;
Athirady Tamil News

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும்- பிரதமர் மோடி..!!

0

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினவிழாவுக்கு பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அதிகாலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டார். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்தியை வெளியிட்டார். இதையடுத்து டெல்லி செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்தார். அங்கு அவரை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், ராஜாங்க மந்திரி அஜய்பட் இருவரும் வரவேற்றனர்.

அதை ஏற்றுக்கொண்டு முப்படை அணிவகுப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடைக்கு சென்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது 4 ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து மலர் தூவின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்த மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த நாள். நாட்டுக்காக உழைத்த மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், பகத்சிங், மங்கள் பாண்டே, சந்திரசேகர் ஆசாத், சபியுல்லாகான், சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், சவர்க்கர், பாரதியார், வேலுநாச்சியார் போன்றோர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேகமான வளர்ச்சியை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க வேண்டிய காலம் இது. ஒவ்வொரு இந்தியனும் வளர்ச்சிக்காக வேகமாக அடியெடுத்து வைக்க வேண்டும். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இந்திய பெண்கள் தங்களது சக்தியை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். சுதந்திர போராட்டத்தில் பெண்கள் பழங்குடி இன மக்களின் பங்கு மகத்துவமானது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் தியாகமும் போற்றப்பட வேண்டும். நாட்டில் உள்ள 140 கோடி மக்களையும் தேசிய கொடி ஒருங்கிணைக்கிறது.

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் வெளியில் தெரியாதபடி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நாம் போற்ற வேண்டும். அவர்களது சிறப்பை நாம் வெளியில் கொண்டு வர வேண்டும். அவர்களது கனவு போற்றப்பட வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் பல ஏற்றத்தாழ்வுகளை இந்தியா சந்தித்து உள்ளது. உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியாதான். உலகின் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில்தான் என்பதை நாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உணவு பாதுகாப்பு, இயற்கை பேரழிவு, பஞ்சம், போர், தீவிரவாதம் ஆகிய அனைத்தையும் கடந்து நமது நாடு மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பன்முக தன்மையே நமது வலிமையாகும்.

சுதந்திர போர் நிறைவில் நாடு 2 ஆக பிரிந்தபோது மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர். இதை கருத்தில் கொண்டு மகளிர் மற்றும் பழங்குடி இன மக்கள் முன்னேற்றத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறிப்பாக கடைநிலை மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே எனது இலக்காகும். காந்தியும் இந்த கனவைத்தான் கண்டார். அதை நிறைவேற்றுவது எனது லட்சியம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன். சுதந்திர போராட்டத்தின்போது நாம் ஒற்றுமையாக இருந்ததால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்டம் கண்டது.

அதேபோல் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இனியும் வளர்ச்சிக்காக நாட்டு மக்களை மேலும் காத்திருக்க செய்ய முடியாது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது நிறைவேற்றப்படும். 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்து இருந்தேன். அதை ஏற்று மக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர். எனது கோரிக்கையை ஏற்றதற்காக மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து அதை எதிர்கொண்டோம்.

இன்று நாம் அதில் வெற்றி பெற்று இருக்கிறோம். நாட்டில் 200 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. நமது நாட்டின் அரசியல் நிலைத்தன்மையால்தான் இது சாதிக்க முடிந்தது. அரசியல் நிலைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகுக்கு இந்தியா காட்டி உள்ளது. ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம். அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதே மத்திய அரசின் இலக்காகும். இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமான காலக்கட்டமாகும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதற்கான உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரத்தின் 100-வது ஆண்டை கொண்டாடும்போது நமது சுதந்திர போராட்ட வீரர்கள் என்னென்ன கனவுகளை கண்டிருந்தார்களோ அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

இளைஞர்கள் இதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம். நமது ஒற்றுமையே நமது பலம். நிலையான அரசு, சிறப்பான கொள்கை மூலம் நாம் அனைத்தையும் சாதித்து காட்ட வேண்டும். உலக நாடுகள் தங்கள் பிரச்சினைகளை இந்திய வழியில்தான் தீர்வு காண தொடங்கி உள்ளன. ஒட்டுமொத்த உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. எனவே இனி பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு கை கொடுப்பதாக இருக்கும். அன்னிய ஆட்சியாளர்களின் தாக்கங்களை நாம் முழுமையாக அகற்ற வேண்டும். வெளிநாட்டு அடிமைத்தனத்தை வேரறுத்து விரட்ட வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தை கர்வத்துடன் பாதுகாக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் சுதந்திர போராட்ட வீரர்களின் அத்தனை கனவும் நிறைவேறி இருக்க வேண்டும். நமது பாரம்பரியம் மிக மிக சிறப்பானது. அதை நினைத்து நாம் ஒவ்வொருவரும் பெருமைபட வேண்டும்.

அதை அடிப்படையாக கொண்டு ஒற்றுமை, ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுதந்திர நூற்றாண்டின்போது இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் மின்சாரம், குடிநீர் வழங்குவதில் வெற்றி காணப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக அனைத்தும் பெற்றாக வேண்டும். இதற்காக என்னுடன் சேர்ந்து நீங்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நமக்கு இருக்கும் பெருமையாகும். ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் மொழி தடையால் திறமை வெளிப்படுவது பாதிக்கப்படுகிறது.

புவி வெப்பம் ஆவதை தடுக்க நமது முன்னோர்கள் வழிகாட்டி உள்ளனர். அந்த வழியில் சென்று உலகுக்கு வழிகாட்ட வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். பெண்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்க கூடாது. இன்று நாம் ஒவ்வொரு குடிமகனையும் சுய சார்பு உள்ளவராக மாற்றி இருக்கிறோம். சுய சார்பு ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் 300 பொருட்களை தவிர்த்து இருக்கிறோம். இந்தியா உற்பத்தியின் மையப்புள்ளியாக மாறியதால்தான் இதை சாதிக்க முடிந்தது. புதிய கண்டுப்பிடிப்புகள் மூலம் நாட்டை மேலும் வலிமைப்படுத்த முடியும். ஐ.டி. மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் நமது சக்தி மேலும் அதிகரிக்கும். ரசாயனமில்லாத விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் இணைய தள வசதியை 5 ஜி, ஸ்பெக்ட்ரம் உருவாக்கும். சிறு குறு விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு உதவிகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சி பெறும். ஊழலும், வாரிசு அரசியலும்தான் இந்தியாவின் மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இந்த இரண்டையும் அகற்ற வேண்டும். ஊழலுக்கு எதிராக பலமான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழலை ஒழிக்கும் விசயத்தில் அரசுக்கு மக்கள் ஆசீர்வாதம் தர வேண்டும்.

ஆதரவு தர வேண்டும். ஊழலை ஒழிப்பதில் மக்களின் ஆதரவு எனக்கு தேவை. குடும்ப வாரிசு அரசியலும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வாரிசு அரசியல் காரணமாக அரசியலில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. வாரிசு அரசியலால் நாட்டில் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.