;
Athirady Tamil News

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஆம் ஆத்மியை நசுக்க முயற்சிக்கிறது பாஜக: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

0

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்து வரும் ஆதரவை கண்டு பாஜகவால் ஜீரணிக்க முடிவில்லை.

அதனால், டெல்லி அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை பொய்யான ஊழல் வழக்குகளில் சிக்க வைக்க மோடி அரசு முயற்சித்து வருகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று பல தொலைக்காட்சி சேனல்களின் உரிமையாளர்களை பிரதமரின் ஆலோசகர் ஹிரேன் ஜோஷி எச்சரித்துள்ளார். குஜராத்தில் நாங்கள் எங்கள் அரசை உறுதியாக அமைக்கப் போகிறோம்.

ஆபரேஷன் தாமரையின் கீழ் மற்ற கட்சிகளின் அரசாங்கங்களை கவிழ்க்க பாஜக இதுவரை நாடு முழுவதும் 285 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளது. அதற்காக ரூ 8,000 கோடி வரை செலவழித்துள்ளது. நீங்கள் (பாஜக) ஊழல் செய்கிறீர்கள், கொள்ளையடித்த பணத்தில் எம்எல்ஏக்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குகிறீர்கள். ஆனாலும், நீங்கள் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறீர்கள்.

மக்களுக்கு இலவச வசதிகளை எவ்வாறு வழங்குவது என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள்(பாஜக) அதற்கு எதிராக இருக்கின்றனர். மக்களுக்கு இலவச வசதிகளை வழங்க முடியும், அரசு நேர்மையாக இருந்தால் அதற்கான நிதிக்கு பஞ்சம் இருக்காது. ஒரு நேர்மையற்ற நபர், ஒரு ஊழல்வாதி மற்றும் ஒரு துரோகி மட்டுமே இலவசங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறுவார்கள்.

இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் என்று எந்த அரசியல்வாதியும் கூறினால், அவரது எண்ணம் தவறானது. மக்களை கொள்ளையடித்து நண்பர்களின் கடனை தள்ளுபடி செய்ய நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.