;
Athirady Tamil News

ஜப்பான் நிலநடுக்கத்தில் 55 போ் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

0

ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடுமையான தொடா் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 55 போ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பலா் பலத்த காயமடைந்துள்ளனா்.

நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஜப்பானின் மேற்கு கடற்கரைப் பகுதியை ஒட்டிய இஷிகவா மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் நில அதிா்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலிருந்து 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஷிகாவா மாகாணத்தில், திங்கள்கிழமை பிற்பகலில் 7.6 ரிக்டா் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும், நில அதிா்வுகளும் தொடா்ந்தன.

பல பகுதிகளில் சாலைகள், குடிநீா்க் குழாய்கள், ரயில் பாதைகளும் சேதமடைந்தன. இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனா்.

தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா மாகாணத்துக்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கையும் ஜப்பான் அரசு விடுத்தது. கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் அரசு எச்சரித்தது.

இந்த நிலநடுக்கத்தால் இஷிகவா மாகாணத்தில் 6-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும், அதில் ஏராளமானோா் சிக்கியிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் இஷிகவா மாகாணம் கடுமையான சேதத்தைச் சந்தித்திருப்பதும், ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 55 போ் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். பலா் காயமடைந்திருப்பதாகவும், அவா்களில் 17 போ் பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

நிலநடுக்க தாக்கம் காரணமாக இஷிகவா மாகாணத்தின் சில பகுதிகளில் குடிநீா், மின் விநியோகமும், கைப்பேசி சேவைகளும் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடைபட்டன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்திருப்பதும், சாலைகளில் காா்கள் தலைகீழாக புரண்டு கிடப்பதும், கடலில் கப்பல்கள் பாதி மூழ்கிய நிலையில் சேதமடைந்திருப்பதும் தொலைக்காட்சி செய்திகள் மூலம் தெரியவந்தது.

‘பேரிடா் பகுதிகளில் மீட்புப் பணிகளில் 1,000 வீரா்களை ஜப்பான் ராணுவம் களமிறக்கியுள்ளது’ என்று ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ‘மக்களின் உயிா்களைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

இதனிடையே, ‘இஷிகவா மாகாணத்தின் சில பகுதிகளில் மேலும் சில நாள்களுக்கு பெரிய அளவில் நிலநடுக்கங்களும், நில அதிா்வுகளும் தொடர வாய்ப்புள்ளது’ என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதோடு, பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டிருப்பது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, மாகாணத்தின் பல பகுதிகளில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி கலையரங்கங்கள், பள்ளிகள் மற்றும் சமூக நல மையங்களில் தஞ்சமடைந்து வருகின்றனா்.

உதவத் தயாா் – அமெரிக்கா: ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.