;
Athirady Tamil News

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!!

0

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகின்றனர்.

நாம் பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாது வடமாகாணத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.

சம்பளம் வழங்கப்பட முன்னரே உரிய அதிகாரிகளுடன் எழுத்து மூலமாக நாம் கோரிக்கை விடுத்த போதும் உங்களது சம்பளம் குறைக்கப்படாது என்று அவர்களால் எமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சம்பளம் வழங்கப்படாமல் விடுவது தொடர்பாகவோ சம்பளம் குறைப்பு தொடர்பாகவோ நிறுவனங்கள் முன்னரே அறிவிக்க வேண்டும் என்பது ஸ்தாபன விதி. ஆனால் எதுவும் பின்பற்றப்படாமல் இங்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டு சுகாதார அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களுடன் கலந்துரையாடிய போது அத்தியாவசிய தேவையான சுகாதார துறைக்கு சம்பளங்கள் குறைக்கப்படாது என வாக்குறுதியளிக்கப்பட்டது.

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் நிலையே காணப்படுகின்றது. அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை காணப்படவில்லை. ஊடகங்களை அவதானித்தால் எரிபொருள் நிலையங்கள் எங்குமே எமக்கு மதிப்பளிக்கபடாத விரட்டியடிக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நெருக்கடிக்குள் நாம் எமது பணிகளை மேற்கொள்ளும் போது சம்பள குறைப்பு மேற்கொண்டு சம்பளத்தை வழங்காமல் விட்டால் நாம் என்ன செய்வது? எமக்குரிய சம்பளம் முழுமையாக வழங்கப்படாமல் விட்டால் நாடும் மக்களும் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவர். நாடு சுடுகாடாகுவதையா இந்த அரசாங்கம் விரும்புகின்றது.

மிகவும் சிக்கலான காலத்தில் நாம் எதிர்கொண்டு சேவைகளைச் செய்யும் போது சம்பள குறைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆகவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாம் எமது தாய்ச்சங்கத்துடன் கலந்துரையாடி எதிர்வரும் காலத்தில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக உள்ளோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.