளார். இதன் தொடர்ச்சியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற பெயரில் ஒரு குழுவை அமைக்கும் இந்த வித்தை இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை சிதைப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகும்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ போன்ற தீவிர நடவடிக்கைகள் நமது ஜனநாயகம், அரசியலமைப்பு போன்ற நடைமுறைகளை நாசமாக்கிவிடும். இதை எளிய தேர்தல் சீர்திருத்தங்களால் சாதிக்க முடியும் என்று கூறுவது பிரதமர் மோடியின் மற்ற யோசனைகளைப் போலவே பேரழிவாக இருக்கும். 1967-ம் ஆணடு வரை இந்தியாவில் இவ்வளவு மாநிலங்கள் இல்லை. அதைப்போல பஞ்சாயத்துகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30.45 லட்சம் பிரதிநிதிகள் இல்லை. தற்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. அதைப்போல லட்சக்கணக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நம்மிடம் உள்ளனர்.

அவர்களது எதிர்காலத்தை ஒரே நேரத்தில் தீர்மானிக்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் இந்தியாவை ஜனநாயக முறையில் இருந்து சர்வாதிகார ஆட்சி முறைக்கு மெல்ல மாற்றுவதற்கு மோடி அரசு விரும்புகிறது. எனவே 2024-ம் ஆண்டு தேர்தலில் இந்திய மக்கள் முன் இருக்கும், ஒரே நாடு ஒரே தீர்வு, பா.ஜனதாவின் தவறான ஆட்சியை அகற்றுவதுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதில் முக்கியமான பல்வேறு கேள்விகள் உள்ளன.

அதாவது எந்தவொரு தனிநபரின் அறிவுத்திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல், இந்திய தேர்தல் நடைமுறையில் ஒருவேளை மிகக் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்த திட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழு மிகவும் பொருத்தமானதா? தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக இந்த பெரிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமா? இவ்வளவு பெரிய திட்டத்துக்கான குழுவில் தேர்தல் கமிஷனில் இருந்து ஒருவர் கூட நியமிக்காதது ஏன்? 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை தேர்தல்களுக்காக தேர்தல் கமிஷன் சுமார் ரூ.5,500 கோடி செலவிட்டுள்ளது.

இது அரசின் செலவின பட்ஜெட்டில் ஒரு பகுதியே ஆகும். இது செலவு சேமிப்பு குறித்த கருத்தை முட்டாள்தனமாக்குகிறது. 2014-ம் ஆண்டு முதல் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் மொத்தம் 436 இடைத்தேர்தல்கள் நடந்துள்ள நிலையில், மக்களின் விருப்பத்தை புறக்கணித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதை பா.ஜ.க வழக்கமாக கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த உள்ளார்ந்த அதிகார பேராசை ஏற்கனவே நமது அரசியலை சீரழித்துவிட்டது மற்றும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தை வலுவற்றதாக்கி விட்டது. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.