;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு!! (கட்டுரை)

0

இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை ரணில், ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டது முதல் மும்முரமாக முன்னெடுத்திருந்தார். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்று நாட்டின் பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்தும் வேலைகள் நடைபெற்று வந்தன.

அதன் பிரகாரம், கடன்களை திருப்திச் செலுத்தக் கூடிய வல்லமையை இலங்கை கொண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கு, இந்தியாவும் சீனாவும் கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கிய கடன் உதவிகளை, காலம் தாழ்த்தி மீள வசூலித்துக் கொள்வதற்கு இணங்கியமை முக்கிய காரணம்.

இந்தக் காரணங்களால், இலங்கை வங்குரோத்து அடைந்த நாடல்ல; அது, பெற்றுக்கொள்ளும் நிதியுதவிகளை மீளச் செலுத்துவதற்கான வலு, அதனிடம் இன்னும் இருக்கின்றது என்று சர்வதேசம் நம்புகின்றது. அதனால்தான், சர்வதேச நாணய நிதியம், ஏழு பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணங்கியிருக்கின்றது என்று கொள்ளலாம். அதை நோக்கும் போது, ரணில் குறிப்பிடுவது போல, இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்பது தர்க்க ரீதியில் சரிதான்!

ஆனால், இலங்கை சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை கிட்டத்தட்ட 64 பில்லியன் டொலர் என்பது பொருளாதார வல்லுநர்களின் வாதம். இந்தக் கடன் தொகையைடு இலங்கையால் இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் திருப்பிச் செலுத்துவதற்கு குறைந்தது 50 வருடங்களாவது ஆகும் என்பதும் அவர்களின் கருத்து.

இலங்கையின் நிலத்துக்கு கீழ் அதிசயிக்கத் தக்க வகையில் எரிவாயுவோ, பொற்றோலியப் பொருட்களோ கிடைத்து, அதைக் கொண்டு நிதி வருவாய், எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்தால் அன்றி, 64 பில்லியன் டொலரைச் செலுத்துவது என்பது உண்மையில் நடக்கக் கூடிய காரியமல்ல. அந்த கடன்கள் மீதான வட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் செலுத்த வேண்டிய கடன் தொகை இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும். அது, நாட்டு மக்களின் பல தலைமுறைகளின் தலைகளில் வரியாகவும், விலை அதிகரிப்பாகவும் எழுதப்படும்.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல், அதன் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு, பௌத்த சிங்கள மேலாதிக்கவாத சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டது. அது, நாட்டின் சமூக, கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்து வந்தது.

சுதந்திரம் அடைந்த போது, இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைத்த சிங்கப்பூர் என்ற அனைவராலும் கைவிடப்பட்ட தேசம், இன்றைக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளோடு போட்டி போட்டு பொருளாதார வெற்றியைக் கண்டிக்கின்றது.

ஆனால், இலங்கையோ, படிப்படியாக வீழ்ச்சியடைந்து, 75ஆவது சுதந்திர தினத்தை அடைவதற்கு முன்னதாகவே, ‘வங்குரோத்து அடைந்த நாடு’ என்ற பெயரைப் பெற்றது. இன்றைக்கு, ‘வங்குரோத்து அடைந்த நாடல்ல’ என்பதை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவியைப் பெறுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதை, ரணில் ஓர் ஆதாரமாக முன்வைத்து, தன்னுடைய ஆட்சிக்கான நற்சான்றிதழை மக்களிடம் கோருகின்றார்.

அதிலும், இன்னும் ஒரு படி மேற்சென்று, அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினர், கடனுதவிக்கான அனுமதி கிடைத்ததை வெடி கொளுத்தி ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். அதைக் காணும் போது, இந்த நாட்டின் ஆட்சியாளர்களினதும் அரசியல் கட்சிகளினதும் சிந்தனை எவ்வளவு சிறிதானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தொகுதிக் கடனாக 3.3 பில்லியன் டொலர் எதிர்வரும் மாதமளவில் கிடைக்கும் என்று அரசாங்கம் நம்புகின்றது. அது கிடைத்ததும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அந்தத்துறை அமைச்சர் கூறியிருக்கின்றார்.

அதுபோல, இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கிக் கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இவையெல்லாம் மக்கள் மீதான அபிமானத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அல்ல!

மாறாக, தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளாகும். தேர்தல் வெற்றிகளைக் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்றுவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதை இலங்கையின் ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் செய்து வந்திருக்கிறார்கள்.

அதனால், நாட்டு மக்கள் மீதான பொருளாதார சுமை என்பது பெருமளவு அதிகரித்திருக்கின்றது. கடன்களை கடந்த காலங்களில் எந்தவித பொருளாதார திட்டங்களும் இன்றி வாங்கிக் குவித்தமையும், அதனை ஆட்சியில் இருந்தவர்கள் சுரண்டி, தங்களின் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டமையாலும் நாட்டின் நாணயப் பெறுமதி ஒவ்வொரு நாளும் பாரிய வீழ்ச்சியைக் கண்டு வந்திருக்கின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கை ரூபாயின் பெறுமதி என்பது, அமெரிக்க டொலரின் பெறுமதியை விட அதிகமாகும். அந்த நிலையில் இருந்து இன்றைக்கு டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி என்பது கிட்டத்தட்ட 400 ரூபாய் என்ற அளவை எட்டியிருக்கின்றது.

ஏழு பில்லியன் டொலர் நாட்டுக்குள் வரப்போகின்றது என்பதைக் காட்டிக் கொண்டு, டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியை 320க்குள் வைத்துக் கொள்ள அரசாங்கம் முயல்கின்றது. ஆனால், பெறும் கடன்களுக்கான வட்டி உள்ளிட்டவை எல்லாமும் சேர்ந்து கொண்டால், டொலருக்கு எதிரான ரூபாயில் பெறுமதி இந்த ஆண்டின் இறுதிக்குள் 400 ரூபாய் என்ற அளவை எட்டும் என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து.

அவ்வாறான நிலை ஏற்பட்டால், நாட்டில் ஏற்கெனவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மத்தியதர வர்க்கம் என்ற பெரும்பான்மையான மக்கள், வாழ்வதற்கான சிக்கல்களை இன்னும் இன்னும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாடு, ‘அபிவிருத்தி அடைந்து வரும் நாடு’ என்ற நிலையில் இருந்து, ‘வறுமைக் கோட்டுக்கு கீழான நாடு’ என்ற நிலையை எட்ட வேண்டியிருக்கும்.

வெளியாரிடம் இருந்து கடன்களைப் பெற்று, அவசரப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணுவதற்குப் பதிலாக, நீண்ட காலப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமாக இருக்கின்றது.

எளிய முறையில் சொல்வதென்றால், வறுமையில் வாடும் ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதைக் காட்டிலும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது என்பது, அவனது பசியை மட்டுமல்ல, அவனது பொருளாதார மீட்சிக்கும் உதவும் என்பது வழக்கு. இந்த நிலை குறித்துதான் மக்களுக்காக சிந்திக்கும் எந்தவொரு ஆட்சியாளரும் செய்ய நினைப்பார்கள். மாறாக, தேர்தலை வெற்றிகொள்வதற்காக, நாட்டை மேலும் மேலும் வங்குரோத்து நிலைக்குள் தள்ளி, விளையாடும் வேலைகளைப் பார்க்க மாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனுதவியைக் கொண்டு, தன்னுடைய தேர்தல் வெற்றிக்கான ஏற்பாடுகளை மாத்திரமே ரணில் மேற்கொள்ள நினைக்கிறார். கடந்த காலங்களில் தன்னையொரு ஜனநாயக விரும்பியாக காட்டிக் கொண்ட அவர், எப்போதோ நடக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்தத் தேர்தல் நடந்தால், தன்னுடைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் கனவு எப்போதோ நீர்த்துப் போயிருக்கும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான், தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு பணத்தினை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவை அலைக்கழிக்கின்றது.

இதன்மூலம், தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகளிடம் இல்லாமல் செய்துவிட்டு, நேரடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திட்டத்தை ரணில் முன்னெடுக்கின்றார். அதில், தன்னை முதன்மைப் போட்டியாளராக முன்னிறுத்துவதற்காக, சர்வதேச நாணயத்திடம் பெற்ற கடன் தொகையைக் பயன்படுத்தப் போகின்றார். இது, யாராலும் சகிக்க முடியாத அரசியல் பொறுப்பின்மை. இதன்மூலம், நாடு மீட்கப்பட முடியாத அலைக்கழியும் நிலைக்கு செல்லும். அது, மக்கள் வாழ முடியாத ஒரு சூழலை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கு வழிகளை உருவாக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.