யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும்
யாழ்ப்பாண மாவட்டத்தின் இயற்கை, பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சுற்றுலா வளங்களை மேலும் மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தலைமையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக, சுற்றுலாத்துறை அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 130 மில்லியன் நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டதுடன், அவற்றை துரிதப்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கருத்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் இயற்கை, பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சுற்றுலா வளங்களை மேலும் மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , மாவட்ட செயலர் ம.பிரதீபன் , உள்ளூராட்சி சபை தவிசாளர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
