;
Athirady Tamil News

மன்னார் சதொச மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை நேற்று (11) மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவிக்கையில், மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கானது மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அறிக்கைகள் சமர்ப்பிப்பு
ஏற்கனவே நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை கடந்த தவணை சட்டவைத்திய அதிகாரி ராஜபக்சவினால் சமர்ப்பிக்க பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையில் முழுமையாக எல்லா விடயங்களும் அடங்காத படியால் அது சம்பந்தமாக நேற்று(11) நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.

அதாவது எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து அதற்கான வயது, அதன் பால் நிலை ,இறப்புக்கான காரணம் ,தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருப்பதோடு பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதே நேரம் தடவியல் நிபுணத்துவ(SOCO) பொலிஸார் போன்றவர்களாலும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒட்டு மொத்தமாக எல்லாருடைய அறிக்கைகளும் பெறப்பட்ட பிறகு தான் குறித்த வழக்கு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

இதனை அடுத்து நீதிமன்றமானது சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் வழக்கு விசாரணையை மீண்டும் மே மாதம் 13ஆம் திகதி அழைப்பதற்காக திகதிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.