வங்கி அதிகாரிகள் போல் நடித்து 46 இலட்சம் ரூபாய் மோசடி; மருத்துவரின் வேதனை பதிவு
இலங்கையில் வங்கி அதிகாரிகள் போல் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டவர்களால், 70 வயதுடைய தனது தந்தை 46 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாக மருத்துவர் அமில பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றில் மருத்துவர் அமில பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளதாவது, தனியார் வங்கி ஒன்றின் சார்பில் வரிக் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி, தனது தந்தையை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர்
இதன்போது, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP) குறித்த நபர் கோரியுள்ளார். மோசடியை அறியாத அவரது தந்தையும் அந்தத் தகவல்களை வழங்கியுள்ளார்.
அவரது வங்கிக் கணக்கிலிருந்து 46 இலட்சம் ரூபாய் மோசடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமில பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், அதே வாரத்தில் இதுபோன்ற இரண்டு மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி அதிகாரிகள் அல்லது அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு தொடர்புகொள்ளும் மோசடிக்காரர்களிடம் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், அவதானமாக இருக்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
வங்கிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தொலைபேசி ஊடாக OTP, PIN அல்லது வங்கிக் கடவுச்சொற்களைக் கோருவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையில் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அழைப்பைத் துண்டித்து, வங்கியின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.