;
Athirady Tamil News

மாற்றத்தைக் கொண்டுவர முதலில் மக்கள் திருந்த வேண்டும் !! (கட்டுரை)

0

நாட்டில் மாற்றம் வேண்டும் என்றும் அரசியல் கலாசாரம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்றும் ‘இலங்கை சமூகம்’ நீண்டகாலமாக வேண்டி நிற்கின்றது. இன்று வரை இதற்கான மக்கள் போராட்டங்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், அது கைகூடவில்லை! கிடைத்த வாய்ப்புகள் கூட, ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிப் போனதைக் கண்டிருக்கின்றோம். ஆட்சியாளர்கள், அரசாங்கங்கள், ஜனாதிபதிகள், ஆளுகைக்கான கூட்டுகள் மாறியதே தவிர, வேறெதுவும் நடந்து விடவில்லை.

புதிய கருத்தியல், மாற்றுக் கொள்கைகள், வித்தியாசமான அணுகுமுறைகளுடன் அரசியலுக்கு வந்த பெருந்தேசியத் தலைவர்கள் மட்டுமன்றி, ஒரு சாதாரண அரசியல்வாதி கூட பெரும்பாலும் மக்களால் கண்டுகொள்ளப்படவில்லை; அல்லது, காலவோட்டத்தில் அப்படியான அரசியல்வாதிகளும் இந்தக் ‘குட்டைக்குள்’ ஊறவைக்கப்பட்டு விட்டார்கள் எனலாம்.

இலங்கையில் கட்டமைப்பு முறைமையை மாற்றக் கோரி, 2022இல் நட்தேறிய பெரும் மக்கள் எழுச்சி, இதற்கெல்லாம் ஆகப் பிந்திய உதாரணமாகும். காலம் கனிந்து, பழம் நழுவிப் பாலில் விழும் தருணம் பார்த்து, வேறு என்னவோ நடந்தேறிவிட்டது.

இந்தப் பின்னணியில், மக்களாகிய நாம் சில விடயங்களை மறந்து விடுகின்றோம்.
அதாவது, இலங்கையின் அரசியல் கட்டமைப்பானது, மக்கள் நலனை மையமாகக் கொண்டதாக, ஊழல் அற்றதாக, எல்லா இனங்களுக்கும் சமத்துவம் வழங்குவதாக, மக்களையும் அவர்களது உரிமைகளையும் மதிப்பதாக மாற வேண்டும் என்று நினைக்கின்றோம். அதன்மூலம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, எல்லாப் பரப்புகளிலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்ற எண்ணம், மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்த இலக்கைத் தாமாக, இயல்பாக அடைய முடியாத ஒரு சமூகமாக, இலங்கை மக்கள் இருப்பதாகச் சொல்லலாம். இதனை ஓரளவுக்கேனும் சாதிப்பதற்கு, இந்த மாற்றம் மக்களிடத்தில் இருந்து ஆரம்பமாக வேண்டும்.

மக்கள் தமது எண்ணங்களை, சிந்தனைகளை, நடத்தைக் கோலங்களை, கொள்கைகளை, அணுகுமுறைகளை மறுசீரமைப்பதுடன், அதனூடாகத் தமது அரசியல் பிரதிநிதிகளைத் திருத்துவதற்கு, மாற்றுவதற்கு, அவர்களுக்கு வரலாற்றுப் பாடங்களை புகட்டுவதற்கு முன்வர வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இன்று வரை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்களை நாமறிவோம். ஒவ்வொரு ஜனாதிபதியும் பிரதமரும் எவ்வாறு காலத்தை கடத்தினார்கள் என்பதையும், இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்திய, செலுத்திக் கொண்டிருக்கின்ற அரசியல் தலைமைகள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் இரகசியமானதல்ல!

மக்களை ஏமாற்றுகின்ற, மக்களைப் பகடைக்காய்களாக்கி தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள நினைக்கின்ற அரசியல் தரப்புகளை மட்டுமன்றி, வெளிநாட்டுச் சக்திகள், இனவாத, பயங்கரவாத, கடும்போக்குவாத இயக்கங்களையும் புத்தியுள்ள மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

இன்றுவரை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்கள் எதைச் செய்வார்கள், எதைச் செய்யமாட்டார்கள் என்ற பட்டறிவு எமக்கு உள்ளது. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பெருந்தேசியக் கட்சியை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் அல்லது, ஆட்சியாளரின் கொள்ளளவு, இயலுமை என்ன என்பதைப் புரியாதவர்களாக நாம் இருக்க முடியாது.

ஒவ்வொரு பெரிய கட்சிக்கும், ஒரு வரலாற்றுப் பதிவு உள்ளது. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜனப் பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளின் அரசியல் நகர்வுகள், ஆற்றல்கள் பற்றி எல்லாம், காலம் நமக்கு சொல்லித் தந்துள்ளது. இலங்கை மக்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற வலிகளின் தோற்றுவாய், காரணகர்த்தாக்கள் யார் என்பதை சரியாக விளங்கிக் வேண்டியுள்ளது.

பெருந்தேசிய கட்சிகளின் ஆளுகை, அரசியலை மட்டுமன்றி, சிறுபான்மையின கட்சிகள் எவ்விதம் செயற்படுகின்றன என்பதையும் நன்கறிந்தவர்களாக, நாம் இருக்கின்றோம்.

தமிழ்த் தேசிய கட்சிகள் உரிமை, போராட்டம் என்று காலத்தைக் கடத்தியமை, வீண்போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. கருத்தியல் ரீதியான பாரிய அடைவை, அது பெற்றிருப்பது மாத்திரமன்றி, அதனூடாகச் சில விடயங்களை, தமிழர்கள் சாதித்துக் கொள்ளவும் முடிந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

ஆனால், 50 வருடங்கள் என்ற காலப் பகுதியை எடுத்துக் கொண்டால், தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டது குறைவானது என்றுதான் கூற வேண்டும். உரிமையில் மட்டும் அக்கறை காட்டியதால், சில உரிமைகள் கிடைத்துள்ளன. பல தமிழர்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், ஒப்பீட்டளவில் அடிமட்ட மற்றும் கீழ்நடுத்தர தமிழ் மக்களுக்கு, பெரிய அனுகூலங்கள் கிடைக்கவில்லை. குறைவான அபிவிருத்திகளே இம்மக்களை சென்றடைந்துள்ளமை, அவர்களது அன்றாட வாழ்வில் பிரதிபலிக்கின்றது. கணிசமான தமிழ் மக்கள், இன்னும் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டவர்களாக உள்ளனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தென்படவில்லை.

இலங்கையில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் கூட்டம் என்றால் அது மலையக மக்கள்தான். மலையக மக்கள் எனும் பொது அடையாளத்தின் கீழ், இந்திய வம்சாவளி தமிழர்கள் மட்டுமன்றி, மூவின மக்களும் உள்ளடங்குகின்றனர் என்பது கவனிப்புக்குரியது.

இந்த நாட்டின் அபிவிருத்தியிலும் சரி, உரிமையிலும் சரி அதிகமாக புறக்கணிக்கப்பட்டவர்களும் இன்றுவரை வஞ்சிக்கப்பட்டவர்களும் மலையக மக்கள்தான் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பொருளதார ரீதியாக ஒடுக்கப்படுவது, சுரண்டப்படுவது இதில் முக்கியமானது.

தொண்டமானுக்கு பிறகு வந்த மலையக தலைவர்கள், மக்களுக்கு உண்மையான விடிவைக் கொண்டு வரவில்லை. ஏதோ பிரகடனப்படுத்தப்படாத ஒரு விளிம்புநிலைச் சமூகத்தைப் போலவே, மலையக தோட்டப் புறங்களில் வாழ்கின்ற மக்கள் இன்றும் உள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமை மட்டும் இல்லையென்றால், அவர்கள் திறந்தவெளியில் உலாவ விடப்பட்ட அடிமைகள் போலத்தான் வாழ நேரிட்டிருக்கும்.

மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரின் இயலுமை, இயலாமை, கொள்ளளவு, போக்கு, பண்பியல்புகள் எல்லாவற்றையும் முஸ்லிம் சமூகம் தெட்டத் தெளிவாக அறியும். தனித்துவ அடையாள அரசியல் கோட்பாடு தோற்றம் பெறுவதற்கு முன்னர், முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், முஸ்லிம் கட்சிகள் உருப்பெற்ற பிறகு எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை மீளாய்வு செய்ய வேண்டும். எம்.எச்.எம் அஷ்ரபுக்கு முன்னர் – பின்னர் என காலவகைப்படுத்தி இதை நோக்கலாம்.

இந்த அடிப்படையில், தனித்துவ அடையாள அரசியலில் முஸ்லிம்கள் கணிசமான அபிவிருத்தியைப் பெற்றிருக்கின்றார்கள்; மிகக் குறைந்தளவு உரிமைகளையே வென்றிருக்கின்றார்கள்.

மர்ஹூம் அஷ்ரபுக்குப் பிறகு, அபிவிருத்தி அரசியல் என்பது காத்திரமானதாக, சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்டதாக அமையவில்லை. கட்டடங்கள், வீதிகள் என, அபிவிருத்தித் திட்டங்களும் தொழில் வாய்ப்புக்களும் அதிக இடத்தைப் பிடித்துள்ளன.

இவற்றைக் கூட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் செய்திருக்கின்றார்கள். கடந்த 25 வருடங்களில் எம்.பி பதவி வகித்த ஏனைய எம்.பிக்கள் எல்லோரும் ,அபிவிருத்தி அரசியலில் கூட வெறுமனே ‘வார்த்தையால் வடைசுட்டுவிட்டு’ சென்றிருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

இதேவேளை, முஸ்லிம் சமூகம், கடந்த மூன்று தசாப்தங்களில் உரிமை அரசியலில், ஒரு சிறு அடியைத்தானும் எடுத்து வைக்கவில்லை. முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் தளபதிகளும் தோற்றம் பெற்றார்கள். தேர்தல் மேடைகளில் மக்கள் முன் உணர்ச்சி பொங்கப் பேசினார்கள். ஆனால், ‘ஏட்டுச் சுரக்காயாகவே’ அவை இன்னுமுள்ளன.

“மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம்; அபிவிருத்தியை கொண்டு தருவோம்” என்றார்கள். ஆனால், அவர்கள் ‘வெகுமதி’களுக்காக ஆட்சியாளர்களிடம் சோரம் போனதாலும் பெருந்தேசிய கட்சிகளின் கிளைக் கட்சிகள் போ,ல முஸ்லிம் கட்சிகள் இயங்கிக் கொண்டிருப்பதாலும், முஸ்லிம் சமூகம் 2000ஆம் ஆண்டு கைவிடப்பட்ட இடத்திலேயே இன்னும் நிற்கின்றது.

அந்த வகையில், இலங்கை சூழலில் மிக மோசமாக கெட்டுக்குட்டிச் சுவராகியுள்ள அரசியல், முஸ்லிம் மக்களுக்கானது என்பதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

ஆகவே, இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனமக்களுக்கும் பெருந்தேசிய கட்சிகள், ஆட்சியாளர்கள், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பற்றி பட்டவர்த்தனமாக தெரியும். அவர்களில் யாரை மாற்ற வேண்டும் என்பதை, பல தடவைகளில் உணர்ந்திருக்கின்றோம்.

இருப்பினும், தேர்தல் ஊடாகவும் வேறு வழிமுறைகளிலும் கிடைக்கப் பெற்ற வாய்ப்பை, இலங்கை மக்கள் சரிவரப் பயன்படுத்தினார்களா? தாம் எதிர்பார்க்கும் நாடாக இலங்கையை மாற்றுவதற்குத் தடையாக இருப்பவர்களுக்கு பாடம் புகட்டினார்களா? மாற்றுத் தெரிவை சரியாக அடையாளம் கண்டுள்ளார்களா என்பவைதான் இங்குள்ள கேள்விகளாகும்.

அதேபோன்று, அரசியல்வாதிகளைத் திருத்துவதற்கு முன்னர், இலங்கை மக்கள் தம்முடைய நடத்தைக் கோலங்களில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்? அதனூடாக மாற்றத்துக்காக முன்னிற்பதற்கான தகுதியை, இலங்கை மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்களா என்பதையும் சிந்திக்க வேண்டிய தருணமிது.

இலங்கையில் அரசியல்வாதிகளும், அவர்களது அரசியல் கலாசாரமும் தானாக திருந்தாது என்பதும், அதனூடாக இயல்பாகவும் இலகுவாகவும் (மக்கள் எதிர்பார்க்கின்ற) ஒரு மாற்றம் நிகழ்ந்து விடாது என்பதும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். .

அப்படியென்றால், முதலில் மக்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். பின்னர் நாட்டை, அரசியலைத் திருத்தி, மாற்றத்தை கொண்டு வரவும் தயாராக வேண்டும். இது ஒரு குழுவாக, கட்சியாக, ஒரு சில செயற்பாட்டாளர்களால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. 22.2 மில்லியன் மக்களும் ஒன்றிணைய வேண்டும்.

இது நடக்கும் வரை, எந்தத் தேர்தல் எப்போது நடந்தாலும், யார் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் கனவு காணுகின்ற ‘மாற்றம்’ நிகழப் போவதும் இல்லை. இந்த அரசியல் கலாசாரம் திருந்தப் போவதும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.