மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமென்றும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாதென இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் கோரியிருந்தனர்.
விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கட்டுமான அனுமதி தொடர்பிலான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது என்றும், அதனை மேல் நீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும் கூட அவற்றை இடித்தளிக்குமாறு கட்டளையிடுவதற்கான நியாயாதிக்கம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்றும், ஆனால் இவ்வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையினால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரினால் செய்யப்பட்ட இவ்விண்ணப்பம் முன்முதிர்வானது என்றும் வாதிட்டார்.
எனவே, இடைக்காலக் கட்டளைகளை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதனையும் கருத்திற்கொண்டு வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சட்டத்தரணி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
சட்டத்தரணியின் சமர்ப்பணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.