;
Athirady Tamil News

தமிழகத்தில் திராவிட மாடல் அரசு கம்பீரமாக தனது கடமையை செய்து வருகிறது முதல்-அமைச்சர் பேச்சு..!!

0

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.111.80 கோடியில் கட்டப்பட்ட 840 புதிய குடியிருப்புகளின் திறப்பு விழா மற்றும் மறுகட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா சென்னை கொளத்தூர் கவுதமபுரத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து, மறுகட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து ரூ.1 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள், நூலக கட்டிடங்கள் மற்றும் பூங்கா அமைப்பதற்கான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.1.94 கோடி மதிப்பீட்டிலான பணிகளை தொடங்கிவைத்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மக்களும் மகிழ்ச்சி…

அரசும் மகிழ்ச்சி…

அறிஞர் அண்ணா தலைமையில் முதன் முதலில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, சென்னையில் எங்கு பார்த்தாலும் குடிசைகளாகவே இருந்தன. மழை, வெள்ளம், வெயிலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டார்கள். இதனால் ‘ஆஸ்பெஸ்டாஸ் சீட்’ கொண்ட வீடுகளை வழங்கும் திட்டத்தை அண்ணா தொடங்கினார். அண்ணா மறைவுக்கு பிறகு, ஆட்சி பொறுப்பேற்ற கருணாநிதி 1970-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கொண்டுவந்தார். இந்தியாவிலேயே இந்த அமைப்பை முதன் முதலில் கொண்டுவந்தவர் கருணாநிதிதான்.

இன்றைக்கு அதே திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரில் இந்த கட்டிடங்கள் இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. தி.மு.க. ஆட்சியில் நாங்கள் பயனடைகிறோம் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். உங்களது மகிழ்ச்சிக்கு தி.மு.க. அரசு காரணமாக இருக்கிறது என்று எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்தின் கனவு
வீடுகள் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதில் நாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதில் எங்களுக்கு பெருமை. 400 வீடுகள் இருந்த கவுதமபுரத்தில் பழைய வீடுகள் அகற்றப்பட்டு தற்போது 840 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு, அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைக்கு தன்மானம், நாட்டுக்கு இனமானம் ஆகியவற்றை ஊட்டுவதற்காக உருவாகியிருக்கக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. குடிசையை மாற்றி, கட்டிடம் கட்டுவது மட்டும் நோக்கம் இல்லை. நகர்ப்புற மக்களின் வாழ்க்கையும் மேம்பட வேண்டும். வாழ்விடமும் மேம்பட வேண்டும். வாழ்க்கைத்தரமும் மேம்பட வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசுதான் நம்முடைய தி.மு.க. அரசு. அதனால்தான் திராவிட மாடல் அரசு என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

பக்கபலமாக இருக்க வேண்டும்
கலைஞரிடம் மு.க.ஸ்டாலினை பற்றி சொல்லுங்கள் என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, கலைஞர் ஒரே வரியில் “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்று சொன்னார். அந்த உழைப்பு எனக்கு மட்டுமல்ல, என்னோடு இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றுகிறார்கள்.

அதுதான் திராவிட மாடல் அரசு. அப்படிப்பட்ட திராவிட மாடல் அரசு கம்பீரமாக தனது கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு மக்கள் என்றைக்கும் பக்க பலமாக இருக்க வேண்டும். கொளத்தூர் வந்தாலே மகிழ்ச்சி நான் எங்கு சுற்றி கொண்டிருந்தாலும் கொளத்தூர் தொகுதி என்றாலே தானாக ஒரு உற்சாகம் வந்துவிடும். ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். 3 முறை இங்கேதான் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். எனவே கொளத்தூர் என்றாலே எனக்கு மகிழ்ச்சியும், எழுச்சியும் தானாக வந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்த ராவ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹித்தேஸ்குமார் எஸ்.மக்வானா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

‘ஏழையின் சிரிப்பில் கருணாநிதியை காண்போம்’
கொளத்தூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சில மாநிலங்களில் குடிசை பகுதிகளை தார்ப்பாய் போட்டு மறைத்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய மாடல் மறைக்கும் மாடல் இல்லை, திராவிட மாடல். தமிழகத்தில் 219 இடங்களில் ரூ.10 ஆயிரத்து 295 கோடி மதிப்பீட்டில் 94 ஆயிரத்து 557 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பதற்குரிய முயற்சிகள். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்னார். அதற்கு பின்னர் தனது ஆட்சியின்போது ஏழையின் சிரிப்பில் அண்ணாவின் முகத்தை காண்போம் என்று கருணாநிதி சொன்னார். இப்போது நான் சொல்கிறேன், ஏழையின் சிரிப்பில் கருணாநிதியின் முகத்தை காண்போம். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.