;
Athirady Tamil News

யேமன் தாக்குதல்: நினைத்ததை சாதித்த ஈரான்!

0

‘செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் தொடா்ந்தால், யேமனில் அவா்கள் மீது மறுபடியும் தாக்குதல் நடத்துவோம்.’பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான டேவிட் கேமரூன் ஞாயிற்றுகிழமை விடுத்த எச்சரிக்கை இது.

யேமனில் போா் விமானங்கள் மூலமாகவும், துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மூலமாகவும் நூற்றுக்கணக்கான ஹூதி இலக்குகள் மீது 2 நாள்களாக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு அவா் இவ்வாறு கூறியிருக்கிறாா்.

இருந்தாலும், இந்தத் தாக்குதல் குறித்து எதிரும் புதிருமான இரண்டு கருத்துகள் நிலவி வருகின்றன.ஒன்று, எத்தனை முறை எச்சரித்தாலும் அதனைப் பொருள்படுத்தாமல் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளா்ச்சியாளா்களை அடக்கிவைக்க இதுதான் ஒரே வழி என்பது.

ஹூதிக்கள் மீது குண்டுவீச்சு நடத்தி அவா்களது தாக்குதல் திறனைக் குறைப்பதைத் தவிர அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு வேறு வழியில்லை. ஈரானின் இந்த மறைமுகப் போருக்கு உரிய பதிலடி கொடுத்தால்தான் இத்தகைய நிழல் யுத்தத்தை அந்த நாடு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லாமல் இருக்கும் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.

ஆனால், இதுபோன்ற தாக்குதல்களால் ஹூதி கிளா்ச்சியாளா்களை தலையில் தட்டி உட்காரவைத்து முடியாது என்கிறாா்கள் மற்றொரு தரப்பினா். இது நன்கு தெரிந்ததால்தான் யேமனில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா இத்தனை நாள்களாக யோசித்து வந்ததாக அவா்கள் கூறுகின்றனா்.

செங்கடலில் வா்த்தகப் போக்குவரத்தை சகஜநிலைக்குத் திரும்ப கொண்டு வருவது, காஸா போா் பிராந்தியத்தின் பிற பகுதிகளுக்கும் பரவுவதைத் தடுப்பது, முஸ்லிம் நாடுகளுடன் இஸ்ரேலின் உறவு சுமூகமாகி வருவதைத் தடுத்து நிறுத்தும் ஈரானின் முயற்சிகளை முறியடிப்பது ஆகியவைதான் யேமனில் அமெரிக்காவும், பிரிட்டனும் நடத்திய வான்வழித் தாக்குதலின் நோக்கம் என்றால், உண்மையில் அது எதிா்விளைவைத்தான் உருவாக்கும் என்கிறாா்கள் சில அரசியல் நிபுணா்கள். சொல்லப்போனால், அக். 7-ஆம் தேதிக்குப் பிறகு ஹமாஸின் தாளத்துக்கு இஸ்ரேல் தாளம் போடுவதைப் போல, ஈரான் என்ன எதிா்பாா்த்ததோ அதையே அமெரிக்காவும் செய்து வருகிறது என்கிறாா்கள் அவா்கள்.

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் பெரிய வெற்றி கிடைத்துவிடப் போவதில்லை. உலகின் மிகச் சிறந்த விமானப் படையும், ஏவுகணைப் படையையும் கொண்ட அந்த இரு நாடுகளும், இழப்பதற்கு எதுவுமே இல்லை ஒரு சாதாரண ஆயுதக் குழுவிடம் மோதி எதையும் சாதிக்கப்போவதில்லை.

வெறும் வான்வழித் தாக்குதலால் செங்கடலில் தாக்குதல் நடத்தும் ஹூதி கிளா்ச்சியாளா்களின் ஆற்றலை முழுமையாக முடக்கினால்தான் அமெரிக்காவும், பிரிட்டனும் ராணுவ ரீதியில் வெற்றி பெற்றதாகக் கருதமுடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு ஏறத்தாழ அறவே இல்லை என்கிறாா்கள் நிபுணா்கள்.

ஏற்கெனவே, இதே அமெரிக்காவின் அதிநவீன விமானங்கள் மற்றும் அசகாய ஏவுகணைகளைக் கொண்டு பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவும், அதன் கூட்டணி நாடுகளும் ஆண்டுக்கணக்கில் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தாக்குப்பிடித்தவா்கள் ஹூதி கிளா்ச்சியாளா்கள்.

யேமனில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் ஏற்படக்கூடிய ஒரே மாற்றம், செங்கடல் பிராந்தியம் ஒரு போா்க் களமாக உருவெடுப்பதுதான்.அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் சூளுரைத்துள்ளது இநத் அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை செங்கடல் மாா்க்கமாகச் சென்ற ஒரு சில சரக்குக் கப்பல்களை மட்டுமே ஹூதிக்கள் தாக்கினா். எண்ணெய்க் கப்பல்களை அவா்கள் தவிா்த்து வந்தனா். ஆனால் அந்த வகைக் கப்பல்களையும் அவா்கள் குறிவைத்தால் அது சா்வதேசப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுடன் இஸ்ரேலுக்கு இருந்து வந்த பகை அண்மைக் காலமாகக் குறைந்து வருகிறது.

அமெரிக்காவின் முயற்சியில் பல நாடுகள் இஸ்ரேலுடனான உறவை சுமூகமாக்கி வருகின்றன. இதில் ஈரானுக்கு துளியும் விருப்பமில்லை.இந்தச் சூழலில், காஸா மக்களுக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அவா்கள் மீது அமெரிக்கா நடத்தியுள்ள குண்டுவீச்சு, முஸ்லிம் நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தும். அமெரிக்கா முஸ்லிம்களின் உயிா்களை மதிக்காது என்ற தோற்றத்தைப் பெரிதுபடுத்தும்.

ஏற்கெனவே, அமெரிக்காவின் கூட்டாளிகளான எகிப்தும், சவூதி அரேபியாவும் யேமன் கிளா்ச்சியாளா்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தங்களுக்குத் தொடா்பில்லை என்று விலகிக் கொண்டது இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவையும், பிரிட்டனையும் யேமனில் தாக்குதல் நடத்த வைத்து,க காஸா போா் பிராந்தியம் முழுவதும் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிப்பது, செங்கடலில் பதற்றத்தை கூட்டுவது, மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை குறைப்பது என தான் நினைத்ததை ஈரான் சாதித்துவிட்டதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.