;
Athirady Tamil News

இந்திய பெரும் பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி..!!

0

நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியை முந்தி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ஆகும். சமீபத்தில் குறுகிய காலத்துக்கு உலக அளவில் 2-வது பெரும் பணக்காரராக விளங்கிய அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 2 மடங்குக்கும் அதிகமாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் தினமும் அவரது கணக்கில் ரூ.1600 கோடி சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அதானியைவிட ரூ.2 லட்சம் கோடி அதிகம் பெற்று முகேஷ் அம்பானி முன்னணியில் இருந்தார். தற்போது அவரை முந்தியிருக்கும் கவுதம் அதானி, ரூ.3 லட்சம் கோடி அதிகமாக பெற்றிருக்கிறார். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், உலகிலேயே பெரிய தடுப்புமருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் சைரஸ் பூனாவாலா 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 400 கோடி ஆகும்.

மொத்தம் ஆயிரத்து 103 பேர் அடங்கிய இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு 149 பேர் புதிதாக இணைந்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 185 பேர் இடம்பிடித்திருக்கிறார்கள். டெல்லி பெரும் பணக்காரர்களில், ரூ.1.86 லட்சம் கோடியுடன் எச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். தலைநகர பெரும் பணக்காரர்களில் 12 பேர் பெண்கள். இந்த பட்டியல் குறித்து ஹுரன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை ஆய்வாளருமான அனாஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், ‘உக்ரைன் போர், பணவீக்கம் போன்ற நெருக்கடிகளையும் தாண்டி, நடப்பு ஆண்டில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்கள் அனைவரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடி ஆகும்’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.