;
Athirady Tamil News

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

0

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பல நட்பு நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்-கை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இன்று சந்தித்தார்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் முக்கிய நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தானில் இரு நாட்டு அதிகாரிகளும் நடத்திய நீடித்த பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 4 நாள்கள் பயணமாக சீனா சென்ற பாகிஸ்தான் பிரதமர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். அவருடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிர் உடன் சென்றார்.

அப்போது பேசிய ஷி ஜின்பிங், “மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருகின்றது. இரு நாடுகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு பனிப்போர் மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும்” என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளின் தலைமை அதிகாரிகளுடன் போனில் பேசியும் சந்திப்புகளை நடத்தியும் அமைதியான முறையில் சீனா மத்தியஸ்தம் செய்து வந்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேசுகையில், “உலகம் நெருக்கடியான தருணத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது நிலைமை சரியாகி வருகின்றது. அமைதியை நிலைநிறுத்த சீனாவின் ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த தொடர்ந்து பல நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்கா நிலைப்பாடுகளை மாற்றுவதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.