;
Athirady Tamil News

குருந்தூர் மலை விவகாரம்; நீதிமன்றில் சுமந்திரன்!!

0

குருந்தூர் மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க முயற்சிக்கின்றமை மற்றும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடர்ந்து பௌத்த கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து கடந்த 21.09.2022அன்று குமுழமுனை மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக துரைராசா ரவிகரன், இ.மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை விசாரணைக்கு அழைத்து கைது செய்து, பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

லோகேஸ்வரன் தொடர்பில் அடையாள அணிவகுப் பொன்றை கோரிய நிலையில், இம்மாதம் 29ஆம் திகதிகதிவரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

அந்தவகையில் 29.09.2022 குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் லோகேஸ்வரனை சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற தீய நோக்குடன் பொலிஸார் அடையாள அணிவகுப்பை உபயோகித்திருக்கின்றார்கள் என லோகேஸ்வரன் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் சுட்டிக்காட்டி கடுமையான வாதத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்று லோகேஸ்வரனை பிணையில் விடுதலை செய்ததுடன், இந்த வழக்கானது எதிர்வரும் 02.02.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை விவகாரம் சம்பந்தமாக தொல்பொருட் திணைக்களத்தினுடைய செயற்பாடுகளுக்கு எதிராக கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை மையமாகவைத்து முதலிலே ரவிகரன், மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பிணையிலே விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.

அதன் பின்னர் லோகேஸ்வரனைக் கைதுசெய்து, அவரைப் பிணையிலே செல்ல அனுமதிக்காத வகையிலே, சூழ்ச்சியாக ஒரு அடையாள அணிவகுப்புத் தேவைஎன்ற ஒரு போலியான காரணத்தினைச் சொல்லி அவரை ஒருவாரகாலம் விளக்கமறியலில் வைக்கச் செய்திருந்தார்கள். 29.09.2022இன்று அந்த அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.

அந்த அடையாள அணிவகுப்பு வெறும் நாடகமாக நடைபெற்றதென நான் நீதிமன்றிலேயே சொல்லியிருக்கின்றேன். அதற்கான ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கிறோம்.

லோகேஸ்வரன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி. மக்களுக்கு நன்றாகப் பரீட்சயமானவர். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட விடயம் பத்திரிக்கைகளிலே வெளிவந்திருக்கின்றது. அப்படியானதொரு சூழலிலே அடையள அணிவகுப்பு வைப்பதென்பது முற்றிலும் தேவையற்றதொருவிடயம்.

ஆனாலும் அதனை உபயோகித்து அவரை ஒருவாரகாலத்திற்காகவது சிறைக்குள் வைத்திருக்கவேண்டும் என்ற தீய நோக்கத்துடன் பொலிஸார் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் நீதிமன்றிலே தெரியப்படுத்திருக்கின்றேன்.

இந்த அரசாங்கத்திற்கு அல்லது, அரசாங்கத் திணைக்களங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்ற அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கின்ற உரிமை சகல பிரஜைகளுக்கும் இருக்கின்றது. அது உரிமை மாத்திரமல்ல அது சகலருடைய உரிமையும்கூட என்று உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல சொல்லியிருக்கின்றன. அவற்றை மேற்கோள்காட்டி நீதிமன்றிலே சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றது.

தொல்லியல் திணைக்களம் இந்தநாட்டிலே இருக்கிற மிக மோசமான இனவாதத் திணைக்களம்.

ஆகவே அவர்களுடைய செயற்பாடுகளுக்குக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

என்னவிதமான இடையூறுகள் ஏற்படுத்தினாலும் இந்ந அநீதிக்கு எதிரான போராட்டம் ஒருபோது நிறுத்தப்படமாட்டாது – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.