;
Athirady Tamil News

யாழ் பல்கலை துணைவேந்தரைப் பதவி நீக்க பகடையாக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் செயலகம், காவல் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவரிடமிருந்தும், தனி ஆட்கள் இருவரிடமிருந்தும் முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டதில், நிதி கையாளுகை மற்றும் அனுமதிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துணைவேந்தரைப் பதவி நீக்க
இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தினுள் முள்ளிவாய்க்கால் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், இது முள்ளிவாய்க்கால் தூபியை இடிப்பதற்கான முயற்சியில்லை என்றும் முறையற்ற விதத்தில் முள்ளிவாய்க்கால் தூபி அமைப்பதற்கு அனுமதித்தார் எனக் குற்றஞ்சாட்டிப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சியே இது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு (2023) பெப்ரவரி மாதம் இடம்பெற்ற துணைவேந்தர் தெரிவின் போது கூட தற்போதைய துணைவேந்தர் மீளவும் பதவிக்கு வரக் கூடாது என்பதற்காகப் பல்கலைக்கழகத்தினுள் இருந்து பேராசிரியர் ஒருவர் உண்மைக்குப் புறம்பாகப் பல வதந்திகளைப் பரப்பியதோடு, தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் வெவ்வேறு பெயர்களில் ஒரே கடிதத்தை முறைப்பாடுகளாக அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறிருக்கையில் மீண்டும் நினைவுத்தூபி குறித்து புதிய பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.

உடைக்கப்பட்ட நினைவுத் தூபி
இவ்வாறிருக்கையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்ததைத் தொடர்ந்து, மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி துணைவேந்தரால் அடிக்கல் நாட்டி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டது.

உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் 2021 ஏப்ரல் 23 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.