;
Athirady Tamil News

பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள்!! (மருத்துவம்)

0

உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் பிரகாரம், எமது நாட்டிலுள்ள குழந்தைகளில் 93 பேருக்கு ஒருவர் வீதம், இந்த ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளன​ர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின், ஜோன் ஹொப்கின்ஸ் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணராக லியோ கெனர் என்பவராலேயே, இந்த ஒட்டிசம் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1943ஆம் ஆண்டில், மனவள அபிவிருத்தி தொடர்பில், சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் போதே, இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் நிலைமை, எந்த மட்டத்திலுமுள்ள குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடும், அதிகளவில் இது, ஆண் குழந்தைகளையே பாதிக்கின்றது. ஒட்டிசம் என்பதை, கவனிக்காது விடுவது சிறந்ததல்ல. அதனால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக​ளை விரைவில் அடையாளம் காணவேண்டியது கட்டாயம்.

ஒட்டிசம் என்பது, வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றமாகும். குழந்தைகளின் மூளையானது, முதல் ஐந்து வருடக் காலப்பகுதியிலேயே, 80 சதவீதம் வளர்ச்சி அடைகின்றது. அதனால், அந்த வயதுக் காலத்திலேயே இந்நோய் அறிகு​றியைக் கண்டறிந்தால், அவர்களை அந்நிலைமையிலிருந்து மாற்றிக்கொள்வது இலகுவானது.

இல்லாவிடின், குழந்தைகளின் தொடர்பாடல், சமூகத்துடனான நெருக்கத்தைப் போன்று, அவர்களுடைய நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். தொடர்பாடல் பிரச்சினை, சமூகச் செயற்பாடுகளின் வீழ்ச்சி மற்றும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்நோயை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

தொடர்பாடல் பிரச்சினை

01. ஒரு வயதாகும்போது, தனிச் சொல்லைக்கூட பேசாதிருத்தல் அல்லது இரண்டு வயதாகும்போது, இரண்டு சொற்களைக்கூட இணைத்துப் பேசாதிருத்தல்.
02. சாதாரணமாக ஆரம்பிக்கும் பேச்சு, போகப்போக, ஏற்கெனவே பேசிய வார்த்தைகளைக்கூட பேசாதிருத்தல்.
03. விளக்கமின்மை, யாராலும் புரிந்துகொள்ள முடியாத மொழி போன்றவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்தல்.
04. ​வேறொருவர் சொல்லும் வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லல்.

சமூகப் பிரச்சினை
01. கண்களையும் முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தல் அல்லது பார்ப்பதைக் குறைத்தல்.
02. ஒரு வயதாகும்வ​ரை, விரலை நீட்டி, சுற்றுச்சூழலில் இருப்பதாகக் காண்பிக்காதிருத்தல்.
03. மற்றையவர்களுடன் சிரிக்காதிருத்தல்.
04. பெயரைச் சொல்லி அழைக்கும்போது, செவிமடுக்காதிருத்தல்.
05. ஏனையவர்களுடன் எந்தவொரு நெருக்கமுமின்றி, தன்னுடைய உலகத்தில் இருத்தல்.
06. மற்றைய பிள்ளைகளுடன் விளையாடுவதை விட, தனிமையில் விளையாடுவதை விரும்புதல்.
07. மீண்டும் மீண்டும் ​ஒரே செயற்பாட்டை மேற்​கொள்ளல்.
08. காரணமின்றி மேற்கொள்ளப்படும் உடல் அசைவுகள். (மீண்டும் மீண்டும் குதித்தல், இரு புறமாக அசைதல், முன்னால் ​வலைந்து, பின்னால் அசைதல்)
09. விளையாட்டுப் பொருள்களை, வரிசையாக அடுக்குதல்.
10. சுற்றும் பொருள்கள் மீது (மின்விசிறி, வாகனங்களின் டயர்கள்) அதிக அவதானம் செலுத்தல்.
11. விளையாட்டுப் பொருள்களுடன், அந்தந்த வகையில் விளையாடாதிருத்தல். (விளையாட்டுக் காரொன்றைச் செலுத்திப் பார்க்காமல், அதை மறுபுறம் புரட்டி, டயர்களைச் சுற்றிப் பார்த்தல்)
12. ஒரே விளையாட்டை, மீண்டும் மீண்டும் விளையாடுதல்.
எதற்காக ஒட்டிசம் ஏற்படுகிறது?

இந்தக் காரணத்தால் தான், குழந்தையொன்று ஒட்டிசத்தால் பாதிக்கப்படுகின்றதென, நிச்சயமாகக் கூறமுடியாது. மரபணு மற்றும் சுற்றுச்சூழல், சமூகச் செயற்பாடுகள், சில குழந்தைகளின் மூளை நரம்புகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதே, இந்தப் பிரச்சினைக்குக் காரணமென நம்பப்படுகின்றது.

சில நுண்ணங்கிகளால் ஏற்படக்கூடிய நோய்கள், இரசாயனப் பொருள்கள் அல்லது விஷப் பொருள்களின் தாக்கத்துக்கு, கர்ப்பிணிக் காலத்தில் தாய் பாதிக்கப்பட்டிருந்தால், பிறக்கும் குழந்தை, ஒட்டிசம் நிலைமைக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையொன்றுக்கு, மேற்கூறப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவற்றில் ஒன்றேனும் இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எப்படியும், ஒரு குழந்தை, ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி, அது குறித்த நிபுணத்துவமிக்க வைத்தியரொருவராலேயே கண்டறிய முடியும்.

ஒட்டிசம் இருந்தால் என்ன செய்வது?

ஒட்டிசத்தை முதலிலேயே கண்டறிந்துகொண்டால், அதற்குரிய சிகிச்சைகளைச் செய்ய முடியும். இதனால், குழந்தை தனது எதிர்காலத்தில் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளிலிருந்து காப்பற்றப்பட்டுவிடும்.
எவ்வாறாயினும், இந்த நோய்க்குத் தேவையான சிகிச்சை, செயற்பாட்டு ரீதியிலான எதிர்வினைகளே ஆகும். அதாவது, பேச்சுப் பயிற்சி, வழிகாட்டல்கள், சமூகச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் என்பனவே, இவ்வாறான குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்றது.

அத்துடன், எப்போதும் இந்தக் குழந்தைகள், அதன் வயதுடைய ஏனைய குழந்தைகளுடன் இருக்க வழிசமைத்துக் கொடுங்கள். ஏனையோருடன் இணைந்துச் செயலாற்ற வழிவிடுங்கள். தொலைக்காட்சி, அலைபேசிப் பாவனைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

– யசோதா ரோஹணசந்திர
சிறுவர் மற்றும் இளம்பருவம்
தொடர்பான உளவியல் நிபுணர்
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை

You might also like

Leave A Reply

Your email address will not be published.