;
Athirady Tamil News

ஆளும் கட்சியினரின் தேர்தல்!! (கட்டுரை)

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திப் போடுவதற்காக எடுக்கும் முயற்சிகள் மிகவும் கேவலமானவையாகும்.

விந்தையான விடயம் என்வென்றால், பொதுஜன பெரமுனவானது மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று, இன்றும் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் அமர்த்தி, அதனை கட்டுப்படுத்தி வரும் கட்சியாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், அக்கட்சி பொதுத் தேர்தலொன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெற்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக ஓர் ஆசனத்தையேனும் பெறாத கட்சி என்பதால், அக்கட்சி தேர்தலைக் கண்டு பயப்படுவதை புரிந்து கொள்ளலாம்.

கடந்த ஒக்டோபர் மாதமே, தேர்தலை ஒத்திப்போடும் இந்த முயற்சிகள் ஆரம்பமாகின. அந்த மாதம் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, ஊள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,000 ஆகக் குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

அதற்காக நவம்பர் முதல் வாரத்தில், உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன, தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில், புதிய எல்லை நிர்ணய குழுவொன்றையும் நியமித்தார். இது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திப் போடும் முயற்சி என எதிர்க்கட்சியினர் கூறினர்.

அதையடுத்து, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விடயத்தில் திருத்தங்களைக் கொண்டுவர பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதைப்பற்றி தாம் பிரதமருடன் கலந்தாலோசித்ததாக நீதி அமைச்சர் விஜயதஸ ராஜபக்‌ஷ, ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு கடந்த மாதம் தெரிவித்து இருந்தார். இரண்டு வாரங்களில் தெரிவுக்குழு, தமது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லை.

ஏற்கெனவே, 2021ஆம் ஆண்டு மே மாதமும் இதற்காகவே நாடாளுமன்ற தெரிவுக்குகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தப் புதிய ஆலோசனை முன்வைக்கப்பட்டது. தினேஷ் குணவர்தனவே, கடந்த வருடம் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் இருந்தார். அவர், 2022 ஜூன் மாதம் 22ஆம் திகதி அக்குழுவின் இறுதி அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தும் இருந்தார்.

ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் ஒருவர், அதன் பின்னர் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவைப் பணிக்கும்படி கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். தற்போதைய பொருளாதார நிலையில், இத்தேர்தலை நடத்த அரசாங்கத்தால் 1,000 கோடி ரூபாய் செலவழிக்க முடியாது என்பதே அவரது வாதமாகியது.

இது அதற்கு முன்னர், ஐ.தே.கவினதும் பொதுஜன பெரமுனவினதும் தலைவர்கள் மேடை மேடையாகக் கூறித் திரிந்த வாதமாகும். கோடி செலவழித்து மேலும் பல அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நெருக்குவாரத்தை ஏறபடுத்திக் கொண்டே, பொதுஜன பெரமுன இந்த வாதத்தை முன்வைக்கிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் கடந்த ​டிசெம்பர் மாத இறுதியில் கோரப்படும் என தேர்தல் ஆணையகம் முன்னர் தெரிவித்து இருந்த போதிலும் அதுவும் தாமதமாகியது. ஏற்கெனவே ஆணையகத்தின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா, ஆளும் கட்சியின் ஆலோசனைப்படி செயற்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டிய நிலையில், ஜனவரி நான்காம் திகதி வேட்பு மனுக் கோரும் அறிவித்தல் வெளியாகியது. அதன்படி 340 மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் இன்று (18) முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவிருக்கிறது.

இதனிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் வகையில், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த பாராளுமனத்தில் தனிநபர் பிரேரணையை முன்வைத்தார். வேட்பாளர் பட்டியல்களில் இளைஞர்களுக்கு கூடுதல் இடம் வழங்கும் வகையிலேயே அவரது பிரேரணை அமைந்திருந்தது.

இதே நோக்கத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஒரு தனி நபர் பிரேரணையை கடந்த வருடம் சமர்ப்பித்து இருந்த நிலையிலேயே இந்தப் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அதேவேளை, தேர்தல் ஆணையகம் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக வேட்பு மனுக் கோரிய பின்னரே, தொலவத்தையின் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. நேர்மையான நோக்கத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட வேண்டுமானால், பல மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இம்தியாஸின் பிரேரணையே முதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறினர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக, இந்த முயற்சிகளின் போது அரசாங்கம் பின்வாங்கிய போதிலும், ஜனாதிபதி தமது முயற்சியை கைவிடவில்லை. அவர் ஜனவரி ஆறாம் திகதி தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர்களை தமது அலுவலகத்துக்கு அழைத்தார். தேர்தலை நடத்துவதா இல்லையா என்ற விடயத்தில் ஆணையகத்தின் உறுப்பினர்களிடையே உள்ள கருத்து முரண்பாடுகளை முதலில் தீர்த்துக் கொள்ளுமாறு அப்போது அவர் கூறியிருந்தார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆணையகத்தின் உறுப்பினர்களிடையே நான்கு கருத்துகள் இருப்பதாக, மறுநாள் சகல பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியது. அதேவேளை, தேர்தல் காலத்திலேயே மாணவர்களுக்கான சில தேசிய மட்ட பரீட்சைகள் இடம்பெற இருப்பதால், அதைப் பற்றி பரீட்சை திணைக்களத்தின் அதிகாரிகளுடன் கலந்தரையாடினீர்களா என்றும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பின் போது கேட்டிருந்தார்.

தேர்தல் செயலகத்தில் கருத்து முரண்பாடு, பரீட்சைகளுக்கு இடையூறு என்று ஏதாவது காரணத்தை முன்வைத்து, தேர்தல்களை ஒத்திப் போடுவதே அவரது நோக்கமாக இருக்கிறது போல தான் தெரிந்தது.

இதுவரை அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் அனைத்தும் அம்பலமாகி தவிடுபொடியாகிவிட்டன. மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க, புதிதாக எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கபட்ட போது தற்போதைய தேர்தலுக்கு தமது குழுவின் அறிக்கையை எதிர்ப்பார்த்திருக்க வேண்டியதில்லை என அக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார். அதனால் அரசாங்கத்தின் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் செவழிப்பது முறையாகாது என்ற வாதத்துக்கு பதிலளித்த எதிர்க்கட்சியினர், அரசாங்கத்தின் இவ்வருட செலவினம் 7,000 பில்லியன் ரூபாய் என மதிப்பிட்டுள்ளதால் அதில் 10 பில்லியன் என்பது மிகவும் சிறிய தொகை என வாதிட்டனர்.

அதேவேளை, தேர்தலுக்காக ஏற்கெனவே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகத்தின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா, கடந்த ஒன்பதாம் திகதி ஒளிபரப்பான தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின் போது தெரிவித்தார். தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் தேவைப்படாது என்றும் அவர் அப்போது கூறினார்.

தேர்தல் செயலகத்தில் கருத்து முரண்பாடு என்ற ஜனாதிபதியின் கருத்தையும் மறுத்த அவர், இதுவரை எடுக்கப்பட்ட சகல முடிவுகளும் ஆணையகத்தின் சகல உறுப்பினர்களினதும் கூட்டு முடிவுகளாகும். இதுவரை வெளியிடப்பட்ட மூன்று வர்த்தமானி அறிவித்தல்களிலும் ஆணையகத்தின் சகல உறுப்பினர்களும் கையொப்பமிட்டதாகவும் கூறினார்.

இதே கருத்தை, அதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்கவும் கண்டியில் கூறியிருந்தார். வரவு – செலவு திட்டத்தின மூலம் தேர்தல் செயலகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியொன்றின் தலைவரான ஜனாதிபதி, தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கியமை அநாகரியமானது என்றும் சட்ட விரோதமானது என்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் விமர்சித்துள்ளன. அதுவும் தேர்தலை ஒத்திப் போடும் முயற்சியாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, தேர்தலுக்காக பல பில்லியன் ரூபாய் செலவிடுவது ஒரு பிரச்சினை தான். ஆனால், இந்தப் பொருளாதார பிரச்சினை தீரும் வரை, எத்தனை வருடங்கள் தேர்தல்களை ஒத்திப் போடுவது என்ற கேள்வியும் அத்தோடு எழுகிறது.

அதேவேளை, செலவைப் பற்றி அரசாங்கம் அந்தளவு அக்கறையோடு செயற்படுவதாக இருந்தால் 8,700 ஆக இருக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,000 ஆகக் குறைக்கும் அதன் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கலாம்.

அதற்காக எல்லை நிர்ணய பணிகளை ஆரம்பித்தால் நிச்சயமாக தேர்தலை ஒத்திவைக்க நேரும் என்பதால், எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி இம்முறை மட்டும் பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்திவிட்டு, பின்னர் ஆறுதலாக கலப்பு முறைப்படி 4,000 உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் சட்டத்தை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

ஆனால், அரசாங்கத்தின் நோக்கமே தேர்தலை ஒத்திப் போடுவதாகும். ஏனெனில் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் அரச தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகி உள்ள நிலையிலும் ஆளும் கட்சிகளான பொதுஜன பெரமுனவும் ஐ.தே.கவும் தேர்தல்களை சந்திக்க பயப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.