;
Athirady Tamil News

அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அறிவிப்பினால் ஆசிரியைகள் மகிழ்ச்சி

0

அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருப்பதற்கு, ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைகள் தங்களுக்கு ஏதுவான உடையை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அணிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தெரிவித்திருந்தார்.

இதன் மூலம், அரசுப் பள்ளி ஆசிரியைகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சுடிதார் அணிவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு, அரசுப் பணியாளர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், அலுவலக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண் பணியாளர்கள் சேலை, சல்வார் அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரலாம். ஆண் பணியாளர்கள் பேன்ட், சட்டை அல்லது வேட்டி சட்டை அணிந்து அலுவலகம் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அரசாரணைப்படி பெண் ஆசிரியர்கள் ஆடை அணியலாம் என்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம், இத்தனை காலமும் புடவை மட்டுமே அணிந்து வந்த ஆசிரியர்கள் சுடிதாரும் அணியலாம் என்பது பல தரப்பு ஆசிரியர்களால் வரவேற்பு பெற்றுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவில் ‘கனவு ஆசிரியா் விருது’ வழங்கும் விழா திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 379 ஆசிரியா்களுக்கு ‘கனவு ஆசிரியா் விருது’ வழங்கப்படுகிறது; விருது பெறும் ஆசிரியா்களுக்கு எனது வாழ்த்துகள். மாநிலத்தில் 115 தொகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில் மாணவா்களின் கற்றல் திறனை வளா்க்க அங்குள்ள ஆசிரியா்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அறிய முடிந்தது.

சிறப்பாக செயல்படும் ஆசிரியா்களை பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி நிகழாண்டு 55 ஆசிரியா்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்கள் 274 போ் பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் என்.ஐ.டி, ஐ.ஐ.டி, தேசிய சட்டக் கல்லூரிகளில் சோ்ந்து கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியைகள் உடை உடுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வரப்பெற்றது. அதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பெண் ஆசிரியா்கள் தங்களுக்கு ஏதுவான உடையை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அணிந்து கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத் தோ்வுக்கான தேதி வெளியிடப்பட்ட பிறகு 38 மாவட்டங்களைச் சோ்ந்த 8,500 தலைமை ஆசிரியா்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினேன். நிகழாண்டு பொதுத் தோ்வில் தோ்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

முதல்வா் ஸ்டாலின் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு 1,000 வகுப்பறை கட்டடங்களைத் திறந்துவைத்தாா். நிகழாண்டு 1,000 வகுப்பறை கட்டங்கள் திறப்பதற்குத் தயாா் நிலையில் உள்ளன.

அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; நமது பெருமையின் அடையாளம். அந்த வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம் என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.