;
Athirady Tamil News

மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் அமைந்துள்ள தஷ்காய் என்ற பகுதியில் இந்த வெடி விபத்து வியாழக்கிழமை மாலை ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து இதுவரை 18 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதை அந்த மாவட்ட காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். வெடி விபத்தை அடுத்து இடிபாடுகளில் அவர்கள் சிக்கி உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தரப்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மாவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மாநில அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட கடந்த 2014-ல் தடை உத்தரவு அமலானது. இருப்பினும் அந்த மாநிலத்தில் அதன் செயல்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எலி-வளை சுரங்கம் வெட்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதனால் அந்த மாநிலத்தில் கனிம வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தகவல்.

எலி-வளை சுரங்கம் தடை செய்யப்பட்டது ஏன்? – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த முறை சுரங்கப் பணியை தடை செய்தது. இது அறிவியல் பூர்வமானது அல்ல எனக் கூறி தடை செய்தது. மேகாலயாவில் கடந்த 2018-ல் சட்டவிரோதமாக எலி-வளை அமைத்து சுரங்கப் பணியில் ஈடுபட்ட 15 பேர் உள்ளே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பல மாதங்களாக மீட்புப் பணி நடந்தது. இரண்டு சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மேலும், இந்த முறையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சூழலில் மேகாலயாவில் எலி-வளை சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட்டன. மணிப்பூரிலும் இதற்குத் தடை உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.