;
Athirady Tamil News

மனிதப் பேராசைக்குப் பலியான தெற்காசியாவின் கொம்பன் யானை!

0

இலங்கையில் சமீபகாலங்களில் பரபரப்புக்குப் பஞ்சமிருப்பதில்லை. ஆனால் அண்மைய நாட்களில் ஒட்டுமொத்த இலங்கையர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியதோடு, அரசியல் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த விடயங்களில் ஒன்றுதான் காவந்திஸ்ஸவின் மரணம்.

இலங்கையின் வனவிலங்கு வரலாற்றில் மிக முக்கியமானதும், தெற்காசியாவின் மிக நீண்ட தந்தங்களைக் கொண்டதும் கம்பீரமானதுமாகப் போற்றப்பட்ட ‘காவந்திஸ்ஸ’ என்னும் மாபெரும் காட்டு யானையின் மரணம் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கலாவெவ, பல்கடவல, கல்கமுவ உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரமாக உலாவி வந்த இந்த யானை, கடந்த மாதம் முழங்காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் போராடி, இறுதியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. யானைகள் மரணிப்பதைப் பற்றித்தான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோமே, காவந்திஸ்ஸவின் மரணத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு என்று அனேகர் நினைக்கலாம். காவந்திஸ்ஸ உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் காந்தமாக கருதப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கெததியுல்வெவ- கசிகொடே சந்தியில் காவந்திஸ்ஸ காணப்பட்டதாக செய்திகளை அறிந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் அப்பகுதிக்கு விரைந்தனர். இது அதனது பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பிய அதேநேரம், அதனைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுமாறு யானை ஆர்வலர்களும் அதிகாரிகளும் விடுத்த வேண்டுகோள்களையும் இந்நேரம் நினைவு கூர வேண்டும்.

இலங்கையில் யானையின் வாழ்நாளில் அதன் சுற்றுலா, கலாசார மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பு 3.8 பில்லியன் ரூபா என்று கூறப்படுகிறது. காவந்திஸ்ஸ போன்ற ஒரு கொம்பன் யானையைப் பொறுத்தவரை, இந்த மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

மனிதப் பேராசைக்கும் காட்டுயிர் பாதுகாப்புச் சவால்களுக்கும் இடையிலான இடைவெளியை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. காவந்திஸ்ஸ ஒரு இராட்சத யானை. கிட்டத்தட்ட 11 அடி உயரம் கொண்ட இது, இலங்கையின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய கொம்பன் யானையாகும். தெற்காசியாவிலேயே மிகப்பெரிய யானை இதுதான் என்று கூறுவோரும் இருக்கிறார்கள். உயரத்தில் பெரியதாக இருந்தாலும் அது அமைதியானது. கல்கமுவ பகுதியில் அது மக்களைத் தாக்கியதாகவோ அல்லது பயிர்களைச் சேதப்படுத்தியதாகவோ எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. அது அக் கிராம மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது. மனித மற்றும் யானை சகவாழ்வுக்கு காவந்திஸ்ஸ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்பட்டது. ஆனால் இவ்வாறான யானை மனிதனின் பேராசைக்கு இரையானதுதான் மிகப்பெரிய அவலம். மனிதனின் இயற்கையை ஆளும் பேராசையானது யானைகளின் உயிரைப் பறிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; மாறாக யானைகளின் உணவிற்கான வழித்தடங்கள் இடைமறிக்கப்படுவதால் யானைகள் கிராமங்களுக்குப் புகுந்து பேரழிவுகளை ஏற்படுத்துவதோடு, மனித உயிர்களுக்கும் ஆபத்தானவையாக மாறுகின்றன.

அது அவ்வாறிருக்க, செப்டம்பர் 21 ஆம் திகதி வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஒருவரின் கண்ணுக்கு காவந்திஸ்ஸ தென்பட்ட போது, அதன் உடலில் எந்தவிதக் காயங்களும் இருக்கவில்லை. 22ஆம் திகதியன்று ஒரு கிராமவாசி வழங்கிய தகவலின்படி, யானையின் வலது முன்னங்காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. செப்டம்பர் 21 மாலைக்கும் 22ஆம் திகதி காலைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இது நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. செப்டம்பர் 23 முதல் 24 வரையான காலப்பகுதியில் கல்கமுவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் யானையைப் பார்வையிட்டு நிக்கவரட்டிய கால்நடைப் பிரிவுக்கு அறிவித்திருந்தனர். செப்டம்பர் 24 அன்று வனவிலங்கு கால்நடை மருத்துவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை காவந்திஸ்ஸவுக்குச் செலுத்தினார். செப்டம்பர் 25 அன்று யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு காயம் கவனமாகப் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. எனினும், மயக்க மருந்தின் தாக்கம் மற்றும் தொடர்ச்சியான சிகிச்சைகள் குறித்த பல்வேறு விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

கலாவெவ மற்றும் லீகொலவெவ காடுகளில் வாழ்ந்த காவந்திஸ்ஸவுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், தீவிரமான தொற்று மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அது ஒக்டோபர் நடுப்பகுதியில் தனது இறுதி மூச்சை விட்டது.

யானைக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் வனவிலங்குக் காப்பகம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, 45 வயதைக் கடந்த (இயற்கை ஆயுளின் இறுதிப் பகுதியை நெருங்கிய) இந்த யானைக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து மற்றும் சிகிச்சைகள் அதன் பலவீனத்தை மேலும் அதிகரித்ததா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக தங்கொல்ல இது குறித்துக் கூறுகையில், தற்கால மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மிகவும் மிதமானவை என்றும், விலங்கின் உயரம், நீரிழப்பு மற்றும் உடல்நிலை ஆகியவற்றுக்கு ஏற்பவே தகுந்த அளவு தீர்மானிக்கப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், இறுதி நாட்களில் சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் டொக்டர் சந்தன ஜெயசிங்க, உயர்ரக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் வழங்கப்பட்டதாகவும், கூட்டத்துடன் இருந்ததால் மல மாதிரிகளைப் பெறுவதில் தடைகள் இருந்தபோதிலும் உயிரைக் காப்பாற்ற முழுமையான முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

காவந்திஸ்ஸவின் மரணம் அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் யானையின் மரணத்தை வனவிலங்கு திணைக்களத்தின் தோல்வியாகச் சுட்டிக்காட்டியதோடு, சர்வதேச தரத்திலான விசாரணைகள் வேண்டும் என்றும் கூக்குரலிட்டனர். மனித உயிர்களை விட விலங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சில தரப்பினர் வாதாடினர். எனினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற 11ஆவது ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, காவந்திஸ்ஸவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சுற்றுச்சூழல் குற்றங்களில் ஈடுபடுவோர் எத்தகைய அரசியல் செல்வாக்கு உடையவர்களாக இருப்பினும், சட்டம் சமமாக, கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

113 காடுகள் காப்புக் காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, 71,900 ஹெக்டேயர் நிலப்பரப்பு அரச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்று புதிய யானை வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வனவிலங்கு திணைக்களத்தின் களப்பணிகளை மேம்படுத்த 100 பிக்கப் வாகனங்கள், 185 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 9 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3,500 மின்வேலி உதவியாளர்கள் மற்றும் 5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எத்தகைய ஆளணி வழங்கப்பட்டாலும் சட்டத்திருத்தத்தின் மூலமே சுற்றாடலையும் வன விலங்குகளையும் பாதுகாக்க முடியும் என்பதால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சுற்றுச்சூழல் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது.

காவந்திஸ்ஸவின் மரணம் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள வேளையில், அனுராதபுர மாவட்டத்தில் மட்டும் கடந்த காலங்களில் பல யானைகள் கொடூரமாகப் பலியாகியுள்ளன. மதவாச்சி பகுதியில் யானைக் குட்டி ஒன்று காயத்துடன் கண்டறியப்பட்டது.

கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் ‘ஹக்க பட்டாஸ்’ காரணமாக யானைக் குட்டி ஒன்று பாதிக்கப்பட்டது.

விலாச்சி மற்றும் ரம்பாவ பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் யானைகள் நடமாடியதுடன், சில உயிரிழந்தும் உள்ளன.

புள்ளிவிபரங்களின்படி, 2010 முதல் 2026 மே வரை சுமார் 976 யானைகள் துப்பாக்கிச் சூட்டினால் மாத்திரம் உயிரிழந்துள்ளன. மேலும் 2020 முதல் 2026 காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் 2,473 யானைகளும், யானைத் தாக்குதல்களால் 934 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். இது மனிதனுக்கும் யானைக்குமிடையிலான மோதலின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டமிடல்களுக்காக, முன்னாள் அமைச்சுச் செயலாளர் எச்.ஏ. சரத் விஜயசிங்க தலைமையில் விசேட நிபுணர் குழு ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். பேராசிரியர் சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார், பேராசிரியர் யூ.கே. கலிங்க பத்மலால், சட்டத்தரணி ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரண்ய ஜெயரத்நாயக்க ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் இக்குழு, வனவிலங்குப் பாதுகாப்பிற்கான நிலையான செயற்பாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும்.

ஒரு நாட்டின் வளம் அதன் பொருளாதாரக் குறியீடுகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. தூய்மையான காற்று, பாதுகாப்பான குடிநீர் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகியவை மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கு அவசியமானவையாகும். இந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் என்பது வெறுமனே வீதிகளைச் சுத்தம் செய்வது பற்றியது மாத்திரமல்ல. இது கழிவுகளைக் குறைத்தல், முறையான கழிவு மேலாண்மையை உறுதி செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து நாம் சிந்திக்கும் முறையையும் அதை அணுகும் விதத்தையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய மாற்றமாகும்.

காவந்திஸ்ஸவின் மறைவு என்பது மிக நீண்ட பெரிய தந்தம் கொண்ட யானையின் இழப்பாக மாத்திரமே பார்க்கப்படக் கூடாது. மாறாக மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்துச் செல்வதன் அடையாளம் இது. அரசியல் குறுகிய நோக்கங்களை விடுத்து, நீண்ட காலத் திட்டமிடல், கடுமையான சட்ட அமுலாக்கம் மற்றும் மனிதனுக்கும் யானைக்குமிடையிலான மோதலுக்கான நிரந்தரத் தீர்வுகளை நோக்கி ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காவந்திஸ்ஸவின் மறைவானது எமது வனவிலங்கு தொடர்பான பாதுகாப்புக் கொள்கைகளில் ஒரு புதிய விடியலை உருவாக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.