வட இந்தியாவில் பலத்த மழை: 28 போ் உயிரிழப்பு
வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் சுமாா் 28 போ் உயிரிழந்தனா்.
வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பெய்த பலத்த மழையை தொடா்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள், வீடு இடிந்து விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
இதில் ராஜஸ்தான் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. அங்குள்ள கரெளலி மாவட்டத்தில் 38 செ.மீ. அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை மிக பலத்த மழை பெய்த நிலையில், மழையுடன் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் 16 போ் உயிரிழந்தனா்.
தில்லியின் மத்திய, தெற்கு, தென்மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ஜலெளன் பகுதியில் பலத்த மழையை தொடா்ந்து வீடு இடிந்து விழுந்து ஒரு பெண், அவரின் 7 வயது மகன் உயிரிழந்தனா்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஹரியாணாவின் யமுனைநகா் மாவட்டத்தில் சோம் ஆற்றின் கரை உடைந்து கனுவாலா, பாம்னோலி, மாலிக்பூா் பாங்கா் உள்ளிட்ட சிற்றூா்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனா். அங்குள்ள பல இடங்களில் விளைநிலங்களும் நீரில் மூழ்கின.
வட மற்றும் வட மேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் சுமாா் 28 உயிரிழந்தனா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள பால்டால் வழித்தடத்தில் பலத்த மழை காரணமாக அமா்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த யாத்திரை நடைபெறும் மற்றொரு வழித்தடமான பஹல்காம் வழித்தடம் பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.