;
Athirady Tamil News

அசோக் கெலாட் களத்தில் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டி..!!

0

நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும் (வயது 71), முன்னாள் மத்திய மந்திரியும் மக்களவை எம்.பி.யுமான சசி தரூருக்கும் (66) இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற காங்கிரசின் புதிய கொள்கையின்படி அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் இதையொட்டி மேலிடத்துக்கு நெருக்கடி தந்தனர். இதில் அசோக் கெலாட் மீது சோனியா கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் அசோக் கெலாட் டெல்லிக்கு சென்றார். நேற்று அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். ராஜஸ்தானில் தனது ஆதரவாளர்கள் கட்சி மேலிடத்துக்கு நிர்ப்பந்தம் அளித்து நெருக்கடியை ஏற்படுத்திய விவகாரத்துக்கு பொறுப்பேற்று அவர் சோனியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அசோக் கெலாட் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சோனியா காந்தியை சந்தித்தேன். ராஜஸ்தான் நெருக்கடிக்கு தார்மீகப்பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. நான் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியில் தொடருவேனா என கேட்கிறீர்கள். இது குறித்து சோனியா முடிவு எடுப்பார்” என குறிப்பிட்டார்.

திக்விஜய் சிங் போட்டி
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில் புதிய திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய்சிங் (75), தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து வேட்பு மனுவை பெற்றார். அவர் தனது வேட்பு மனுவை இன்று (30-ந் தேதி ) தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கலுக்கு இன்றுதான் கடைசி நாள் ஆகும்.

சசி தரூருடன் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரை திக் விஜய் சிங் நேற்று சந்தித்துப் பேசினார். இதையொட்டி சசி தரூர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “திக் விஜய் சிங் மதியம் என்னை சந்தித்தார். அவர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். நாங்கள் இருவரும் போட்டியிடுவது எதிரிகளுக்கு இடையேயான மோதல் அல்ல. சகாக்கள் இடையேயான நட்பு ரீதியிலான போட்டிதான். இதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் விரும்புவது, யார் வெற்றி பெற்றாலும், இந்தியாவில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்” என கூறி உள்ளார். சசி தரூர் எம்.பி.யும் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்வார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங்குக்கும், சசி தரூருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.