;
Athirady Tamil News

தேர்தல் பிற்போடல் எதிர்பார்க்கப்பட்டதே!! (கட்டுரை)

0

இலங்கையின் இன்றைய நடப்பு அரசியலில் தேர்தல் பிற்போடல் என்பதற்கு பின்னால் ஒரு பாரதூரமான அரசியல் உண்டு.

இலங்கையின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போவது என்பதை இந்த தேர்தல் பிற்போடல் வெளிக்காட்டி நிற்கிறது. உள்ளூராட்சி தேர்தல் மாத்திரம் இங்கே பிற்போடப்படவில்லை. அது மாகாண சபை தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் பிற்போடுவதாக மட்டுமல்ல ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இத்தேர்தல்கள் நடக்க மாட்டாது என்பதையும் பறைசாற்றி நிற்கிறது.

இன்றைய இலங்கைத் தீவின் அரசியல் நிலையில் எந்தவொரு கட்சியும் அரிதில் பெரும்பான்மையை பெறமுடியாது. சிங்கள தேசத்தில் ரணில் அணி, மைத்திரிபால சிறிசேன அணி, சஜித் பிரேமதாச அணி, ராஜபக்சக்கள் அணி, ஜே.வி.பி அணி என பிரதானமான ஐந்து அணியினர் உள்ளனர்.

எனினும் இங்கே பெயரளவில் ஐந்தாகத் தென்பட்டாலும் உண்மையில் செயல் வடிவில் இரண்டு அணியினர்தான் உள்ளனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு அணியினரும் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாதவர்களாகவே இன்றைய நிலையில் உள்ளனர். எனவே ஒரு உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடந்திருந்தால் அதன் முடிவுகள் நிச்சயம் இதனை பறைசாற்றி இருக்கும் என்பதும் உண்மையே.

இத்தகைய ஒரு தேர்தல் குறிக்காட்டியை வெளியே காட்டிவிட்டால் வாக்காளர்களின் மனதில் ரணில் பலவீனமாக உள்ளார் என்பதை பதிப்பித்துவிடும். அது மேலும் ரணிலைப் பலவீனப்படுத்தும். எனவேதான் தனக்கு சாதகமான ஒரு ஜனாதிபதி தேர்தலுக்காக காத்திருக்கும் ரணில், அனைத்து தேர்தல்களையும் பின்போட்டுள்ளார். இதுவே அவருடைய அரசியல் சாணக்கியமாகும்.

அத்தோடு தேர்தல் இலங்கையின் ஆளும் குழாமினரை மேலும் பலவீனப்படுத்திவிடும். இதனை வெளிக்காட்ட ரணில் விரும்பவில்லை. ஒரு தேர்தல் நடந்திருந்தால் அது ராஜபக்சக்களையும், ரணிலையும் பலவீனப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். ரணிலைப் பொறுத்தவரையில் அவருடைய கட்சி பலமானதாக இல்லை. மிகப் பலவீனமடைந்துள்ளது. ஆளுமை மிக்க ராஜதந்திரி என்ற அளவிலேயே தனிநபர் கவர்ச்சியின் ஊடாகவே அவர் செல்வாக்கு மிக்கவராக உள்ளார்.

இன்றைய பொருளாதார நெருக்கடி மொட்டுக் கட்சியினருக்கான செல்வாக்கை சற்று வீழ்த்தியுள்ளது. எனினும் தற்போது உள்ளவர்களில் அவர்கள் பலமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளார்கள். எனவே இலங்கையில் அதிகார நாற்காலியில் அமரக்கூடியவர்கள் ரணிலோ அல்லது ராஜபக்சக்களின் குடும்பமே தவிர வேறு யாரும் தற்போது இல்லை என்பதே எதார்த்தம்.

சஜித்தை பொறுத்த அளவில் இலங்கை அரசியலில் அவருக்கு எத்தகைய அதிர்ஷ்டம் வந்தாலும் சிறுபான்மையினரையும் இணைத்தாலும் 30% வாக்குக்கு மேல் அவரால் பெறமுடியாது. சிங்கள சமூகத்தில் 20% வாக்குகளையே அவரால் பெறமுடியும். ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்ற சாபமே அவரை சிங்கள சமூகத்தில் முன்னிலைக்கு வரமுடியாமல் தடுக்கின்றது என்பதே சிங்கள தேசத்தின் சமூகவியல் யதார்த்தம்.

அவ்வாறே ஜே.வி.பி யினர் தமிழின எதிர்ப்பு வாதம் பேசி 2004 ஆம் ஆண்டு 39 ஆசனங்களைப் பெற்ற காலம் மலையேறிவிட்டது. இப்போது கரவா சமூகத்தின் ஆதரவைப் பெற்று மூன்று ஆசனங்களை மாத்திரம் கொண்டுள்ள கட்சி அது. எனவே எதிர்காலத்தில் அது 5% வாக்குகளையே பெறமுடியும். அதையும் தாண்டி இன்றைய நெருக்கடி காலத்தில் இனவாதம், மொழிவாதம், மதவாதம் என பெரிய ஆட்டம் ஆடினாலும் 10% வாக்குகளுக்கு மேல் சிங்கள சமூகத்தில் அவர்களால் வாக்குப் பெறமுடியாது.

இதனை பாம்பாட்டிக்கு வெள்ளிதிசை என்றால் புதையல் கிடைக்காது இரண்டு பாம்புகள் அதிகம் கிடைக்கும் என்ற தமிழ்ப் பழமொழி பெரிதும் விளக்க உதவும். அது சஜித்துக்கும் பொருந்தும். விமல் வீரவன்சவுக்கும் பொருந்தும். அதுவே இவர்களது அரசியற் கொள்ளளவாகும்.

எனவே சஜித்தும் ஜே.வி.பி யும் தமிழ் முஸ்லிம் தரப்புக்களும் இணைந்தாலும் இலங்கையில் 35 வீத வாக்குகளுக்கு மேல் பெறமுடியாது. அத்தோடு மாத்திரமல்ல 65% வாக்குகள் ராஜபக்ச, ரணில் அணிக்கு பின்னே நிற்கும். இதில் 40 வீத வாக்குகளை பெற்றாலே ரணிலுக்கு போதுமானது. அது ரணிலேயே பலப்படுத்தும்.

இந்தக் கணக்கை கணித்துத்தான் ரணில் தனது காய்களை நகர்த்திச் செல்கிறார். எனவே மாற்று அணியினரான சஜித், ஜே.வி.பி அணியினரால் இலங்கை அரசியலில் பெரிய வெற்றி வாய்ப்புகளை தேடமுடியாது. அதற்கான வாய்ப்புக்களும் சிங்கள அரசியலில் இன்றும் இல்லை. எதிர்காலத்தில் இருப்பதற்கான வாய்ப்புக்களும் இல்லவே இல்லை.

இப்போது ஜனாதிபதி தேர்தல்தான் பிரதான இலக்கே தவிர ஏனைய தேர்தல் பற்றி சிங்கள ஆளும் குழாமினருக்கு அக்கறை இல்லை. அது அவர்களுக்கு உடனடியாகத் தேவையற்றது கூட. இப்போது ரணிலினுடைய பலம் என்பது எந்த நேரமும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்பதுதான்.

எனவே மொட்டு கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலை சுற்றி அவருக்கு ஆதரவாகவே தற்போது இயங்குவர். அது ரணிலுக்கு பெரும் பலம்தான். இப்போது உள்ளூர் ஆட்சி சபை தேர்தலையோ, மாகாண சபை தேர்தலையோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றையோ எதிர்கொண்டால் மொட்டு கட்சியில் பலர் தமது வாக்குகளையும், ஆசனங்களை இழக்க நேரிடும்.

எனவே அதனையும் அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். ரணிலும் ராஜபக்சர்களும் அதனால் பலவீனம் அடைந்து விடுவார். எனவே ஒட்டு மொத்தத்தில் சிங்கள தேசத்தில் ஆளுமை செலுத்தக்கூடிய அதிகார வர்க்கம் இப்போதைக்கு ஒரு தேர்தலை விரும்பவில்லை.

இந்த அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலின் பின் எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பதற்கான வழியை ரணில் பின்பற்றக்கூடியதற்கான சாத்தியங்கள் உண்டு.

1982ம் ஆண்டு ஜே ஆர் ஜெயவர்த்தன நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் அவசர கால நிலைமையின் கீழ் அதே நாடாளுமன்றம் தொடர்ந்து செயலாற்றுவதற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்தி 52% விகித வாக்குகளால் வெற்றி பெற்று 76% விகித ஆசனங்களை தக்க வைத்துக்கொண்டார்.

அதனைப் போலவே எதிர்காலத்தில் ரணிலும் ராஜபக்சக்களும் இணைந்து அத்தகைய ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்துவதற்கான சாத்தியங்கள் ஓரளவு உள்ளன. ஏனெனில் இலங்கையினுடைய பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி அவ்வாறு செயல்படுவது அவர்களுக்கு இலகுவானதும், இலாபகரமானதுமாகும்.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் என்பது கட்சிகளைக் கடந்து ஆளுமைக்கே முக்கியத்துவம் அளிப்பதாக அமையும். அது ரணிலுக்கு வாய்ப்பான ஒன்றாகவும் இருக்கும். சிங்கள தேசத்தில் ரணில் தற்போது உள்ளவர்களில் மிகச்சிறந்த ராஜதந்திரி மாத்திரமல்ல மேற்குலகத்தின் முழுமையான ஆதரவை பெற்றவர் என சிங்களதேசத்தில் நம்பப்படுகிறது. மேற்குலக நிதி நிறுவனங்களான ஐ.எம்.எப், உலக வங்கி போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நிறுவனங்களின் ஆதரவையும் திட்டவட்டமாக பெற்றவர் என்ற அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு பெருமதிப்பு உண்டு.

இன்றைய நிலையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க வல்லவர் என்ற நம்பிக்கையும் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு. எனினும் இன்றைய நிலையில் மேலும் நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் மின்சாரம், எரிவாயு, பெற்றோலியம், இதர அன்றாட பாவனை பொருட்கள் என்பவற்றுக்கான தங்குதடையற்ற விநியோகத்தை ரணில் செய்து காட்ட வேண்டும்.

அதனை ரணில் விக்ரமசிங்கவினால் ஒரு குறுங்காலத்துக்குள் செய்து காட்ட முடியும். அதனூடாக சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவையும் பெற்றுக் கொள்ளமுடியும். எனவே கட்சி அரசியல் என்பதை தாண்டி ஆளுமை என்ற மகுடத்தின் கீழ் ரணிலுக்கு இலங்கை அரசியலில் தற்போது தலைமைத்துவ மகுடம் தொடர்ந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

இது அவ்வாறு இருக்கையில் கடந்த மாதம் ரணிலின் தேர்தல் அறிவிப்பின் பொய்யை நம்பி தேர்தல் அமளி துமளியில் தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் தங்கள் பெட்டிக்குள் வாக்கை நிரப்ப தமிழர் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்தும் மட்டையும், சப்பாத்தும், டீசேட், ,காட்சட்டை, உணவுப் பொதியும், சட்டியும் பானையும் என தானங்கொடுக்க ஓடித் திரிந்தனர்.

ரணில் காட்டிய மாயமானுக்கு பின்னே திக்கற்று ஓடியவர்களுக்கு தேர்தல் பின்போடல் பெரும் கவலையை கொடுத்திருக்கும்தான். ஆனால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே, ரணில் அறிவித்த தேர்தலும், தமிழருக்கான தீர்வு திட்டமும் ஒருபோதும் நடக்காது என்பதற்கான அரசியல் அறிவு இவர்களிடம் இருந்திருந்தால் இப்படி ஓடியாடி இருக்க மாட்டார்கள்.

எனவே வாக்கை தேடமுன் முதலில் இவர்கள் அரசியல் அறிவை தேடவேண்டும். ரணிலின் உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கட்சி என்ற வகையில் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததுதான்.

எனினும் நடக்க முடியாத, நடக்காத ஒரு தேர்தலுக்காக தீவிரமாக வேலை செய்தார்கள் என்பதுதான் நகைப்புக்கிடமானது. அதுமாத்திரமில்ல தேர்தல் நடக்கும் என்று இவர்கள் நம்பியமையானது இவர்களுடைய அரசியல் அறிவீனத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துவிட்டது. ரணில் விக்ரமசிங்க தேர்தலை நடத்துவதாக அறிவித்ததும், அவ்வாறே 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்ததும் ஒரு அரசியல் மாயாஜால வித்தை.

இங்கே தமிழர்களையும் ஏமாற்றி இந்தியாவையும் ஏமாற்றுவதற்கான ஒரு களத்தை திறந்துவிட்டார். அதில் இந்திய ராஜதந்திரிகளுக்கு நல்ல பிள்ளையாக நடித்துக்கொண்டு தான் இந்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற மாட்டேன் என்று உறுதியாக முடிவெடுத்த பின்னர்தான் இந்தியாவுக்கு வாக்குறுதியை கொடுத்திருக்கிறார்.

ரணிலினுடைய ஏமாற்று வித்தைக்கு இந்திய ராஜதந்திரிகள் பலியாகிப் போய்விட்டார்கள். இது ஒரு கசப்பான அனுபவமாகவும் அமைந்துவிட்டது. இந்தத் தேர்தல் பின்போடலினதும், பௌத்த மகா சங்கத்தினர் போராட்டங்களும், அதனைத் தொடர்ந்து 13 நிறைவேற்ற மாட்டேன் என்று அறிவித்தமையும் இந்திய வெளியுறவுத்துறையின் தோல்வியாகவே கருதப்பட வேண்டும்.

இத்தகைய தொடர் தோல்விகளையும், ஏமாற்றுக்களையும், ஏமாற்றங்களையும் இன்றைய நடப்பு இந்திய அரசியல் தலைமைகள் தொடர்ந்து சகித்துக் கொள்ளுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உள்ளூராட்சி சபை தேர்தல் இல்லை என்ற செய்தியின் பின்னே மாகாண சபை தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று முன்னறிவித்தலை தந்திருக்கிறது.

அத்தோடு நாடாளுமன்றத் தேர்தலுமில்லை, 13ம் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட போவதுமில்லை என்ற செய்தியும், இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட மாட்டாது என்ற செய்தியும் உறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால் அடுத்து வரும் மாதங்களில் இலங்கை அரசியல் ஒரு பெரும் கொதிநிலைக்குச் செல்லும்.

அதன் மூலம் இந்திய இலங்கை வெளியுறவு கொள்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களும், விரிசல்களும் ஆழமாக கவனத்தில் கொண்டு தமிழ் தரப்புகள் தமக்கு இடையான குடும்பிபிடி ச்சண்டையை நிறுத்தி அவசர அவசரமாக தம்மை ஒருங்கிணைத்து செயற்பட வேண்டிய காலச் சூழல் ஒன்று கனிந்து வருகின்றது. இந்நிலையில் மேற்குலகமும் அமெரிக்காவும் தமது இந்து சமுத்திர அரசியலைச் தமக்கச் சாதகமாச் செய்வார்கள்.

இந்தியா தனக்குரிய புவிசார் நலன் அரசியலை செய்யும். சீனாவும் தனக்கான இந்து சமுத்திர அரசியலைச் செய்யும். சிங்கள தேசமும் தனக்குரிய பௌத்த சிங்கள மேலாண்மை அரசியலை செய்யும். ஆனால் தமிழ் மக்களுக்கான அரசியலைச் செய்வதற்கு யாரும் இல்லை என்ற துயரகரமான வரலாற்றுப் பக்கம் தொடர்ந்து நீடிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.