;
Athirady Tamil News

சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்)

0

சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்)

(குறிப்பு.. – சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடைபெறும் நிர்வாகக் குளறுபடி குறித்து, “அனலையூரான்” அனுப்பி வைத்த செய்தியையும், மேற்படி நிர்வாகக் குளறுபடி குறித்து அவ்வாலய முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.தர்மகுலசிங்கம் விடுத்த அறிக்கையினையும் “அதிரடி” இணையம் இதன்மூலம் பகிரங்கத்தில் வெளிக்கொணர்கிறது.

இதேவேளை இதுபோன்ற நிர்வாக முறைப்பாடுகள் சுவிஸில் உள்ள பல இந்து ஆலயங்களில் நிலவுவதாகவும், இதுக்கென எல்லோரும் சுவிஸ் நீதிமன்றத்தை நாட, நிர்வாகத்தினரும் நீதிமன்றத்தை நாடி உள்ளார்களாம். இதனால் வீண் நேர, பண விரயம் அதுவும் அடியார்களின் பணம் விரயமாவது புரியாமல் எல்லோரும் செயல்படுகின்றனர் எனப் பலரும் விசனமடைந்து தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் நிர்வாகக் குளறுபடிகள் தொடர்ந்து நடைபெற்று மீண்டும் சுவிஸ் நீத்மன்றக் கதவுகள் தட்டப்பட்டு உள்ளதாம். விரைவில் இதுகுறித்த விரிவான செய்தியை “அதிரடியில்” எதிர்பாருங்கள்)

அனலையூரான் அனுப்பி வைத்த செய்தி இது..

2022ம் ஆண்டுக்குத் தெரிவான நிர்வாகத்தினர் தாங்கள் நிர்வாகத்தைக் கைப்பற்றியது, ஆலயத்தில் 12 வருடங்கள் பூசை செய்த அர்ச்சகரை வெளியேற்ற வேண்டும் என்பது போலவே செயற்படத் தொடங்கினார்கள். இந்த அர்ச்சகரின் காலத்திலேயே ஆலயம் வளர்ச்சி பெற்றதை யாரும் மறுக்கமாட்டார்கள். முதற்கண் அர்ச்கரின் ஊதியத்தைக் குறைத்தார்கள். அதனைப் பொருட்படுத்தாத அர்ச்சகர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டார்.

மீண்டும் வருடாந்த உற்சவகாலம் நெருங்கிய நேரத்தில் அர்ச்சகருக்கு புதிய விதி முறைகளை அறிவித்து, அடியார்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவரை ஆலயத்தை விட்டு 20 நாட்களிலேயே அவசரமாக அகற்றினர். வருடாந்த உற்சவம் சரியான அர்ச்சகர்கள் இன்றி இறுதி நேரத்தில் புதிய அர்ச்சகர்களால் பலரின் மனவேதனையுடன் நடை பெற்றது.

இக்காலத்தில் அடியார்களின் அமைதிக்காகவும், அனைவரின் உரிமைக்காகவும் ஆலய யாப்பின் பிரகாரம் 20% அங்கத்தவர்கள் கையொப்பமிட்டு அவசர அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டம்படி விண்ணப்பித்தோம். பதில் எதுவும் தரவில்லை. மீண்டும் விண்ணப்பித்தோம். இரண்டு மாதங்களின் பின் அங்கத்தவர்கள் பலரை அடையாளம் தெரியாது என்று, விண்ணப்பத்தை நிராகரித்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் புதிய நிர்வாகம் தெரிவாகும் விதிமுறை கொண்ட ஆலயத்தில், சமாதான முறையில் கூட்டத்தில் கதைத்து தீர்வு தேட நிர்வாகத்தினர் தயாரில்லாத காரணத்தால், நிர்வாகத்தினரின் தன்னிச்சையான முடிவுகளுக்கு கடிவாளம் போடும் எண்ணத்துடன் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டது. நிர்வாகத்தினர் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தாங்களே நிர்வாகத்தினர் என சர்வாதிகாரமாக அறிவித்தனர்.

நீதிமன்றத்தீர்ப்பு நிர்வாகத்தினருக்கு எதிராகவே அமைந்தது.நாங்கள் கொடுத்த நிகழ்ச்சி நிரலின்படி கூட்டம் கூட்டும் வண்ணம் தீர்ப்பு அமைந்தது. யாப்பை உதாசீனம் செய்த நிர்வாகத்தினர், நீதிமன்றத் தீரப்பையும் உதாசீனம் செய்து சரியான முறையில் கூட்டத்தை நடத்தாததால், சட்டத்தை மதிக்காத நிர்வாகத்தினருக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டது.

அவர்கள் தீர்ப்பை சரியா நடைமுறைப் படுத்தவில்லை என்பதால், அவர்களின் நிர்வாகத் தெரிவு செல்லுபடியற்றது எனத் தீர்ப்பு வந்துள்ளது. யாப்பையோ, சட்டத்தையோ மதிக்கத் தெரியாத நிர்வாகத்தால், ஆலயத்தின் நற்பெயருக்குத்த தான் களங்கம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டத்தைக் கூட்டி, புதிய நிர்வாகத்தை வழக்கறிஞரின் ஒருவரின் மேற்பார்வையில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிய வேண்டும் என்று 05.05.2023 தீர்ப்பாகி உள்ளது.

இப்படியாக இந்த வழக்குகளை முன் எடுத்த தவம் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் தர்மகுலசிங்கத்திற்கு ஆலயத்திற்கும், நிர்வாகத்திற்கும் எதிராக அவதூறாகச் செய்தி வெளியிடுவதாகவும், அதனைத் தடை செய்யவும், இக் குற்றத்திற்கு தண்டனை வழங்கும்படியும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கும் தில்லையம்பலம் தர்மகுலசிங்கத்திற்கு சாதகமாகவே தீர்பபு வந்துள்ளது. இந்த மூன்று வழக்குகளும் ஆலயங்களுக்கு நிர்வாகத்தினராகத் தெரிவாவோர் தன்னிச்சையாக, சர்வாதிகாரமாகச் செயற்படுவற்கு எதிராக அமைந்து உள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்பு எம்மவர்களின் மற்றைய ஆலயங்களுக்கும் முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.
-அனலையூரான்-

**************************

திரு.தில்லையம்பலம் தர்மகுலசிங்கம் வெளியிடட அறிக்கை இது..

விநாயகர் துணை!

லங்னவு ஸ்ரீ விநாயகர் ஆலயத்திற்கு 2021 ம் ஆண்டு தெரிவான நிர்வாகத்தினருக்கு எதிரான விடயங்களுக்காக, Burgdorf நீதிமன்றத்தில் Schlittunsbehörde முன்னிலையில் 05.05.2023 அன்று நடைபெற்ற இரண்டு வழக்குகள் பற்றிய விபரங்கள்.

கெளரவ நிர்வாகசபை அங்கத்தவர்கள்!
ஆலய அங்கத்தவர்கள்! அடியார்கள்! பக்தர்கள்,
ஆலய நலன்விரும்பிகள்!
சைவப் பெரியார்கள்! அந்தணப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்!

இது வரையிலும் ஆலயம் சார்பாகவோ, ஆலய நிர்வாகத்தினர் சார்பாகவோ அல்லது ஆலய கணக்காய்வாளர் என்ற ரீதியிலோ எனது பதிவுகளோ, ஒன்றுகூடல் அழைப்புக்களோ இருந்தது இல்லை. யாவும் எனது தனிப்பட்டவையாகவே இருந்தது. 05.05.2023 அன்று Burgdorf நீதிமன்றத்தில் Schlittunsbehörde முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் உறுதிப்படுத்தப் பட்டது. இதுவரையும் எனது கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களாகவே பதிவிடப் பட்டன என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகின்றேன்.

கீழ் வரும் விடயங்களையும் எனது தனிப்பட்ட பதிவாகவே உங்கள் முன் தெரியப் படுத்துகின்றேன்.

05.05.2023 அன்று Burgdorf நீதிமன்றத்தில் Schlittunsbehörde முன்னிலையில் ஆலய விடயங்களுக்காக நடைபெற்ற இரண்டு வழக்கு விசாரணைகளின் முக்கியமானவைகளை உங்கள் அனைவருக்கும் அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

முதலாவது என்னால் ஆலய நிர்வாகத்தினர் மீது தொடுக்கப்பட்டது. 26.02.2023 அன்று நடைபெற்ற அங்கத்தவர் கூட்டத்தில் நடைபெற்ற தன்னிச்சையான நிர்வாகத் தெரிவு யாப்பின் பிரகாரமோ, சட்டப் பிரகாரமோ, 20.01.2023 நீதிமன்றத் தீர்பின் பிரகாரமோ நடைபெறவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு, நிர்வாகத் தெரிவு செல்லுபடியற்றது என முடிவாகியது.

அடுத்து ஶ்ரீ விநாயகர் ஆலய மன்றம் எதிர்வரும் 30.Juni 2023 முன்பாக புதிய அங்கத்தவர் கூட்டத்தை கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவானது.

அக்கூட்டத்தில் புதிய நிர்வாகத்தினர் யாப்பின் பிரகாரம் தெரிவு (இரகசிய வாக்கெடுப்பு) செய்யப்பட வேண்டும். ஶ்ரீ விநாயகர் ஆலய மன்றம் நொத்தாரிசு திருவாளர் Peter Kobel அவர்களை அழைத்து, அவரின் மேற்பார்வையுடனும், யாப்பின் பிரகாரமும் ஒன்றுகூடலை நடத்த வேண்டும் எனவும் முடிவாகியது.

பல கருத்தாடல்கள், பல விட்டுக்கொடுப்புகளின் பின்பு, முக்கியமாக ஆலயத் திருப்பணி எக்காரணத்தாலும் தடைப்படக் கூடாது என்ற நல்நோக்கத்தினால் தற்போதைய நிர்வாகம் 30. September 2023 வரை இயங்கவும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. புதிய நிர்வாகம் 01. Oktober 2023 பதவி ஏற்று குறைந்து 31. Dezember 2024 பதவியில் இருக்கவும் முடிவாகியது.

தற்போதைய நிர்வாகத்தினர் இலையுதிர் காலத்தில் நடைபெறும் ஒன்றுகூடலில் திருப்பணிக் கணக்குகளை ஒப்படைத்து பொறுப்புக் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.

இரண்டாவது ஆலய நிர்வாகத்தால் என் மீது தொடுக்கப்பட்டது. ஆலய யாப்புக்குக்கோ அல்லது சட்டத்திற்கு எதிராகவோ செயற்படவில்லை என்றும், செயற்படமாட்டேன் என்றும் உறுதி செய்யப்பட்டது. தொடர்புகளை ஏற்படுத்தும் போது முக்கியமாக (WhatsApp, soziale Netzwerke போன்ற சமூக வலைத்தளங்களில் அறிவிக்கும் போது) கணக்காய்வாளராகவா அல்லது தனிப்பட்ட முறையிலா என்பதைத் தெளிவாக்க வேண்டும் எனவும் முடிவாகியது. இந்த முடிவுகள் அல்லது தீர்மானங்களின் ஜேர்மன் மொழியில் உள்ள மூலப்பிரதிகளை என்னுடன் தொடர்பு கொண்டு பார்வையிடலாம் என்பதையும் அறியத் தருகின்றேன்.

எங்கள் மூதாதையர்கள் சிலவற்றை அழகான பழமொழிகள் மூலம் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்கள். இவைகள் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக உள்ளது. உதாரணம் “மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது ஆனால் மணி கட்டின மாடு சொன்னால் கேட்குமாம்”.

வீண் நேரவிரயம், வீண்செலவுகள், மனவேதனைகள், வீண் கோப தாபங்கள் இப்படி இன்னும் பல.. ஏனெனில் ஆணவத்துடனும், அடாவடித்தனத்டனும், அதிகாரத்திமிருடனும், யாப்பின் படி நடைமுறை படுத்தத் தெரியாததும், சட்டத்தின் படி நடைமுறை படுத்தத் தெரியாததும், எல்லாம் அவர்கள் கட்டளையின்படி தான் நடக்க வேண்டும் என்ற சர்வாதிகார எண்ணம் கொண்ட நிர்வாகத்தைத் தெரிவு செய்த நாங்கள் தான் இவைகளுக்கு காரணம் என்பதையும் அனைவருக்கும் ஆணித்தரமாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

இனி வரும் காலங்களில் இப்படியானவர்களை நிர்வாகங்களுக்கு தெரியாமல், நேர்மையானவர்களாகவும், பொய் கூறாதவர்களாகவும், ஆலயத்திற்கு வரும் அனைவரையும் அரவணத்து, அனைவரிடமும் அன்பு செலுத்தி ஆலயத்தை திறம்படச் செயற்படுத்தக் கூடிய நல்ல இதயம் உள்ளவர்களைத் தெரிவு செய்து ஆலயத்தை மேலும் திறம்படச் செய்வீர்கள் என நம்புகின்றேன்.

இங்கு ஆலயத்தில் நடந்த கசப்பான சம்பவங்களால் தவிர்க்க முடியாமலும், எங்களுக்குள் பேசி அமைதியாக தீர்வுகள் காண முடியாத்தாலும், நிர்வாகத்தினர் எங்களைச் சந்தித்து பேச உடன்படாததாலும், வேறு வழிமுறைகள் இல்லாததினாலும் தான் சட்டத்தையும், நீதியையும் நாடினோம். முடிவில் மூன்று வழக்குகளிலும் நியாயம் தோற்காது என்பதை நீதிமன்றம் சட்டரீதியாக இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பிலும் உறுதிபடக் கூறி உள்ளது.

இதற்கும் என்மீது பொலிசில் முதலில் முறைப்பாடு செய்த தற்போதைய நிர்வாகத்திற்குத் தான் நன்றி கூற வேண்டும்.
இக் காரணத்தாலேயே நான் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டது. என்மீது பொலிசில் முதலில் முறைப்பாடு செய்யாமல் இருந்தால் நான் நீதிமன்றத்தை நாடாமலே கூடப் போயிருக்கலாம்.

இவ்விதம் நீதிமன்றத்தை நாடிப் போராடியதால் யாருக்குமே தனிப்பட்ட முறையில் வெற்றியோ அல்லது தோல்வியோ என்பது இல்லை. விநாயகர் அடியார்களுக்கு கிடைத்த வெற்றி என்பது தான் உண்மையானது. இந்த முடிவுகள் நியாயம் எப்போதும் தோல்வி அடையாது என்பதை உணர்த்தி உள்ளது. இனிமேலும் சட்டத்தையும், நீதியையும், நியாயத்தையும் காப்பாற்றுவோம்.

அத்தோடு இனிமேல் வரும் நிர்வாகத்தினரும் தன்னிச்சையாகவும், தான் தோன்றித்தனமாகவும் செயற்படாமல் இருக்க வழி காட்டவும், பாடமாகவும் அமையும் என்பதையும் உறுதி படக் கூறிக் கொள்கின்றேன்.

இத்துடன் ஆலய நலன் கருதி இறுதி வரை சேர்ந்து பயணித்து ஆலோசனைகள் வழங்கியவர்கள், பக்தர்கள், ஆலய நலன் விரும்பிகள், நண்பர்கள், அந்தணர்கள், சைவப் பெரியார்கள், வழக்கறிஞர் லிங்கநாதன் ரஜீவன் மற்றும் அனைவருக்கும் எனது இதயபூர்வ நன்றிகளைத் தெரிவித்து உங்கள் கரங்களை இறுகப்பற்றிக் கொள்கின்றேன்.

இனி வரும் காலங்கள் அமைதியாகவும், சிறப்பாகவும் ஆலயம் இயங்க வேண்டும் என்பதே என் போன்றோரின் வேண்டுதலும் பிரார்த்தனையுமாகும்.

அன்பே சிவம்🙏
தில்லையம்பலம் தர்மகுலசிங்கம்
05.Mal 2023

You might also like

Leave A Reply

Your email address will not be published.