தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நெடுந்தீவு பிரதேச மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகளைச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 10 பொதுமக்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அத்துடன், தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அதன் போது, நெடுந்தீவுக்கான மருத்துவர்கள் மற்றும் மருந்து வழங்குநர்களை அடிக்கடி இடமாற்றம் செய்யாமல், அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருந்து சேவையாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் , நெடுந்தீவில் மாதம் ஒருமுறை மருத்துவ நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும் சில இறங்குதுறைகளில் பொது மலசலகூட வசதிகள் இன்றி நோயாளர்கள் அவதியுறுவது சுட்டிக்காட்டப்பட்டபோது, வடக்கு மாகாணத்தில் 2027ஆம் ஆண்டுக்குள் தேவையான இடங்களில் தனியார் அல்லது பொது மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி விசேட நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளமையை கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.