;
Athirady Tamil News

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாட்டை கண்டித்து போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

0

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசசபை வாயிலை மறித்து போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்.

இன்றையதினம் (16.01.2024) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் த.நவநீதன் மற்றும் செயலாளர் சி.குகனேசன் ஆகியோர் கூட்டாக இணைந்து ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் எதிர்வரும் 19 ஆம் திகதி அனைத்து வர்த்தகங்களையும் மூடி பிரதேச சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க இருக்கின்றோம். இவ் விடயத்தை ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி மக்களின் ஆதரவையும் கோருகின்றோம்.

மக்கள் ஆதரவு
புதுக்குடியிருப்பு பிரதேசசபை அசமந்தமான செயற்பாட்டையே செய்து வருகின்றது. மாகாணசபை கலைக்கப்பட்டதன் பின்னர் பிரதேச சபையின் செயற்பாடு முழுவதுமாக குறைவடைந்துள்ளது.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை சுத்தம் செய்வது மிக குறைவாகவே இருக்கின்றது. வடிகால்களை சரியாக சீர் செய்யப்படாமல் இருக்கின்றது.

புதுக்குடியிருப்பு நகர்பகுதி முழுவதுமாக கால்நடைகள் இருக்கின்றது, இதனாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றது. இது தொடர்பாக எத்தனையோ கடிதங்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அதேபோன்று புதுக்குடியிருப்பு சந்தை பகுதியிலுள்ள மூன்று புடவை வியாபாரிகளிடமும் தகர கொட்டகையை அகற்றிவிட்டு கட்டடம் கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்து வேறு எவ்வித உடன்படிக்கையும் செய்யாமல் பதினெட்டு மாதம் கழித்து பிரதேசசபை அங்கு சென்று கடை உரிமையாளர்களிடம் இருபது வருடங்களுக்கான வாடகையாக ஒரு மாதம் ஏழாயிரம் ரூபாவினை மாெத்தமாக தந்தால் கடை தருவதாக கூறி இருக்கின்றார்கள்.

அவர்கள் நடாத்துவது சாதாரண சிறிய கடை எனவே இது தொடர்பாக பரிசீலணை செய்து நியாயமான தீர்வினை கேட்டிருந்தோம். ஆனால் பதில் தராமல் எதிர்வரும் 19ஆம் திகதி ஏலம் விட இருப்பதாக ஊடகம் வாயிலாக அறிந்து கொண்டாேம்.

இதனை உரிமையாளர்களுக்கு கூட தெரியப்படுத்தவில்லை. இதனால் வணிக கழகங்கள் இணைந்து அதன் கீழ் இயங்கும் 384 கடைகளும் மூடப்பட்டு பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு எதிராக பிரதேசசபை வாசலை மறித்து போராட்டம் மேற்கொண்டு எமக்கான தீர்வினை பெற இருக்கின்றோம்.

இதற்கு கிராம மக்கள் , வர்த்தகர்கள், பணியாளர்கள், அரச ,அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து எதிர்வரும் 19ஆம் திகதி பிரச்சினைகளை தீர்க்க எம்மோடு இணைந்து கைகோர்த்து ஒன்று சேருமாறு வணிகர் கழகம் கேட்டு கொள்கின்றோம் என தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.