;
Athirady Tamil News

கல்வியில் உச்சம் தொட்ட வடக்கு மக்கள்! திட்டமிட்டு சிதைத்த சிங்களம் – நில அபகரிப்பை தொடரும் புத்தர்! (கட்டுரை)

0

நாம் வாழும் இந்த பரந்த உலகு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஆரம்பகாலகட்டம் தொடக்கம் தற்போது வரை புதுப் புது மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அவற்றில் பல அதிசயங்களாகவும், பிரம்மிப்பூட்டும் ஆச்சர்யங்களாகவும், இன்னும் பல விடை தெரியா மர்மங்களாகவும் உள்ளன. கற்கால மனிதனின் சிந்திக்கும் திறன் வளர்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதர்கள் நாகரீகத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர்.

அவ்வாறு ஆரம்பித்த பயணத்தில் உதித்ததே தொடர்பாடலுக்கான ஒரு மொழி. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பல பரிணாமங்களைக் கொண்டது.

ஒரு மொழியின் பேச்சு வழக்கம் தொடங்கி அது எழுத்து வடிவமாக உருப்பெறுவது வரை பல நூறு ஆண்டு காலத் தொடர்ச்சியான வளர்ச்சி தேவைப்படுகிறது. அப்படி ஒரு தொன்மையும் சிறப்பையும் கொண்டதுதான் தமிழ் மொழி என்பது வாய்மொழி மூலமாக மாத்திரம் அல்லாமல் பல ஆராய்ச்சிகளின் ஊடாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மொழியும் இத்தகைய பல நூறு ஆண்டுகள் வளர்ச்சியைப் பெற்றுத்தான் இன்று இணையம் வரை கிளை பரப்பி இருக்கிறது. தமிழ் மொழியானது, தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.

தமிழ், மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும் குறிப்பாக, இந்திய மாநிலங்களான கருநாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பிலும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் பேசப்பட்டு வருகின்றது.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும் ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாகப் பல தமிழர்கள் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஓர் உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும் இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதைக் கவனிக்க முடிகின்றது.

அந்த வகையில் இலங்கையில் வாழும் தமிழர்கள், அவர்களின் வரலாறு, வளர்ச்சிப் போக்கு குறித்து ஆராய்கிறது இந்த பதிவு,

இலங்கைத் தமிழர்கள் எனும் பதமானது, இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத்தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை பரம்பரைத் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட இந்திய பரம்பரைத் தமிழரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் பொருட்டே பரம்பரைத் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது.

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் இலங்கையின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இலங்கைத் தமிழர் எனப்படுவோர் ஒரேதன்மைத்தான சமூகப் பண்பு கொண்டவர்கள் அல்ல.

இலங்கைத் தமிழரிடையே காணப்படும் பல்வேறு குழுக்கள் வேறுபட்ட சமூகப் பண்புகளை உடையவர்களாக இருப்பதைக் காண முடியும். மொழிப் பயன்பாடு இலங்கைத் தமிழ் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், பேச்சு வழக்கைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழும் பல வட்டார வழக்குகளை உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகிறது.

இலங்கைப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தமிழ்நாட்டுத் தமிழரின் பேச்சு வழக்குகளில் இருந்து ஒலியியல், உருபனியல், சொற்றொடரியல், சொற்பயன்பாடு போன்ற பல கூறுகளில் வேறுபாடுகளைக் கொண்டதாக அமைந்திருப்பதையும் காண முடியும்.

ஆனாலும், திரைப்படங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றினூடாக தமிழ் நாட்டின் பொதுவான பேச்சு வழக்குகள் இலங்கைத் தமிழருக்குப் பரிச்சயமாக உள்ளன.

அதேவேளை, இவ்வாறான ஊடகத் தொடர்புகள் ஒருவழிப் பாதையாக இருப்பதனால், தமிழக மக்களுக்கு, இலங்கைத் தமிழ் வழக்குகள் அவ்வளவு பழக்கப்பட்டதாக இல்லை. தமிழகத்தில் இருந்து பிரிந்து நீண்டகாலம் தனியாக வளர்ந்ததனால், மிகப் பழைய காலத்துக்குரிய கூறுகளை இன்றும் இலங்கைத் தமிழில் காண முடிகிறது.

இலங்கைத் தமிழ் வழக்குகளில் யாழ்ப்பாணத் தமிழ் வழக்குக் குறிப்பிடத்தக்க ஒன்று, யாழ்ப்பாணத் தமிழ் வழக்கில் பழந்தமிழுக்கு உரிய தனித்துவமான பல கூறுகளை இன்றும் காண முடியும். மட்டக்களப்புத் தமிழும் பல தனித்துவமான கூறுகளைக் கொண்ட ஒரு பேச்சு வழக்காக உள்ளது.

இப்பேச்சு வழக்கிலும், பழந் தமிழுக்குரிய பல கூறுகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளதைக் காண முடியும். இலங்கையில் தமிழ் வட்டார வழக்குகளில், கூடிய பழந்தமிழ் தொடர்பு கொண்டது மட்டக்களப்பு வழக்கே என்ற கருத்தும் உண்டு.

இலங்கைத் தமிழரின் ஆரம்ப கால வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பிலும் பல்வேறு அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம்,இலங்கையின், வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளும் ஒரே தன்மையானவையாகக் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் காணப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அடக்கக் களங்களை ஒத்த களங்கள் இலங்கையின் வடமேற்குக் கரையோரம் பொம்பரிப்பிலும், கிழக்குக் கரையோரம் கதிரவெளியிலும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் அரிக்கமேட்டில் காணப்பட்டதை ஒத்த கி.மு 1300ஐச் சேர்ந்த மட்பாண்ட வரிசைகள் யாழ். மாவட்டத்தில் கந்தரோடையில் கண்டறியப்பட்டுள்ளன.

அதேசமயம், யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நடத்திய ஆய்வில் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் ஒருவனுடைய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்குழியில் காணப்பட்ட முத்திரை ஒன்றில் இரண்டு வரியில் எழுத்துக்கள் காணப்பட்டன. ஒரு வரி தமிழ் பிராமியிலும், மற்றது சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்தும் அமைந்திருந்தமை தெரியவந்துள்ளது.

வேலணை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்ககாலம் தொட்டு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்ததாக அறிய முடிகின்றது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்களின் இனத்தவரே என்னும் கருத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

கிறிஸ்தவ ஆண்டுக்கணக்கின் தொடக்கத்தை அண்டிய காலப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் தெற்குப் பகுதிகள், இலங்கை என்பன ஒரே பண்பாட்டு வலயமாக இருந்தன என்றும், தமிழும், பிராகிருதமும் மக்களின் இடப் பெயர்வினால் அன்றிப் பண்பாட்டுப் பரவலினாலேயே இலங்கைக்கு வந்தன என்றும் ஆய்வுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திசமகாராமையில் நடந்த அகழ்வாய்வுகளின்போது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட உள்ளூர் நாணயங்கள் கிடைத்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் சிலவற்றில் தமிழர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

இது அக்காலத்தில் இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரத்தில் தமிழ் வணிகர்கள் முனைப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது.

விசாகா என்னும் தமிழ் வணிகனின் பெயரும், உள்ளூரில் வாழ்ந்த சமன என்னும் தமிழன் ஒருவனின் பெயரும், கரவா என்னும் தமிழ் மாலுமி ஒருவனின் பெயரும் கல்வெட்டுக்களில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சிங்களவர்களின் வரலாறு கூறும் நூலான மகாவம்சம், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே பல தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமை குறித்த தகவல்களை வெளிப்படுத்துகின்றது.

சேன, குத்தக என்னும் இரு தமிழர்கள் கிமு 177 தொடக்கம் கிமு 155 வரை 22 ஆண்டுகால ஆட்சி புரிந்துள்ளனர். சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளன் என்பவன் கிமு 145 காலப்பகுதியில் இலங்கையைக் கைப்பற்றி 44 ஆண்டுக்காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளான்.

பின்னர் கிமு 104ல் ஏழு தமிழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிமு 87 வரை இலங்கையை ஆட்சி செய்துள்ளனர்.

கிமு 47ஐ அண்டிய காலத்திலும் இரண்டு தமிழர்கள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகாலம் இலங்கையை ஆண்டுள்ளனர். இவற்றை விட, கிபி முதலாம் நூற்றாண்டுக்குப் பின்னர், சிங்கள அரச குடும்பங்களில் ஏற்பட்ட வாரிசுப் போட்டிகள் காரணமாக அரசிழந்தவர்கள் தமிழ் நாட்டில் இருந்து படை திரட்டி வந்து ஆட்சியைப் பிடித்தமை பற்றிய குறிப்புக்களையும் நூல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

கிபி 10 ஆம் நூற்றாண்டிலும், 11 ஆம் நூற்றாண்டிலும், முதலாம் இராசராச சோழன் காலத்திலும், அவனது மகனான இராசேந்திர சோழன் காலத்திலும் இரண்டு முறை ஏற்பட்ட சோழர் படையெடுப்புக்களின் மூலம், இலங்கை முழுவதும் சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது.

சோழர்கள் 77 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தனர். கிபி 1215ல் தமிழ் நாட்டில் வலுவான நிலையில் இருந்த பாண்டியர்கள் இலங்கை மீது படையெடுத்து அதன் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர். மேற்படி ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்தவர்களுடன் படைவீரர்களாகவும் தமிழர்கள் வந்திருப்பர்.

சோழ, பாண்டிய ஆட்சிகள் முடிந்த பின்னரும் இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே தங்கிவிட்டனர். தவிர, இக்காலங்களில் தமிழ் வணிகர்களின் வணிக நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்பட்டன.

வரலாற்று நூல்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 1215 ஆம் ஆண்டில் கலிங்க நாட்டைச் சேர்ந்த மாகன் என்பவன் தென்னிந்தியாவில் இருந்து பெரும் படை திரட்டி வந்து பொலநறுவையைக் கைப்பற்றினான். ஆனாலும், அவனால் அதை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

சிங்கள அரசனின் தாக்குதல்களைத் தொடர்ந்து மாகன் வடக்கு நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டதாகத் தெரிகிறது. அதே வேளை, சிங்கள அரசர்களும் பாதுகாப்புக் கருதி மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து தம்பதெனியா என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினர்.

அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பழைய நகரங்களை உள்ளடக்கிய பெரும் பரப்பு கைவிடப்பட்டு வட பகுதிக்கும், தென் பகுதிக்கும் இடையே வலுவான தடுப்பாக அமைந்தது. இது, தீவின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த தமிழர்களும், தெற்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த சிங்களவர்களும் தனித்தனியாக வளர வாய்ப்பளித்தது.

இதனால்,13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தனியானதும், வலுவானதுமான யாழ்ப்பாண இராச்சியம் உருவானது. தனித்துவமான இலங்கைத் தமிழர் சமுதாயத்தின் உருவாக்கத்துக்கு இதுவே அடித்தளமாக அமைந்ததாக நூல்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.

யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துக்கு முன்னர், தமிழர் இலங்கையில் பரவலாக வாழ்ந்து வந்ததனால் தமக்கெனத் தனியான சமூக நிறுவனங்களை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை.

யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துடன், இலங்கைத் தமிழர் இலங்கையில் ஒரு தனித்துவமான சமூகமாக ஒழுங்கமைக்கப்பட்டது மட்டுமன்றி ஓரளவுக்குப் பொதுவான வழக்கங்களையும், சமூக நடைமுறைகளையும் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது.

வன்னிப் பகுதி, திருகோணமலை என்பன யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்தபோதும் சிறுசிறு பகுதிகளாக வன்னியத் தலைவர்களினால் ஆளப்பட்டு வந்தது.

மட்டக்களப்பு பல வேளைகளில் கண்டி இராச்சியத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் செயற்படவேண்டி இருந்தது. இதனால், மொழி, மதப் பொதுமைகள் இருந்தபோதும் வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன.

இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை பரம்பரைத் தமிழர் என்போர் இலங்கையின் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தலைநகரமான கொழும்பிலும் சில பகுதிகளில் செறிவாக வாழுகின்றனர். ஏனைய பகுதிகளில் மிகவும் சிறுபான்மையினராக உள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையினராக உள்ள இலங்கைத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றில் மட்டுமே தற்போது பெரும்பான்மையினராக உள்ளனர்.

எனினும், காலப் போக்கில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக ஏராளமான இலங்கைத் தமிழர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதாலும், பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமயம் மற்றும் சாதிய முறை

இலங்கைத் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவர். இறுதி கணக்கெடுப்பின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களின் மரபுவழிப் பகுதிகளான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களில் 80 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்துக்களாகவே காணப்படுகின்றனர்.

எஞ்சியுள்ளவர்களுள், கத்தோலிக்கர் மற்றும் பிற கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பலர் அடங்குகின்றனர். 1540 களில் யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளில் போர்த்துக்கேயப் பாதிரிமார்களின் நடவடிக்கைகள் தொடங்கியபோது கத்தோலிக்க மதம் இலங்கைத் தமிழர் மத்தியில் அறிமுகமானது.

1560 இல் போர்த்துக்கேயர் கைப்பற்றிக்கொண்ட பின்னர் அப்பகுதியில் இலங்கைத் தமிழர் பலர் கத்தோலிக்கர் ஆயினர் என்று வரலாற்று கட்டுரைகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழர் சமுதாயம் ஒரு சாதியச் சமுதாயமாக பார்க்கப்படுகின்றது. எனினும், முழுச் சமுதாயமுமே ஒரே மாதிரியான சாதி அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.

கிழக்கு மாகாணத் தமிழர் மத்தியில், குறிப்பாக மட்டக்களப்புப் பகுதியில் காணப்படும் சாதி அமைப்பு, யாழ்ப்பாணப் பகுதிச் சாதி அமைப்பினின்றும் பெருமளவுக்கு மாறுபட்டது.

மட்டக்களப்பில் சாதி அமைப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ளதுபோல் மிகவும் இறுக்கமானது அல்ல. மேலும் விவசாய மற்றும் கடலோர சமூகங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.

மட்டக்களப்புப் பகுதியில் சாதி முறை பல விதங்களில் யாழ்ப்பாணச் சாதி முறையில் இருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. சில சாதிகள் இவ்விரு பகுதிகளுக்கும் பொதுவானவையாகக் காணப்பட்ட போதிலும், சில சாதிகள் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன.

வடக்கு பகுதியில் வெள்ளாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினராக பார்க்கப்படுகின்றனர். எனினும் மட்டக்களப்பில், வெள்ளாளருக்கு அதிகார மேலாண்மை கிடையாது.

அப்பகுதியில் முக்குவச் சாதியினரே அதிகார மேலாண்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர். மக்கள்தொகை அடிப்படையிலும் கூடிய பலம் கொண்டவர்களாக இருப்பவர்கள் இச்சாதியினரே ஆகும்.

ஐரோப்பியர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் மத்தியில் மரபுவழிக் கல்வி முறை இருந்ததாகவும், இது பொதுவாக தமிழ், வடமொழி, சமயம் சார்ந்த விடயங்கள் என்பவற்றைத் தழுவியதாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரந்துபட்ட அளவில் கல்விக்கான வாய்ப்புக்கள் பிரித்தானியர் காலத்திலேயே ஏற்பட்டன.

கிறித்துவ மிசன்கள் பள்ளிக்கூடங்களை நிறுவிக் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டின. காலப்போக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி வீதம் மிக வேகமாக அதிகரித்தது.

ஆரம்ப காலகட்டத்தில் கடுமையாக உழைப்பதன் மூலமே தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தலாம் என்ற நிலை இருந்தபடியால் கல்வி மூலம் கிடைத்த வாய்ப்புக்களை யாழப்பாண மக்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் எனலாம்.

பிள்ளைகளுக்குச் சிறப்பான கல்வியை அளிப்பதே பெரும்பாலான யாழ்ப்பாணத்துப் பெற்றோர்களின் அடிப்படையான நோக்கம்.

இதனால், இப்பகுதியின் படிப்பறிவு மட்டம் நீண்டகாலமாக உயர்வாகவே இருந்து வந்துள்ளதுடன், உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் யாழ்ப்பாண மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்து வந்தது. இது சிங்களவர்களுக்குப் பாதகமானது என்ற கருத்தும் ஆரம்ப காலங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டன.

அதேசமயம், இலங்கையின் இலக்கிய வளர்ச்சியும் கவனிக்கத்தக்க ஒன்று. 1983க்குப் பின்னர் இனப்பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர் இது இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய கருப்பொருளானது.

இது, உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன் எப்பொழுதும் கண்டிராத ஒன்று. இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பெரும்பகுதி தமிழ் விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில், இந்த அடிப்படையில் தமிழ் இலக்கியம் கவிதை, கதை, நாடகம் எனப் பல்வேறு முனைகளிலும் வளர்ந்தது.

இலங்கையில் இடம் பெற்ற இனப்போரின் விளைவாக ஏற்பட்ட உலகம் தழுவிய புலப் பெயர்வுகளினால், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, தமிழுக்குப் புதிய பல கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் உருவாகின்றன.

இலங்கைத் தமிழர் தொடர்பான அண்மைக்கால வரலாறு, குறிப்பாக இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றதற்குப் பிந்திய காலப்பகுதி, பல்வேறு வடிவங்களில் சிங்களவருக்கும், தமிழருக்குமான போராட்ட வரலாறாகவே இருந்து வந்திருக்கிறது எனலாம்.

விடுதலைக்கு முந்திய காலத்தில், தமிழ்த் தலைவர்களுக்கும், சிங்களத் தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது போல் காணப்பட்டது ஆயினும், இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் விடுதலைக்கு முந்திய ஆண்டுகளிலேயே உருவாகிவிட்டன.

யாழ்ப்பாண இராச்சியம் உருவான காலத்தில் இருந்து பெரும்பாலான தமிழர் பகுதிகள் தொடர்ச்சியாக ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தன.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆண்ட காலங்களிலும் யாழ்ப்பாண இராச்சியம் தனியான ஒன்றாகவே கருதப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது.

1815 ஆம் ஆண்டில் இலங்கையின் கடைசிச் சுதந்திர இராச்சியமான கண்டி பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னர், 1833 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட அரசியல், நிர்வாகச் சீர்திருத்தத்தின் கீழ் முழுத்தீவும் ஒன்றாக்கப்பட்டு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு இலங்கைத் தமிழரின் பிற்கால அரசியல் போக்கைத் தீர்மானித்த ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்.

பிரித்தானியர், 1948 ஆம் ஆண்டில் விடுதலை வழங்கி இலங்கை முழுவதையும் சிங்களப் பெரும்பான்மை அரசின் பொறுப்பில் ஒப்படைத்தனர். இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பிரச்சினைகள் உருவாகின.

இந்தியர் பிரசாவுரிமைச் சட்டம், தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டும் சட்டம் போன்றவை தமிழர்களின் உரிமைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கின.

விடுதலைக்கு முன்பிருந்தே பல சிங்களத் தலைவர்கள் சிங்கள மொழியை மட்டுமே அரசாங்க மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

1956ல், பௌத்த, சிங்கள உணர்வுகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, சிங்களத்தை மட்டும் அரச மொழி ஆக்கும் சட்டத்தை நிறைவேற்றினார்.

தமிழரசுக் கட்சியினர் கொழும்பில் இதற்கு எதிராக அமைதிவழிப் போராட்டம் நடத்தினர். இது வன்முறையால் அடக்கப்பட்டது. நாடு முழுவதும் இனக்கலவரம் உருவாகித் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பண்டாரநாயக்க தமிழ் மொழிக்கும் ஓரளவு உரிமை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை செல்வநாயகத்துடன் செய்துகொண்டார். இது பண்டா-செல்வா ஒப்பந்தம் என அறியப்பட்டது.

ஆனால் சிங்களத் தலைவர்களின் கடுமையான எதிப்பின் காரணமாகப் பண்டாரநாயக்க ஒருதலையாக இவ்வொப்பந்ததைக் கைவிட்டார்.

பண்டாரநாயக்கா இறந்த பின்னர் பதவிக்கு வந்த அவரது மனைவி சிரிமாவோ பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார்.

1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய சிரிமாவோ பண்டாரநாயக்க இலங்கையை பிரித்தானியாவில் இருந்து முற்றாகத் துண்டித்துக்கொண்டு குடியரசு ஆக்குவதற்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கினார்.

நாடு முழுவதும் சிங்களமே அரச மொழியாகவும், பௌத்த மதம் முன்னுரிமை கொண்ட மதமாகவும் இருக்கும் வகையில் யாப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் இலங்கை குடியரசு ஆக்கப்பட்டது.

அத்துடன், கல்வித்துறையில் தரப்படுத்தல் போன்றவை தமிழ் மாணவர்களை விரக்திக்கு உள்ளாக்கின. இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்குத் தலைதூக்கத் தொடங்கியது. மிதவாதத் தமிழ்த் தலைவர்களுக்கு இளைஞர்களிடம் இருந்து அழுத்தங்கள் ஏற்பட்டன.

இதன் காரணமாக தமிழர் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டன. இது எவ்வித பயனும் அளிக்காததைத் தொடர்ந்து, 1976 இல் இலங்கையில் தமிழருக்குத் தனிநாடு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனவும் மாற்றப்பட்டது.

அமைதிவழியில் தமது இலக்கை அடைவதையே இம்முன்னணி நோக்கமாகக் கொண்டிருந்தது. 70 களின் பிற்பகுதியிலும், 80 களின் முற்பகுதியிலும் அமைதி வழியில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் சிலர் சிறுசிறு குழுக்களாக இயங்கிவந்தனர்.

1983 இல் இடம்பெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து படிப்படியாக மிதவாத அரசியல் கட்சிகளின் செல்வாக்குத் தளர்ந்து வந்தது. பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் வளர்ச்சிபெற்று வந்தன.

இவற்றுக்கிடையே உள் முரண்பாடுகளும் அடிக்கடி வெளிப்பட்டன. காலப்போக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்குக் கிழக்கின் பெரும் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்தது.

1987 இல் இலங்கைத் தமிழரின் பங்களிப்பு எதுவும் இன்றி இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஒன்று உருவானது. இதன் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கத்துக்காக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், தமிழ் தேசிய மொழியாகவும் அறிவிக்கப்பட்டது.

அமைதி காப்பதற்காக வடக்குக் கிழக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டது. தொடர்ந்து இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி இரு தரப்பினரிடையே போர் ஏற்பட வழிவகுத்தது.

1989 இல் ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறாமலேயே இந்திய அமைதிப்படை விலகவேண்டி ஏற்பட்டது. மீண்டும் வடக்குக் கிழக்கின் பல பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வெளிநாட்டு நடுவர்களுடன் பல அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்றனவாயினும் எவ்வித பயனும் விளையவில்லை.

உலக அரங்கில் இடம்பெற்ற சில நிகழ்வுகளையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொள்கை மாற்றங்களையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசு, பல நாடுகளின் உதவிகளைப் பெற்று, விடுதலைப் புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

கிழக்கு மாகாணத்தில் தொடங்கி புலிகளிடம் இருந்த பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிய இலங்கை இராணுவம், முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது.

போர் நிறுத்தப்பட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர் பலரும் பல்வேறு மட்டங்களில் இப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இன நெருக்கடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசுக்கு வரக்கூடிய சர்வதேச நெருக்குதல்களே தங்களது மீட்சிக்கான ஒரு பாதையைத் திறந்துவிடுமென்று தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை இன்றும் காணப்படுகின்றது.

இதற்காக தமிழ் கடசிகளும், அரசியல் பிரதிநிதிகளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், ஒரு தீர்க்கமான முடிவு இதுவரையில் தமிழருக்கென்று கிடைத்தபாடில்லை.

போரின் முடிவுக்குப் பிறகு அரசுக்கு அதன் பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு காரணத்தினை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்த காரணம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகள் என பறைசாற்றப்பட்டது.

அந்தச் சக்திகளின் ஆதவுடனும் ஒத்துழைப்புடனும் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் தங்களை மீள அணி திட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக அரசு கூறி, அது தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெரும் பரப்புரைகளை முன்னெடுத்து வந்தது.

இதன் விளைவாக காலத்திற்கு காலம், விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் என்ற பெயரில் பலர் கைது செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆன போதிலும், அதனால் ஏற்பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட வலிகளும் இன்றும் அவ்வாறே இருந்து வருகின்றன.

போர் இடம்பெற்ற மற்றும் அதன் பின்னரான காலப் பகுதிகளில் பல்வேறு காரணங்களால் தமது உறவுகளை தொலைத்தவர்கள் இன்றும் வீதியில் போராடி வருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படும் இவர்களின் உறவினர்கள், இன்றும் தமது உறவுகளை தேடி போராடி வருகின்ற நிலையில், போராட்டங்களில் ஈடுபட்ட பலர், போராட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், உடலில் வலுவின்மை போன்ற காரணங்களில் பெற்றோர் போராட முடியாத நிலைமைக்கு உள்ளாகின்றனர்.

அதேவேளை, தமது உறவுகளை தேடி போராட்டங்களை ஆரம்பித்து, வீதிகளில் போராடி போராடி, இறுதி வரை காணாமல் போன உறவுகளை கண்டறிய முடியாது, இன்று வரை நுநூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் சங்கம் தெரிவிக்கிறது.

இதனையும் தாண்டி தற்போது தமிழர் தேசங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கல் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் பெயரில் நடத்தப்படும் இந்த பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் திரைமறைவில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலயம் முதற்கொண்டு தற்போது, தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை வரைக்கும் சர்ச்சைகளும் சமாளிப்புக்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள நந்தி கொடிகள் சேதமாக்கப்பட்டது, திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பௌத்த மயமாக்கல், கண்ணியாவின் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அது மாத்திரம் அல்லாமல், திடீர் திடீரென தமிழர் பகுதிகளில் ஆங்காங்கே புத்தர் சிலைகளை வைத்தும் மக்களை திகிலூட்டுவதுடன், தமிழர்களின் காணிகளில் இராணுவத்தினரின் பிரசன்னமும் அவர்களின் அதிகாரமும் கூட தமிழர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.