;
Athirady Tamil News

உயிராபத்தான நிலையில் ஷிரந்தி: நலத்துடன் வீடு சென்ற மகிந்த.. நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதம்

0

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கோரி இன்று நீதிமன்றில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு அவ்வப்போது ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு தொடர்பான பாதிப்புகள் தீவிரமடைந்ததையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சியோகிராம் பரிசோதனை
தற்போது மகிந்த ராஜபக்ச சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள போதிலும், அவரைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை மகிந்த ராஜபக்சவைப் பராமரித்து வந்த ஷிரந்தி ராஜபக்சவும் இதயப் பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இதயத்துக்கு ஒட்சிசன் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஷிரந்தி ராஜபக்சவுக்கு எஞ்சியோகிராம் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளையும் மேலும் இரண்டு சத்திரசிகிச்சைகளையும் மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு சத்திரசிகிச்சை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் கருவியின் உதவியுடன் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சவுக்கு பிணை
மேலும், இரண்டாவது சத்திரசிகிச்சையாகத் திறந்த இதயச் சத்திரசிகிச்சை இன்று பிற்பகல் 4 மணிக்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தனது தந்தையைப் பராமரிக்க வேண்டியுள்ளதுடன், தாயாரையும் நேரில் சென்று பார்க்க வேண்டியுள்ளதால், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்க வேண்டும் என அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைப்பது தண்டனையாக அமைந்துவிடக் கூடாது என வாதிட்ட அவர், நாமல் ராஜபக்சவால் தனது தாயாரைச் சந்திக்க முடியாமல் போனால், எதிர்காலத்தில் அவரைப் பார்க்க முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தாய், தந்தையரைக் கவனித்துக்கொள்வது நாமல் ராஜபக்சவின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அலி சப்ரி, மனிதாபிமான மற்றும் அனுதாப அடிப்படையில், அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளையும் கருத்திற்கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாதத்தின்போது, போரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்த பின்னரும் அவரது பெற்றோரைக் கவனித்துக்கொண்டதாகவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.