;
Athirady Tamil News

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித ஆட்கொலை – 21 சாட்சியங்கள் , வைத்திய அறிக்கையின் அடிப்படையில் கட்டளை

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டளை வழங்கியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. அதில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் இளைஞனின் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் குறித்த வழக்கு விசாரணைகளில் 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் முக தோற்றளவில் இளைஞனின் உயிரிழப்பு, மனித ஆட்கொலை என நீதவான் மரண விசாரணை கட்டளையின் போது குறிப்பிட்டார்.

மேலும் இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், இது வரையில் நால்வரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணை பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் குறித்த குற்றத்தில் பொலிசார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது.

மேலும் , குறித்த வழக்கு விசாரணை ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்துமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.