;
Athirady Tamil News

பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்!!

0

பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் எனக்கு தானியங்கி தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பதிவு செய்யப்பட்ட குரலில் உங்கள் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகளுடன் பேச எண் 1ஐ அழுத்தவும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நான் 1ஐ அழுத்தியபோது மறுமுனையில் மும்பை அந்தேரியில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி என்று கூறிய ஒருவர், என்னிடம் உங்கள் வாகனத்துக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும், எனவே மும்பையில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் அந்த நபர் போலீசாரிடம் அழைப்பை மாற்றுவதாக கூறினார். அதைத்தொடர்ந்து தான் போலீஸ் என்று ஒருவர் பேசினார். அவரிடம் நான், பெங்களூருவில் தங்கி இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை என்றும், சமீபத்தில் நான் மும்பைக்கு வரவில்லை என்றும் விளக்கினேன். தொடர்ந்து அந்த நபர் என்னை ஸ்கைப்பில் வரும்படி அழைத்தார்.

நானும் மறுமுனையில் பேசுவது போலீஸ்தான் என்று நம்பி ஸ்கைப்பில் இணைந்தேன். மறுமுனையில் பேசிய நபர் போலீஸ் என்று கூறி அடையாள அட்டையை அனுப்பினார். பின்னர் எனது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து எனக்கு பல வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி பயமுறுத்தினர். மேலும் நிதித்துறை அதிகாரி என்று மற்றொருவரும் தொடர்ந்து பேசினார். பின்னர் அவர் எனது ஒரு வங்கி கணக்கில் இருந்த ரூ.48ஆயிரத்து 325யை அவர்களது கணக்குக்கு மாற்ற சொன்னார்கள். பரிவர்த்தனை சரிபார்ப்புக்கு பிறகே பணம் திருப்பித் தரப்படும் என்றனர்.

இதேபோல் நான் எனது 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96ஆயிரத்து 650யை மாற்றினேன். இந்த நிலையில் நான் எனது தோழியிடம் இதுகுறித்து கூறினேன். அவர் இது போலியானது, எனவே இனி பணம் அனுப்பவேண்டாம் என்று கூறினார். இதையடுத்து மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, எனது பணத்தை திரும்ப தர மறுத்து எனது போன் இணைப்பை துண்டித்து விட்டனர். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சம்பிகேஹள்ளி போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.