;
Athirady Tamil News

மக்களின் கழுத்தை நெரிக்கும் மின்சாரத்துறை ‘மாபியா’ கும்பல் !! (கட்டுரை)

0

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பிறக்கும் புத்தாண்டில், பல பொருளாதார அபாயங்கள் நம்மைச் சந்திக்கக் காத்துக் கொண்டு இருக்கின்றன. ஒருபுறம் அரசாங்கம் புதிய வரிகளை அறவிட திட்டமிடுகிறது. மறுபுறம், மீண்டும் மின்சாரக் கட்டனம் அதிகரிக்கப்பட இருக்கிறது.

அதேவேளை, பல தசாப்தங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் இனப்பிரச்சினைக்கு, எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி அறிவித்து இருக்கிறார்.

அவரது நோக்கம் பாராட்டக்கூடியதாக இருந்தாலும், அது புத்தாண்டில் மக்கள் மீது சுமத்தப்படப் போகும் பொருளாதார பழுவிலிருந்து, அவர்களது கவனத்தை திசை திருப்பும் ஓர் உத்தி மட்டுமே என்றும் சிலர் கருதுகின்றனர்.

உயர்மட்ட சம்பளம் பெறுவோர் மீது சுமத்தப்படவிருக்கும் வரி, ஏழைகளை நேரடியாகப் பாதிக்காது. ஆனால், ஏனைய வரிகள் எவர் மீது விதிக்கப்பட்டாலும் அவர்கள் அதனை சாதாரண மக்கள் மீது எவ்வாறோ சுமத்திவிடுவார்கள்.

மின்சக்தித் துறையை பாதிக்கும் பிரச்சினைகள், பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. அரசியல்வாதிகள் இனப்பிரச்சினை போன்ற அரசியல் காரணங்களைக் கொண்டு, இது போன்ற பொருளாதார பிரச்சினைகளை மூடி மறைத்துக் கொண்டு இருப்பதால், அவற்றைப் பற்றி மக்கள் கவனம் செலுத்துவதுமில்லை.

அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதம் மின்கட்டனத்தை அதிகரித்தது. 70 சதவீதத்தால் மின்கட்டனத்தை அதிகரிப்பதாக அப்போது கூறப்பட்டாலும், உண்மையிலேயே தனித்தனி வீடுகளின் மின்கட்டனம் குறைந்தபட்சம் 200 சதவீதமாக அல்லது 300 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. சிலர் தமது வீட்டுக்கான மின்கட்டனம் ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டதாக முறையிட்டனர். சில விகாரைகளின் மின்கட்டனம் 40,000 ரூபாயிலிருந்து இரண்டு இலட்சத்துக்கு அதிகமாக உயர்ந்ததாக சம்பந்தப்பட்ட விகாராதிபதிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இந்தநிலையில்தான், புத்தாண்டில் மீண்டும் 75 சதவீதத்தால் மின்கட்டனத்தை அதிகரிக்கப் போவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியிருக்கிறார். இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குவதே அதற்குக் காரணம் என அவர் கூறியிருந்தார்.

அதேவேளை, நிலக்கரி பற்றாக்குறையால் அடுத்த வருட நடுப்பகுதியில், 10 மணித்தியாலத்துக்கு மேற்பட்ட மின்வெட்டை அமலாக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த இரண்டு விடயத்தையும் மையமாக வைத்து, அமைச்சரும் பொறியியலாளர்களும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, தாம் பொதுமக்களின் பக்கத்தில் இருந்து வாதிடுவதாகக் காட்டிக் கொள்ள முயல்கின்றனர்.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க இடமளிப்பதில்லை என்று பொறியியலாளர்கள் கூறுகின்றனர். பொறியியலாளர்கள் கூறுவதைப் போல், அடுத்த வருடம் பத்து மணித்தியாலம் மின்வெட்டு அமலாக்கப்படாது என்று அமைச்சர் கூறுகிறார்.

மின்கட்டனத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கிறார். இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குவதால், கட்டனத்தை அதிகரிக்காவிட்டால் நீண்ட நேர மின்வெட்டை அமலாக்க நேரிடும் என்று அவரும் கூறியிருக்கிறார்.

ஆனால், மின்சார சபையின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து கட்டுப்படுத்தும் இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க, மின்கட்கனத்தை அதிகரிக்கும் யோசனையை நிராகரிக்கிறார்.
அரசியல் காரணங்களுக்காக 2014ஆம் ஆண்டு மின்கட்டனத்தை குறைக்க எடுத்த தவறான முடிவின் காரணமாகவே, மின்சார சபை நட்டமடைந்து வருவதாகவும் அதற்காக இப்போது மின்பாவனையாளர்களைத் தண்டிக்க முடியாது என்றும் அவர் வாதிடுகிறார்.

இதையடுத்து, அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது, ஜனக்க ரத்னாயக்கவை கடுமையாக விமர்சித்தார். ‘டிரிலியம்’ போன்ற சொகுசு மாடி வீட்டுத்திட்டங்களின் உரிமையாளரான ரத்னாயக்க, தாம் கூடுதலாக மின்கட்டனத்தை செலுத்த வேண்டிவரும் என்பதற்காகவே மின்கட்டனத்தை அதிகரிப்பதை எதிர்ப்பதாகவும், தாம் அவரை அழைத்து இது தொடர்பாக கலந்துரையாட இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

உலகில் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும் போது, உண்மையிலேயே இலங்கையில் மின்சாரப் பிரச்சினையொன்று இருக்கவே முடியாது. நாட்டின் மத்தியிலிருந்து நாலாபக்கமும் ஓடும் ஆறுகள் இருக்கின்றன. அவற்றால் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். வருடம் முழுவதிலும் மிகப் பிரகாசமாக சூரியன் ஒளிபடும் நாடு இதுவாகும். எனவே சூரியசக்தி மூலமும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். முறையாகப் பருவக் காற்று வீசுவதால், காற்றாலைகள் மூலமும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

அதாவது, ஆரம்ப செலவைத் தேடிக் கொண்டால், நாடு எவ்வாறான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கினாலும் மின்உற்பத்திக்கு எவ்வித தடையும் ஏற்படாது. தண்ணீரும் சூரியசக்தியும் காற்றும் இலவசமாக கிடைப்பதால் மின்கட்டணமும் வெகுவாகக் குறையும்.

அவ்வாறாயின், இலங்கை ஏன் பாரிய எரிசக்திப் பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கிறது? அரசாங்கங்கள் ஏன் நீர், சூரியசக்தி, காற்றை உபயோகிக்கும் மின்நிலையங்களை கூடுதலாக நிர்மாணிப்பதில்லை?

இது மின்சார சபையில் சிலர், ‘மாபியா’ கும்பலொன்றைப் போல் செயற்படுவதன் விளைவாகும். இவர்களும் ஏழை மற்றும் சாதாரண குடும்பங்களில் இருந்து உயர்கல்வியைப் பெற்று, தற்போது உயர் அந்தஸ்தை அடைந்தவர்கள்.

பொறியியலாளர்களான இந்தக் கும்பல், மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக நீர், சூரியசக்தி, காற்று போன்ற விலை குறைந்த, புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை இவர்கள் விரும்புவதே இல்லை. இவர்கள் டீசல், நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்திச் செய்வதையே ஊக்குவிக்கின்றனர்.

டீசல், நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, வெளிநாட்டு செலாவணி வேண்டும். அதேவேளை குறிப்பிட்டதோர் அளவு டீசல், நிலக்கரியை மட்டுமே மின்சார சபையால் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

எனவே, கோடைகாலத்தில் நீர்த் தேக்கங்கள் வற்றும் போதும் டீசல், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் போதும், மின்சார சபை தனியார் மின்நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்கிறது. இந்தத் தனியார் மின்உற்பத்தி நிலையங்கள், மேற்படி கும்பலுக்கே சொந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்தக் கும்பல் மின்சாரசபை வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் நிலையை உருவாக்கவே எப்போதும் முயல்கிறது.

இந்தப் பொறியியலாளர்களே, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையங்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். இந்த அனுமதியை வழங்குவதை வருடக் கணக்கில் தாமதப்படுத்தி, அவற்றின் உரிமையாளர்களை விரக்தியடையச் செய்வதற்கு, இவர்கள் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர். அத்தோடு, இந்த அனுமதியை தாமதப்படுத்தும் வகையில், சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

முதலில் ஒவ்வொரு மின்சக்தி அமைச்சரும் இந்நிலையை எதிர்த்தாலும், பின்னர் அவர்களும் இந்தக் கும்பலோடு இசைந்து செயற்படுகின்றனர். ஏன் என்பதை ஊகித்துக் கொள்ள வேண்டும்.

கடந்த பெப்ரவரி மாதம், கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையொன்றின்படி, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையம் ஒன்றை ஆரம்பிக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற சுமார் 10 அரச நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டும். அவையும் குறிப்பிட்டதோர் காலத்துக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

அவற்றைப் பெற்று மின்நிலையத்துக்கு மின்சார சபையின் இறுதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் காலம் நெருங்கும் போது, மேற்படி 10 நிறுவனங்களிடம் பெற்ற சில அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகும் நாள் நெருங்கிவிடுகிறது. எனவே, அவற்றை புதுப்பிக்க வேண்டும். இந்த ஏற்பாட்டின் காரணமாக, மின்நிலையம் ஒன்றுக்கு மின்சார சபையின் அனுமதியைப் பெற, இரண்டு முதல் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, 2030ஆம் ஆண்டளவில், இலங்கையில் மின்உற்பத்தியில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க சக்தியின் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். ஆனால், அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி குறைகூறியிருந்தார்.

நீர்தேக்கங்களை இந்தப் பொறியியலாளர்களே நிர்வகிக்கின்றனர். எனவே, சிலவேளைகளில் அவர்கள் நீர்தேக்கங்களின் நீரை காரணமின்றி திறந்துவிடுகின்றனர். கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி, ரந்தெனிகல, ரன்டெம்பே நீர்தேக்கங்களின் நீரை அவர்கள் 14 மணித்தியாலங்களாக திறந்துவிட்டு, தனியார் நிறுவனங்களிடம் 162 மில்லியன் ரூபாய்க்கு மின்சாரத்தை கொள்வனவு செய்தனர். அதைப்பற்றி இரகசிய பொலிஸ் விசாரணை நடைபெற்ற போதிலும் எவரும் தண்டிக்கப்படவில்லை.

சாதாரண மக்களால் கிரகித்துக் கொள்ள முடியாத அளவிலான பாரிய சம்பளத்தையும் ஏனைய வசதிகளையும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் பெறுகின்றனர். சபையின் ஏனைய ஊழியர்களுக்கும் கொழுத்த சம்பளம் வழங்கப்படுகிறது.

நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் இச்சபையின் ஊழியர்களுக்கு இவ்வருடமும் போனஸ் வழங்கப் போவதாக கூறப்படுகிறது. இந்தக் காரணங்களும் மின்சார சபையின் மீது பாரிய பழுவாக அமைந்துள்ளன. இவ்வனைத்தும் நாம் நாளாந்தம் இருளில் இருப்பதற்குக் காரணங்களாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.