;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி (CTRB ) ஜனாதிபதி அவர்களால் திறந்துவைப்பு

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி [Clinical Training and Research Block – CTRB] ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/05/2024) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், மாகாண பிரதம செயலாளர், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

942 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் 08 மாடிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டட தொகுதி 6000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.

இதில் மருத்துவக் கற்கை நெறிக்கான விரிவுரை, பரீட்சை மண்டபங்கள், கேட்போர்கூடம் மற்றும் மருத்துவத்திறன் விருத்தி ஆய்வுகூடங்கள் ஆகியன காணப்படுகின்றன.

சத்திர சிகிச்சை அறைகள், மீட்பு அறைகள் (recovery rooms), சத்திர சிகிச்சை கழிவுகளை அகற்றும் பகுதிகள் (disposal zones), கிருமித் தொற்றகற்றும் அறைகள் (sterilization units), சத்திர சிகிச்சை ஆயத்த அறைகள் (preparation rooms) மற்றும் மருத்துவ களஞ்சிய சேமிப்பு வசதிகளும்,

பணியாளர் உடை மாற்றும் அறைகள் (Personnel changing rooms), வரவேற்பு பகுதி (Reception area), நோயாளர் காத்திருப்பு அறைகள் (patient waiting rooms) உள்ளிட்ட பல வசதிகளும் இந்த புதிய கட்டட தொகுதியில் காணப்படுகின்றன.

அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பு மையமும் (Regional Collaboration Centre-RCC) இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், மருத்துவ கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பிராந்திய ஒத்துழைப்பு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,

“யாழ் பல்கலைக்கழகத்திற்கான பாரிய மைல்கல் நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த இந்த கட்டட தொகுதியை விரைவில் திறந்து, பயன்பாட்டிற்கு வழங்குமாறு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். கோரிக்கையை ஏற்று, மே மாதம் கட்டடம் திறக்கப்படும் என அவர் கூறினார். அதன் பின்னர் ஒரு தடவை கூட இது தொடர்பில் பேசவில்லை. எனினும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். இதுவே தலைமைத்துவத்திற்கான சிறந்த வெளிப்பாடு. சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம் இன்றி நாடு இருளுக்குள் கிடந்த போது, தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சவால்களை வெற்றிக்கொண்டார். பல சவால்களை தனி நபராக எதிர்கொண்டு, நாட்டை மாற்றி அமைத்தார். இவ்வாறான ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கில் ஆளுநராக சேவையாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்.” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.