;
Athirady Tamil News

சட்டங்கள் நாட்டுக்கா, ஆட்சியாளர்களுக்கா? (கட்டுரை)

0

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் எவராவது இருக்கிறார்களா? 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சிலர் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். ஏனெனில் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள், இனி பாராளுமன்றத்தில் இருக்க முடியாது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், ஒக்டோபர் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்திருத்தத்துக்கு தமது அனுமதியை வழங்கும் வகையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன திங்கட்கிழமை (31) அதில் கையொப்பமிட்டார். அத்தோடு அது நாட்டின் அடிப்படை சட்டத்தின் அங்கமாகிவிட்டது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் பிரதான அம்சம், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பானதல்ல. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசியலமைப்புச் சபையை மீண்டும் நிறுவி, அதன் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பதே அதன் முக்கிய நோக்கமாகியது. இரட்டைப் பிரஜாவுரிமை பற்றிய விடயம், ஓர் உதிரி விடயமாகவே அதில் சேர்க்கப்பட்டு இருந்தது.

ஆனால், இரட்டைப் பிரஜாவுரிமை பற்றிய விடயமே, அதன் முக்கிய அம்சம் என்பதைப் போல் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கடந்த சில வாரங்களாக கருத்து வெளியிட்டு வந்தன. எனவே, அந்த அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, எல்லோரும் பாராளுமன்றத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் அவ்வாறானவர்கள் பத்துப் பேர் இருப்பதாக, ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார். அதையடுத்தே சிலர், டயனா கமகே போன்ற சில எம்.பிக்களை சுட்டிக்காட்டி, அவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் என்று கூறி வருகின்றனர்.

வடக்கில், சில தமிழ் அரசியல்வாதிகளும் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அவ்வாறானவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்களா என்று ஆராய்வது தமது கடமை அல்ல என சபாநாயகர் கூறியிருந்தார்.

அவ்வாறே, அது தமது கடமையல்ல என்றும், அவ்வாறானவர்கள் இருப்பதாக எவரிடமும் ஆதாரங்கள் இருந்தால், அவர்கள் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்களை பாராளுமன்றத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையகத்தின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் அவ்வாறானவர்கள் இல்லை என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திங்கட்கிழமை (31) தெரிவித்தது. அது பெரும்பாலும் சரியானதாகத் தான் இருக்க வேண்டும்.

ஏனெனில், ஒருவரைத் தவிர தற்போது நாடாளுமன்றததில் உள்ள அனைவரும், 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேரதலில் தெரிவானவர்கள் ஆவார். எம்.பியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, 2021ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், அவரது இடத்துக்கு நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தனவே அந்த ஒருவராவார்.

அந்தத் தேர்தல் நடைபெறும் போது, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் அமலில் இருந்தது. அதன் கீழ், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடவோ, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவோ முடியாது. எனவே, அவ்வாறாறனவர் எவரேனும் இப்போது பாராளுமன்றத்தில் இருந்தால், அவர் நிச்சயமாக தேர்தலின் போது, தாம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் என்பதை மறைத்துத் தான் வேட்பாளராக இருந்திருக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமை என்பதை மறைத்து, ​தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் விடயம் வெளியே வந்தால், அவர் தேர்தலுக்காக செலவழித்த கோடிக் கணக்கான பணம் வீணாகிவிடும். அவ்வாறான சூதாட்டத்தில் ஒருவர் ஈடுபடுவாரா என்பது சந்தேகமே. ஆனால், எந்தவொரு விடயம் தொடர்பாகவும் உத்தரவாதம் அளிக்கவும் முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த மஹிந்தவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்‌ஷவை குறிவைத்தே, இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடும் உரிமையை இரத்துச் செய்யும் சட்டம், கடந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அவருக்காகவே 20ஆவது திருத்தத்தின் மூலம் அது நீக்கப்பட்டது. அவருக்காகவே 21ஆவது திருத்தத்தின் மூலம் இப்போது மீண்டும் அத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசில் பெரும் ஊழல் பேர்வழி என்பது அநேகமானோரின் குற்றச்சாட்டாகும். அவர் மட்டுமன்றி ஊழல் பேர்வழிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ராஜபக்‌ஷ குடும்பத்தினரையும் நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகளையும் அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கக் கூடிய சட்டங்களை இயற்ற முடியும் என்றால் நல்லது தான்!

ஆனால், குறிப்பிட்ட நபர்களைக் குறி வைத்து அல்லது, தனி நபர்களினதோ கட்சிகளினதோ நலன்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் சட்டங்களை இயற்றுவது ஜனநாயக முறையல்ல.

தனி நபர்களின் நடவடிக்கைகளால் பாடம் படித்து, அதன்படி எதிர்கால நலனுக்காகப் பொதுவான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது வேறு விடயம்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் என்ற காரணத்தால், பசில் ஊழல் பேர்வழியாகவில்லை. அதேபோல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் அனைவரும் திருடர்களும் அல்ல. எதிர்க்கட்சிகள் தலைதூக்க இடமளிக்காமல் பசில் செயற்பட்டமையே, கடந்த அரசாங்கம் அவரை குறிவைத்து, இந்தச் சட்டத்தை கொண்டு வந்தது.

மஹிந்தவின் அரசாங்கம் பெரும்பாலான மக்களால் வெறுக்கப்பட்டு வந்த நிலையிலும், பசில் மோசமான ஊழல் பேர்வழி என்று பெயர் பெற்றதாலுமே, அப்போது அது நியாயமாகத் தென்பட்டது.

அச்சட்டம் பிழையானது என்று கூற முடியாது. ஆனால், அதனை ஒரு குறிப்பிட்ட நபரை குறிவைத்து நிறைவேற்றியமை, நல்லாட்சி சித்தாந்தங்களை மீறும் செயலாகும்.

இந்தச் சட்டம் மட்டுமன்றி, பெரும்பாலான சட்டங்கள் நாட்டினதும் பொது மக்களினதும் நலனுக்காக இயற்றப்படுவதற்குப் பதிலாக, ஒரு குழுவினரது அல்லது சில நபர்களினது நலன்களுக்காகவே இயற்றப்படுகின்றன. உதாரணமாக, தொழிலாளர் போராட்டங்களை அடக்கி, நாட்டை ஆட்சி செய்யும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன 1977ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்தார்.

அவர், 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய அரசியலமைப்பின் பிரகாரம், எம்.பிக்கள் கட்சி மாற முடியாது. இது எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளும் கட்சியான தமது கட்சிக்குத் தாவ முயலும் எம்.பிக்களுக்கு தடையாக இருப்பதைக் கண்ட அவர், கட்சி மாறியவர் முன்னைய கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட எம்.பி அதை எதிர்த்து வழக்காடும் வகையில் 1979ஆம் ஆண்டு அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தத்தை நிறைவேற்றினார்.

1980ஆம் ஆண்டு அவர் முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமையை ஏழு வருடங்களுக்கு இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

1982ஆம் ஆண்டளவில் அவரது அரசாங்கம் சரிவடைய ஆரம்பித்து இருந்தது. இந்த நிலையில், தமது கட்சி மேலும் மக்கள் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும்முன்னர், பிரதான போட்டியாளரான சிறிமா போட்டியிட முடியாத நிலையிலும், ஜனாதிபதி தேர்தலை நடத்தி, தமது ஆட்சியை நீடித்துக் கொள்ள அவர் நினைத்தார்.

அதற்காக, ஜனாதிபதி ஒருவர் பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியானால், ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய வகையில், 1982ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூன்றாவது திருத்தத்தை கொண்டுவந்தார். அதன்படி அவர் அதேயாண்டு மீண்டும் ஜனாதிபதியானார்.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரான அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாஸ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப்பின் உதவியை நாடினார். தேர்தல்களின் போது ஆசனங்களைப் பெற, ஒரு கட்சி குறைந்த பட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த வெட்டுப் புள்ளியை ஐந்து சதவீதமாக குறைத்தால், உதவி வழங்குவதாக அஷ்ரப் கூறினார். அதன்படி, 1988ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 15 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அந்த மாதம் 17 ஆம் திகதி, அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், அஷ்ரப்பின் வேண்டுகோள் சட்டமாக்கப்பட்டது.

மாறிமாறி ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும் கூட்டும் வகையிலும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 17ஆவது, 18ஆவது, 19ஆவது, 20ஆவது, 21 ஆவது ஆகிய திருத்தங்களும் நாட்டு நலன்களைப் பார்க்கிலும், கட்சிகளின் விருப்ப வெறுப்புகளின் படியே கொண்டுவரப்பட்டன.

இலங்கையில் பெரும்பாலான பிரச்சினைகளுக்குப் பிரதான காரணம் மிகவும் உயர் பதவியை வகிப்பவரிலிருந்து மிகவும் கீழ்மட்ட பதவியை வகிப்பவர் வரை, சகலரும் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றில் ஈடுபடுவதும் செயற்றிறன், கடமை உணர்வு போன்றவை இல்லாதிருப்பதுமாகும் என்று அறியப்படுகின்றது.

முறையான சட்டத் தொகுதியொன்றின் மூலமே, அந்தப் பண்புகளில் ஓரளவாவது நாட்டில் நிலைநாட்ட முடியும். ஆயினும், ஊழலே அதற்கும் தடையாக அமைகிறது.

பெருமளவில் ஊழல் பேர்வழிகளைக் கொண்ட பாராளுமன்றத்தால் அவ்வாறான சட்டங்களை நிறைவேற்ற முடியாது. அவர்கள் தமது சொந்த நலன்களுக்காகவே சட்டங்களை கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.