;
Athirady Tamil News

இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி: ஷிண்டே- பட்னாவிஸ் தீவிர ஆலோசனை..!!

0

ஜூன் 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த தலா 9 பேர் என மொத்தம் 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதனால் ஷிண்டே, பட்னாவிசை சேர்த்து மந்திரி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார். மந்திரி சபை விரிவாக்கத்தை தொடர்ந்து உடனடியாக இலாகா ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆனால் மந்திரி சபை விரிவாக்கத்தை போல மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதிலும் இழுபறி நீடித்து வருகிறது. முக்கிய இலாகாக்களை கைப்பற்ற இரு தரப்பினர் இடையே போட்டி வலுத்து உள்ளதால், இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்தது. இருப்பினும் இலாகா பகிர்வு தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய இலாகாவான உள்துறையை தன்வசம் வைத்து கொள்வார் என பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை கண்காணிக்க இந்த இலாகா அவருக்கு உதவும் என்றும் அவர் கூறினார். தேவேந்திர பட்னாவிஸ் 2014 முதல் 2019 வரை முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்துறையை தன் வசமே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல மற்றொரு முக்கிய இலாகாவான நிதித்துறையை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எந்த இலாகாவை நிர்வகிப்பார் என தெளிவாக தெரியவில்லை. எனினும் அவர் நகர்ப்புற வளர்ச்சி, மாநில அரசு போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகிப்பார் என கூறப்படுகிறது. கடந்த மகா விகாஷ் அகாடி ஆடசியில் அவர் பொதுப்பணித்துறை, நகர வளர்ச்சி, மாநில போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகித்தார். பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவார் ஆகியோருக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. கடந்த பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் சந்திரகாந்த் பாட்டீல் வருவாய் மற்றும் கூட்டுறவு இலாகாக்களையும், சுதீர் முங்கண்டிவார் நிதி மற்றும் வனத்துறையையும் வகித்தனர். பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு மந்திரியான விஜய்குமார் காவித்துக்கு பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் அந்த கட்சியை சேர்ந்த தலித் தலைவரான சுரேஷ் காடேக்கு சமூக நீதித்துறை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.