;
Athirady Tamil News

பா.ஜனதாவின் சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி- காங்கிரஸ் ரூ.800 கோடி!!

0

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றின் சொத்து மதிப்பு அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி, கடந்த 2021-22-ம் நிதியாண்டில் தனது சொத்து மதிப்பாக ரூ.6,046.81 கோடியை அறிவித்துள்ளது. இது முந்தைய 2020-21-ம் ஆண்டின் சொத்து மதிப்பான ரூ.4,990 உடன் ஒப்பிடும்போது 21.17 சதவீத அதிகரிப்பு ஆகும்.

அதேபோல கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.691.11 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் 16.58 சதவீதம் உயர்ந்துள்ளது. அது ரூ.805.68 கோடியாகி உள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசியக்கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.8,829.16 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.7,297.62 கோடியாக இருந்தது. தேசியக்கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் குறைந்துள்ளது. தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பை போல அவற்றின் கடன் அளவு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காங்கிரசுக்கு ரூ.41.95 கோடி கடன் உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.12.21 கோடி, பா.ஜனதாவுக்கு ரூ.5.17 கோடி கடன் இருக்கிறது. அதேசமயம், பா.ஜனதா அதிகபட்சமாக ரூ.6,041.64 கோடி இருப்பு தொகையை கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ரூ.763.73 கோடியை இருப்பு வைத்திருக்கிறது. ஆனால் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி, தாங்கள் யாரிடம் இருந்து கடன் பெற்றோம் என்ற விவரத்தை எந்த தேசியக்கட்சியும் வெளியிடவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல், இன்னும் தாளிலேயே உள்ளது. இவ்வாறு ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.