அருகம்பே – சாவாலை வீதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை
கிராமத்திற்குள் புகுந்து மக்கள் நடமாடும் வீதிகளில் சுற்றித்திரிந்த இக் காட்டு யானையைக் கண்ட பிரதேச வாசிகள் பீதியடைந்ததுடன், ஊரார் ஒன்றுதிரண்டு அதனை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றனர். இதன்போது ஆத்திரமடைந்த காட்டு யானை, மக்களை நோக்கிப் பாய்ந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் சிதறியோடினர்.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களோ அல்லது வீடுகளுக்கான உடைமைச் சேதங்களோ எதுவுமின்றி யானை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குத் திரும்பிச் சென்றுள்ளது.
இச் சம்பவத்தின் போது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிகவும் துணிச்சலுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு, காட்டு யானைக்கு எவ்வித ஆபத்தும் அல்லது காயங்களும் ஏற்பட்டு விடாத வகையில் அதனை மிகச் பாதுகாப்பான முறையில் காட்டுப் பகுதிக்குள் விரட்டியடிக்க உதவினர்.
அருகம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதனால், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.