;
Athirady Tamil News

ஆசிரியர் அடித்ததில் மூளை பாதிக்கப்பட்ட மாணவர்., சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் வேதனையில் தந்தை

0

ஆசிரியர் அடித்து தனது மகனுக்கு மூளை பாதிக்கப்பட்டதால் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி தந்தை மனுதாக்கல் செய்துள்ளார்.

மாணவருக்கு மூளை பாதிப்பு
தமிழக மாவட்டமான, திருச்சி காஜாமாலையை சேர்ந்த பால் வியாபாரி இக்பால். இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார்.

அவர் அந்த மனுவில், “நான் திருச்சி காஜாமலை பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். பால் வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை பார்த்து வருகிறேன். எனது மகன் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி சென்று வந்த எனது மகனின் உடலில் காயங்கள் இருந்தது. இதுகுறித்து விசாரித்த போது, பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் எனது மகனை கடுமையாக தாக்கியது தெரியவந்தது.

பின்னர், எனது மகனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். ஆனால், இரவு நேரங்களில் என்னை அடிக்க வேண்டாம் என்று குரல் கொடுப்பான். அப்போது நாங்கள் பயந்து போய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவனுடைய மூளைத்திறன் 75 சதவீதமாக குறைந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இழப்பீடு கேட்ட தந்தை
மேலும் அவர் அந்த மனுவில், “எனது மகனின் மருத்துவ செலவுக்கு தற்போது வரை ரூ.3 லட்சம் செலவாகிவிட்டது. நாங்கள் ஏழ்மையுடன் இருப்பதால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. இது குறித்து பொலிஸ், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, மகனை தாக்கிய பள்ளி ஆசிரியர் முருகதாஸ் மீதும் நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிறுவனின் மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்ற மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனை பார்த்த நீதிபதி, பள்ளியின் ஆசிரியர் முருகதாஸிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.