;
Athirady Tamil News

முதல் கிறிஸ்துமஸ் உரையில் காஸாவை நினைவுகூர்ந்த போப் 14 ஆம் லியோ!

0

வாடிகன் நகரின் புதிய தலைவரான போப் பதினான்காம் லியோ, தனது முதல் கிறிஸ்துமஸ் திருப்பலி உரையில் காஸா மக்களின் துன்பங்களை நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிச. 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில், இந்தத் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.

வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினாகாம் லியோ, வாடிகனின் புனித பீட்டர் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைக்காகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் திருப்பலி உரையாற்றினார்.

இந்தச் சிறப்புப் பிரார்த்தனையில், காஸா உள்பட வன்முறை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மக்களை நினைவுகூர்ந்து போப் லியோ பேசியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“பல வாரங்களாக மழை, காற்று மற்றும் குளிரில் துன்பப்பட்டு வரும் காஸா மக்களைக் குறித்தும், பல்வேறு நாடுகளிலும் உள்ள அகதிகளைக் குறித்தும் அல்லது நமது நகரங்களிலேயே வீடுகளின்றி உள்ள ஆயிரக்கணக்கான மக்களைக் குறித்தும் நாம் எப்படி சிந்திக்காமல் இருப்பது” என்று கூறியுள்ளார்.

இத்துடன், பல போர்களால் சோதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற மக்களின் பலவீனத்தையும், ஆயுதம் ஏந்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டு போருக்கு அனுப்பப்படும் இளைஞர்களைப் பற்றியும், அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, உலகப் பிரச்னைகள் அனைத்தும் முறையான பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என போப் பதினான்காம் லியோ, தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.