;
Athirady Tamil News

விநாயகர் பற்றி குரோக் – எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!

0

இந்து மக்களால் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகர் பற்றி, குரோக் உடன் எலான் மஸ்க் நடத்திய உரையாடலை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர, அது இந்தியர்களால் வைரலாக்கப்பட்டிருக்கிறது.

ஞானத்தை தொழில்நுட்பம் சந்தித்த போது என்ற பொருள்படும் தலைப்பில், விநாயகர் படத்தை இணைத்து, குரோக் ஏஐ உடனான எலான் மஸ்க்கின் உரையாடல் இன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் – குரோக்குடனான தனது உரையாடல் இணைப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதாவது, எக்ஸ் ஏஐ-யான குரோக்கின் டூல்களுக்கு புகைப்படங்களை அடையாளம் காணும் திறனை சோதிக்க, எலான் மஸ்க், ஒரு பாரம்பரிய பித்தளை விநாயகர் சிலையின் புகைப்படத்தை குரோக் டூல் மூலம் பதிவேற்றி, “இது என்ன?” என்று கேட்டுள்ளார்.

நிச்சயம், குரோக் அளித்த பதிலை எலான் மஸ்க் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. குரோக், அளித்த பதில் வியக்கத்தக்க வகையில் மிகத் துல்லியமாக இருந்தது.

அந்தப் படத்தில் இருப்பது விநாயகர் என்று சரியாக அடையாளம் கண்டுகொண்ட குரோக், “இந்து தெய்வமாகப் போற்றப்படும் ஒரு சிறிய பித்தளை விநாயகர் சிலை” என்றும்,

முக்கிய அம்சங்களாக ஒரு தந்தத்துடன் கூடிய யானைத் தலை, மோதகம், அங்குசம் உள்ளிட்டவற்றை ஏந்திய நான்கு கரங்கள், தாமரைப் பூவின் மீது அமர்ந்திருக்கும் தோரணை, தலைக்குப் பின்புறம் அழகிய வளைவு மற்றும் தெய்வத்தின் காலடியில் அவரது வாகனமாகக் கருதப்படும் எலி ஆகியவை “முக்கிய அடையாளம் காணும் அம்சங்கள்” என்று குறிப்பிட்டுள்ளதோடு நின்றுவிடவில்லை.

விநாயகர் பற்றி குரோக் இவ்வாறு விளக்கியிருக்கிறது,

விநாயகர், தடைகளை நீக்கி, பக்தர்களைக் காக்கும் தெய்வம் என்றும், முழுமுதற் கடவுள், ஞானம் அளிப்பவர், செழிப்பின் அடையாளமாகத் திகழும் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தகைய சிலைகள் பொதுவாக வீடுகளில் உள்ள பூஜை அறைகளில், நாள்தோறும் குடும்பத்தினர் வழிபாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு பாரம்பரிய தென்னிந்திய வழக்கம், விநாயகரை பித்தளை மூர்த்தியாக வைத்து வழிபடுவது, இந்த சிலை சிவப்பு நிற பின்னணியில் மர பீடத்தில் வைக்கப்பட்டிருப்பது போல அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு இந்தியர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பணக்காரர், இந்து மக்களின் கலாசாரத்தில் வேரூன்றி இருக்கும் ஒரு கடவுள் பற்றி ஆர்வம் செலுத்தியிருப்பதாகக் கூறி பலரும் இதனை பகிர்ந்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.