இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! இறுதி வரை போராடிய குடும்பத்தினர்!

ஐக்கிய அமீரகத்தில் இரு வேறு கொலை வழக்குகளில் கைதான இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் (வயது 43) என்பவர் ஐக்கிய அமீரகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு அந்நாட்டில் தன்னுடன் வேலை பார்த்து வந்த கேரளத்தின் திரூரைச் சேர்ந்த மொய்தீன் என்பவரை கொலை செய்து அல் – அயின் பகுதியிலுள்ள பாலைவனத்தில் புதைத்தாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் பணியாற்றி வந்த முரளிதரன் கடந்த பிப்.14 2025 அன்று இந்தியாவிலுள்ள அவரது தாயாரான ஜானகியை செல்போனில் தொடர்புக்கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. கால்பந்த் வீரரான முரளிதரன் தனது தந்தையைப் போலவே ஐக்கிய அமீரகத்தில் கார் ஓட்டுநராக பணியாற்ற சென்றுள்ளார்.
இதுகுறித்து, அவரது தாயார் கூறுகையில் முரளிதரன் அங்கு பணியாற்றிய காலத்தில் வாரத்திற்கு இருமுறை அவருடன் செல்போனில் பேசுவார் என்றும் கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் இந்த வழக்கில் கைதானது முதல் அவரை ஒருமுறைக் கூட பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பின்னர், அவர் இந்த கொலையை ஒப்புக்கொண்டு அந்நாட்டு அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பலியானவரின் குடும்பத்தினர் முரளிதரனை மன்னித்தால் அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதால் அதற்காக பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவர் கடந்த பிப்.14 அன்று தனது குடும்பத்தினரை தொடர்புக்கொண்டு அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புக்கொண்ட போது அவர்கள் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஹம்மது ரினாஷ் அரங்கிலோட்டு (வயது 29) என்பவர் அந்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான அப்துல்லா ஜியாத் ரஷித் என்பவரின் கொலை வழக்கில் கைதாகி கடந்த 2 ஆண்டுகளாக அல் அயின் மன்சின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஐக்கிய அமீரகத்தில் அவருடன் பணியாற்றிய ஹைதரபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் ரினாஷுக்கும் தொடர்புவுள்ளதாக சந்தேகித்த அப்பெண்ணின் கணவரான ரஷித் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதம் அதிகரித்து ரஷித் குத்திக்கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. அவரை அதிலிருந்து காப்பாற்ற பலியானவரின் குடும்பத்திடம் ரினாஷின் குடும்பத்தினர் மன்னிப்பை வேண்டிய நிலையில் அது தொடர்ந்து தோல்வியில் முடிந்துள்ளது. மேலும், இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ரினாஷை காப்பாற்ற உதவி கோரியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்.28 அன்று ஐக்கிய அமீரக அதிகாரிகள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு முரளிதரன் மற்றும் முஹம்மது ரினாஷ் அரங்கிலோட்டு ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அவரது மரண தண்டனை நிறைவேற்ற படுவதற்கு முந்தைய நாள் செல்போன் மூலம் தனது தாயாரிடம் பேசிய ரினாஷ் தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுததாகவும் அதற்கு தான் எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு அவரை காப்பாற்றுவேன் என தான் ரினாஷுக்கு உறுதியளித்திருந்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று (மார்ச் 6) ரினாஷின் உடல் அபுதாபியில் அவரது தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.