கழிப்பறையில் பெற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய கொடூர தாய்
இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், வயிற்று வலி எனக் கூறி அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் ஒருவர், கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்து பின்னர் அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண், உடல் பரிசோதனை செய்ய மறுத்ததால் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் கழிப்பறைக்கு சென்ற போது அங்கு அழுகுரல் கேட்டதையடுத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்போது மருத்துவமனை பின்புறம் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்ததை கவனித்த அவர்கள் உடனடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு உடனடியாக மீட்கப்பட்டது. மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
திருமணம் ஆகாத நிலையில் குழந்தை பிறந்ததால், அவசர நிலையில் கழிப்பறை ஜன்னல் வழியாக குழந்தையை வீசியதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் தாயும் குழந்தையும் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம் பெண் மீது பொலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.