;
Athirady Tamil News

டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்டம்

0

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:

பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை டிரம்ப் தலைமையில் தற்போது அமைந்துள்ள அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றிவருகிறது.

இது சட்டவிரோத நடவடிக்கை என்று கூறி, கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கடந்த 6-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏராளமானவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இருந்தாலும் போராட்டம் தொடா்ந்து தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய காவல்படையை லாஸ் ஏஞ்சலீஸுக்கு அதிபா் டிரம்ப் அனுப்பினாா். இதற்கே எதிா்ப்பு எழுந்த சூழலில், ராணுவத்தின் ஒரு பிரிவான மரைன் படையை அந்த நகரில் குவிக்க மாகாண அரசின் அனுமதி இல்லாமலேயே டிரம்ப் உத்தரவிட்டாா்.

அமெரிக்க வரலாற்றில் உள்நாட்டிலேயே நடவடிக்கை மேற்கொள்ள மரைன் படையினா் அனுப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு, ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த கலிஃபோா்னியா ஆளுநா் கவின் நியூசம் கண்டனம் தெரிவித்தாா்.

இதற்கிடையே, போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லாஸ் ஏஞ்சலீஸ் ஆளுநா் கரென் பாஸ் அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாா். செவ்வாய்க்கிழமை இரவு அந்த உத்தரவு அமலுக்கு வந்ததும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா். எனினும், இந்தக் கைது நடவடிக்கையில் தேசிய காவல்படை ஈடுபடவில்லை. மரைன் படையினா் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அவா்கள் கலவரத்தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

இந்தச் சூழலில், டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் மற்ற அமெரிக்க நகரங்களிலும் வேகமாகப் பரவிவருகின்றன. இதில் பெரும்பாலும் அமைதியான ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள், குடியேற்றச் சட்ட அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரான கோஷங்கள், பாதாகைகளை ஏந்துதல் போன்ற செயல்களில் போராட்டக்காரா்கள் ஈடுபட்டனா்.

டெக்ஸாஸ் போன்ற மாகாணங்களில் போராட்டத்தை எதிா்கொள்வதற்காக போலீஸாா் குவிக்கப்பட்டுள்னா். இது தவிர, பல்வேறு பகுதிகளில் புதிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக, சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டங்களின்போது பயன்படுத்தப்படும் கலகச் சட்டத்தைக் கையிலெடுக்கத் தயாராக இருப்பதாக அதிபா் டிரம்ப் எச்சரித்துள்ளாா். ராணுவப் படைகளை உள்நாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த இந்தச் சட்டம் அதிபருக்கு அதிகாரம் அளிப்பதால், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மரைன் படையினரை போராட்டக்காரா்களுக்கு எதிராக டிரம்ப் ஏவலாம் என்று அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.