;
Athirady Tamil News

யாழ் மாவட்ட செயலகத்துற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்

0

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் ரி. பி. சரத் ஆகியோர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலகத்தில் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

இதன் போது யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரட்ண, மேலதிகச் செயலாளர் எம். எம். நயமுதீன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்,

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை வரவேற்று, யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக இவ்வாண்டு 1258 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு அதற்கான தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை விபரித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையாகவுள்ளதாகவும் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை முன்வைத்ததுடன், இதுவரை விடுவிக்கப்பட்ட காணி மற்றும் விடுவிக்க வேண்டிய காணியின் விபரங்கள்,தெல்லிப்பளை பிரதேச உள்ளக வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதிகள், மின்சார இணைப்பு வசதிகள் தொடர்பாகவும் விளக்கமளித்து அது தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக, தமது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றிலொரு பங்கு மீள்குடியேற்றம் உட்பட ஏனைய திட்டங்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தேவைப்பாடுகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடிய நிதி ஒதுக்கீடு செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் உரிய திட்டங்களுக்கு செலவு செய்து முன்னேற்ற அறிக்கைகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை யின் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.